A.P.Mathan / 2010 ஒக்டோபர் 29 , பி.ப. 04:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

வடபகுதியில் பிரசித்தி பெற்ற கடற்கரை சுற்றுலாத்தலமான காரைநகர் கசூரினா கடற்பகுதிக்குச் செல்லும் வீதி புதிதாக அமைக்கப்பட்ட நிலையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் சந்திரசிறி ஆகியோர் அவ்வீதியினை உத்தியோகபூர்வமாகத் இன்று திறந்து வைத்தனர்.
கொங்கிரீட் கலவையினால் புதிதாக அமைக்கப்பட்ட இவ்வீதியானது 500 மீற்றர் நீளமும் 8 மீற்றர் அகலமும் கொண்டது. உத்தியோகபூர்வமாக வீதியை திறந்து வைத்தபின்னர் அமைச்சர், ஆளுநர், பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அவ்வீதி வழியாகவே கசூரினா கடற்கரை வரை நடந்து சென்றதுடன் அங்கு இடம்பெற்ற பொதுக்கூட்டத்திலும் பங்குபற்றினார்கள்.
வடமாகாண உட்கட்டமைப்பின் செயலாளர் ராஜேந்திரனின் வரவேற்புரையுடன் ஆரம்பமான இப்பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஆளுநர், ஒருவருடத்திற்கு முன்னர் இப்பகுதிக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் தான் விஜயம் மேற்கொண்டபோது இவ்வீதி நிர்மாணம் குறித்து திட்டமிட்டதாகவும் அதனடிப்படையில் 200 லட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பிரதேச மக்களின் பங்களிப்புடனும் இவ்வீதி அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா... 'எமது மாவட்டத்தின் மக்களுக்காகவும் சுற்றுலாப் பயணிகளின் நன்மை கருதியும் இவ்வீதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது. யாழ்.மாவட்டத்தில் கடற்கரை சுற்றுலா மையங்கள் என்ற வகையில் காரைநகர் கசூரினா மற்றும் வேலணை சாட்டி ஆகிய கடற்கரைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அந்தவகையில் இவ்வீதி புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ளது. நீண்டகாலமாக வடபகுதியின் பிரதான சுற்றுலாத் தலமாக விளங்கிய கசூரினா கடற்கரையானது யுத்தம் காரணமாக சரியாகப் பயன்படுத்தப்படவில்லை. ஆயினும் எமது பிரதேச அபிவிருத்தியில் அக்கறை கொண்டுள்ள ஆளுநருடன் இணைந்து பல அபிவிருத்தி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். இதற்கு உரிய அமைதியான சூழலை உருவாக்கித் தந்தமைக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு எமது மக்களின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றேன்...' எனக்குறிப்பிட்டார். மேலும், இத்திட்டம் உருவாக காரணகர்த்தாவாக இருந்த காலஞ்சென்ற காரைநகர் பிரதேச சபைச் செயலாளர் சிவஞானம் அவர்களையும் இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூறுவதாக தெரிவித்த அமைச்சரவர்கள் இவ்வீதி அமைப்பில் கூடிய கவனம் செலுத்திய வடமாகாண உட்கட்டமைப்பின் செயலாளர் ராஜேந்திரனுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
இன்றைய நிகழ்வில் யாழ்.மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா, ஆளுநரின் செயலாளர் ரங்கராஜன், பிராந்திய உள்ளூராட்சி ஆணையாளர் திருமதி சிவலிங்கம், காரைநகர் கடற்படைக் கட்டளை அதிகாரி கப்டன் ஏ.யு.டி.சில்வா, தலைமை பொலிஸ் பரிசோதகர் அபேரட்ண, வீதி அபிவிருத்தி அதிகார சபை பொறியியலாளர் சுதாகர், வீதி அபிவிருத்தி திணைக்கள பொறியியலாளர் சிவநேசன், காரைநகர் பிரதேச சபைச் செயலாளர் லோகநாதன், காரைநகர் ஈபிடிபி பொறுப்பாளர் ரஜனி உட்பட திணைக்களங்களின் அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்களும் பெருமளவில் கலந்துகொண்டனர்.
பொதுக்கூட்டத்தின் இறுதியில் கசூரினா கடற்கரைப் பகுதியில் அங்காடி வியாபாரம் மேற்கொள்ளும் சிறுவியாபாரிகளுடன் சந்திப்பினை மேற்கொண்ட அமைச்சரும் ஆளுநரும் அவர்களின் குறைகள் மற்றும் தேவைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்காலத்தில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வண்ணம் அழகிய நிழற்குடைகளுடன் கூடிய கடைகள் அமைத்துத்தரப்படும் என அமைச்சரும் ஆளுநரும் சிறு வியாபாரிகளுக்கு உறுதியளித்தமை குறிப்பிடத்தக்கது.



52 minute ago
6 hours ago
6 hours ago
08 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
6 hours ago
6 hours ago
08 Nov 2025