2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

ஆனையிறவு, தட்டுவன்கொட்டி மக்கள் குடிநீர், போக்குவரத்து இன்றி சிரமம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 10 , மு.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹேமந்த்)

ஆனையிறவு, தட்டுவன்கொட்டிப் பகுதி மக்கள் குடிநீர் மற்றும் போக்குவரத்துப் பிரச்சினைகளால் மிகுந்த சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

கடந்த மாதம் மீள்குடியேற்றப்பட்ட இப்பகுதி மக்களுக்கான குடிநீர் கிளிநொச்சியிலிருந்தே வழங்கப்பட்டு வந்தது.

தற்போது பெய்யும் பருவகால மழையால்    ஏ - 9 வீதியிலிருந்து தட்டுவன்கொட்டிக்குச் செல்லும் வீதி சேதமடைந்துள்ள நிலையில் மக்களுக்கான போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், வெளியிலிருந்து குடிநீர் எடுத்துச் செல்வதும் தடைப்பட்டுள்ளது.

இதனால்,  ஆனையிறவு, தட்டுவன்கொட்டிப் பகுதி மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தட்டுவன்கொட்டி கிராம அலுவலர் பிரிவில் தற்போது 73 குடும்பங்கள் மீள்குடியேறியுள்ளன. மேலும் ஒரு தொகை குடும்பங்கள் விரைவில் மீள்குடியேறவிருப்பதாக அப்பகுதி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவரும் தட்டுவன்கொட்டிப் பிரதேச கடற்றொழிலாளர் சங்கத்தின் தவைருமான  தியாகராசா தெரிவித்தார்.
 
முன்னர் இப்பகுதிக்கான குடிநீர் விநியோகம் இயக்கச்சிப் பகுதியில் இருந்து நிலத்தடிக் கீழ் குழாய் மூலம் வழங்கப்பட்டது. தற்போது குறிப்பிட்ட நீர் வழங்கும் கிணறு படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பிட்ட பாதையைச் சீர்ப்படுத்தி மக்களின் போக்குவரத்துக்கு உதவும் படியும் குடிநீர் விநியோகத்தைச் சீர்செய்து தரும்படியும் தொடர்ந்து குடிநீரைப் பெறுவதற்கு இயக்கச்சியில் அமைந்திருக்கும் நீர்வழங்கும் கிணற்றின் பாவனைக்கான அனுமதியைப் பெற்றுத்தரும்படியும் பிரதேச செயலர், அரசாங்க அதிபர், நாடாளுமன்ற உறுப்பினர், பிரதேச இராணுவத் தளபதி, வடமாகாண ஆளுநர் ஆகியோரைக் கேட்டிருப்பதாகவும் திரு. தியாகராசா தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--