2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

மயக்கமருந்து கொடுத்து காசு, நகைகளைத் திருடியவருக்கு விளக்கமறியல்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுமித்தி தங்கராசா
 
மயக்கமருந்து கலந்த குடிபானத்தினை ஒருவருக்கு கொடுத்து அவருடைய பணம், நகைகளை திருடிய வயோதிபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி இன்று (06) உத்தரவிட்டுள்ளதாக யாழ். குற்றத்தடுப்புப் பொலிஸ் பொறுப்பதிகாரி டபிள்யு.ஏ.எல்.விக்கிரமராட்சி தெரிவித்துள்ளார்.
 
இச்சம்பவம் நேற்று முன்தினம் (04) யாழ். முனியப்பர் ஆலயத்திற்கு முன்னால் இடம்பெற்றுள்ளது.
 
யாழ். முனியப்பர் ஆலயப்பகுதியில் வெளியிடங்களிலிருந்து வருபவர்கள் ஓய்வெடுத்துச் செல்வது வழமை.
 
அந்தவகையில் கடந்த புதன்கிழமை (04) அவ்விடத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த வவுனியாவைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு அருகில் உரையாடியவாறு அமர்ந்திருந்த வயோதிபர் மற்றும் இளைஞர் குளிர்பானம் ஒன்றை மேற்படி வவுனியா நபருக்கு கொடுத்துள்ளனர்.
 
குளிர்பானத்தினை குடித்த நபர் மயக்கமடையவே, குளிர்பானம் குடிக்கக் கொடுத்த இருவரும் மயக்கமடைந்திருந்த நபரின் ரூபா 40 ஆயிரம் பணம் மற்றும் நகைகளை அபகரித்துச் சென்றனர்.
 
மயக்கம் தெளிந்த வவுனியா வாசி, இது தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார். முறைப்பாட்டின் பிரகாரம் யாழ். நகரில் வியாபாரம் மேற்கொள்ளும் மட்டக்களப்பு, ஏறாவூரினைச் சேர்ந்த வயோதிபர் ஒருவரை பொலிஸார் நேற்று முன்தினம் (04) கைது செய்தனர்.
 
தொடர்ந்து, குறிப்பிட்ட இளைஞரை தேடிய போதும், அவர் தலைமறைவாகியிருந்தார். இந்நிலையில் பொலிஸார் மேற்படி வயோதிபரை யாழ். நீதிவான் நீதிமன்றத்தில் இன்று (06) ஆஜர்படுத்தினர்.
 
நீதிபதி, மேற்படி நபரை எதிர்வரும் 19ஆம் திகதி வரையும் விளக்கமறியலில் வைக்குமாறும், தப்பியோடிய இளைஞனை பிடிக்குமாறும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--