2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

'சொகுசாக வாழ்பவர்களே யுத்தத்தை விரும்புகின்றனர்'

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


-கி.பகவான், வி.விஜயவாசகன்


வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்பவர்களே யுத்தத்தை விரும்புவதுடன்,  அதற்காக இங்குள்ள இளைஞர், யுவதிகளை பலிக்கடா ஆக்குவதாகவும் கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.கே.எதிரிசிங்க தெரிவித்தார்.

கொடிகாமம் வடக்கு கிராம அலுவலர் பிரிவு சிவில் பாதுகாப்புக்குழுக் கூட்டம் கிராம அலுவலர் அலுவலகத்தில் வியாழக்கிழமை (10) நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்.

'30 வருடங்களுக்கு முன்னர் சகோதரர்களாக ஒன்றுபட்டு நாட்டில் சுதந்திரமாகவும் ஒற்றுமையாகவும் வாழ்ந்த தமிழ், சிங்கள, முஸ்லிம் குடும்பங்கள் கொடிய யுத்தத்தினால்  பிரிந்ததுடன், இன ரீதியாகவும் பிரிக்கப்பட்டோம்.

யுத்தத்தில் எவரும் வெல்லவில்லை. மாறாக நாட்டில் வாழ்ந்த அனைவரும் பல்வேறு வகைகளில் பாதிக்கப்பட்டோம். யுத்தத்தினால் இரு தரப்பிலும் பலர்  உயிரை இழந்தனர். தமிழ் மக்களாகிய நீங்கள் பெரும் துயரங்களை அனுபவித்தீர்கள். 

வெளிநாடுகளில் சொசுகு வாழ்க்கை வாழ்ந்தவர்களே யுத்தத்தினால் பலன் கண்டனர். நாட்டில் இன்றும் யுத்தத்தை அவர்களே விரும்புகின்றனர். தாங்கள் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்காக இங்குள்ள அப்பாவி இளைஞர், யுவதிகளை பலிக்கடாவாக்க முயற்சிக்கின்றனர். இவ்வாறானவர்களின் தவறான நடவடிக்கைகளில் உங்கள் பிள்ளைகளை ஈடுபட அனுமதிக்க வேண்டாம்.

தற்போது  சட்டவிரோதச் செயற்பாடுகள் பரவலாக இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகளை களைய பொதுமக்களின் பங்களிப்பு பொலிஸாருக்கு அவசியமாகவுள்ளது.  கசிப்பு உற்பத்தி, வீடுகளுக்குள் புகுந்து திருடுதல், சில இடங்களில் குழு மோதல்கள் என பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுகின்றன. இவற்றை கட்டுப்படுத்த பொலிஸார் தயாராகவுள்ளனர். இருப்பினும்,  பொதுமக்கள் போதிய ஒத்துழைப்பு வழங்காமையால் எம்மால்  சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவதில்லை.

மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் தெரியப்படுத்தக்கூடிய வகையில், ஒவ்வொரு பிரிவிலும் உதவிப் பொலிஸ் பரிசோதகரின் மேற்பார்வையில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், ஒவ்வொரு பிரிவிலும் 25 பேர் கொண்ட சிவில் பாதுகாப்புக் குழுவினர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் பொலிஸாருக்கு உடனுக்குடன் தகவல்களை வழங்குவதற்காக  கிராம அலுவலர், சமுர்த்தி  அலுவலர், பொருளாதார அபிவிருத்தி அலுவலர் அலுவலகங்களிலும் அந்தந்தப் பிரிவுகளுக்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ள பொலிஸ் உத்தியோகத்தர்களினதும் உதவிப் பரிசோதகரினதும் தொலைபேசி இலக்கங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன' என்றார்.

கூட்டத்தில் கலந்து கொண்ட முன்பள்ளி சிறார்களுக்கும் தரம் 1 தொடக்கம் தரம் 13 வரையான மாணவர்களுக்கு  கொடிகாமம் வணிகர் மன்றம் மற்றும் பொலிஸார் ஆகியோரினால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X