2025 செப்டெம்பர் 17, புதன்கிழமை

த.தே.கூ.வில் இணைந்தவர்கள் சுகபோகம் அனுபவிக்கின்றனர்: ஈ.பி.டி.பி

Menaka Mookandi   / 2014 ஜூலை 03 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த காலத்தில் மரண அச்சுறுத்தல்கள் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்தவர்கள் இன்று சுகபோக சுயநல அரசியலை அனுபவிப்பதனால் அதனை கைவிட முடியாது திண்டாடுகின்றனர் என ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ்.மாவட்;ட அமைப்பாளர் கே.வி.குகேந்திரன் நேற்று புதன்கிழமை (02) தெரிவித்தார்.

அரியாலை கிழக்கு பெரிய தோட்டத்தில் வாழும் 28 குடும்பங்களின் வாழ்வாதார பிரச்சினைகள் தொடர்பாக, அந்த மக்களுடன் நேற்று புதன்கிழமை (02) கலந்துரையாடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது,

தமிழ்மக்கள்  தற்போது இரண்டு பிச்சினைகளுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். ஒன்று அபிவிருத்தி சார்ந்தது மற்றயது அரசியல் ரீதியான பிரச்சினை.

தமிழ் மக்களுக்காக மேற்கொள்ளப்படவேண்டிய அபிவிருத்தி பணிகளை யார் தடுத்தாலும் டக்ளஸ் தேவானந்தா, அரசுடன் போராடி அனைத்து உதவிகளையும் பெற்றுக்கொடுத்து வருகின்றார்.

ஆனால் உங்களால் அரசியல் பலத்தை பெற்றவர்கள் (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) இன்று உங்களை திரும்பிப் பார்க்காதிருப்பதை காணும்போது வேதனையாகவுள்ளது.

இன்று மக்களது வாழ்வாதாரப் பிரச்சினைகளை மையமாகக் கொண்டே போலி தேசியவாதிகள் தமது அரசியலை நடத்துகின்றனர். இவர்கள் தமிழர்களது அரசியல் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதை ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.

1977ஆம் ஆண்டிலிருந்து தமிழ்க் கட்சிகள் அரசியல் ரீதியாக போடும் கோசங்களூடாக அழிவை மட்டும்தான் நாங்கள் பெற்றுக்கொண்டுள்ளோம். வெறும் கோசங்கள் வாழ்வியலுக்கு எதனையும் பெற்றுத்தரப்போவதில்லை என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மாகாண சபைக்கு நிதியை பெற்றுக்கொள்ளக்கூடிய சட்டங்களைக்கூட உருவாக்காத இந்த மாகாணசபை, எப்படி உங்களுக்கான வாழ்வாதார உறுதிமொழிகளை நிறைவேற்றித் தருவார்கள்.

மக்களின் சுதந்திரமான பேச்சுக்களின் ஊடாகத்தான் நாங்கள் அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகின்றோம். எமது அரசியல் பிரச்சினைகளை தீர்க்கவேண்டியது இலங்கை அரசுதான்.

இந்நிலையில் அரசுடன் முரண்பட்டுக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் கிடைக்கப்போவதில்லை. அரசுடன் யதார்த்தமான முறையில் பேசுவதன் மூலம்தான் தமிழ் மக்களுக்கான இலக்கை அடையமுடியும்.

எமது மாகாணத்தைப் பொருத்தவரை ஒட்டுமொத்த அரசியல் பலமும் மாகாண சபை ஆட்சியாளர்களிடமே இருக்கின்றது. அந்த மாகாண சபையை கபடப் பேச்சின் மூலம் கைப்பற்றியவர்கள், தற்போது மௌனமாக இருக்கின்றனர். இதை தட்டிக்கேட்காது இருப்பது மக்களாகிய உங்களது தவறாகும்.

யுத்தத்தில் இறந்த அனைத்து உயிர்களும் எமது தமிழ் மக்களினதும் போராளிகளினதும் தான். தற்போது சர்வதேச விசாரணை ஒருபுறம் நடக்கவுள்ளது. ஆனால் இந்த விசாரணை என்பது  தமிழர்களுக்கான நிரந்தர தீர்வுக்கு எந்த வகையிலும் பயனுள்ளதாக இருக்கப்போவதில்லை என்பதையும் தமிழ்மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

வறுமையில் வாழும் மக்களது வாழ்வாதாரங்களை மேம்படுத்துவதே அமைச்சரின் குறிக்கோளாக இருக்கின்றது. அதற்காகத் தான் எமது கட்சி பாடுபட்டுக் கொண்டிருக்கின்றது.

வாழ்வியலை இழந்து தவிக்கும் மக்களது வாழ்வாதாரத்தை வளப்படுத்தும் நோக்குடன் எத்தனையோ பல அபிவிருத்தித்திட்டங்களை நாம் பெற்றுக் கொடுத்தும் வாழ்வாதாரம் குறைந்த பகுதியாக இப்பகுதி இருப்பதைக் கண்டு மனம் வேதனை அடைகிறது.

நிச்சயமாக உங்களுக்கான வாழ்வாதார உதவிகள் அனைத்தையும் எமது செயலாளர் நாயகம் கே.என்.டக்ளஸ் தேவானந்தா ஊடாக பெற்றுத்தர நட்டவடிக்கை எடுக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X