2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

என்னை நம்புங்கள்; நான் உங்களை வழிநடத்தி செல்வேன்: யாழில் ஜனாதிபதி

Super User   / 2011 ஜனவரி 17 , மு.ப. 08:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)

"வட பகுதி மக்கள் 30 வருட காலமாக பட்ட கஷ்டங்கள் இனிமேலும் பட வேண்டிய அவசியமில்லை. என்னை நம்புங்கள் நான் உங்களை வழிநடத்திச் செல்வேன். மீண்டும் உங்களுக்கோர் வளமான வாழ்வை கொடுப்பதற்காக நான் மிகவும் பாடுபடுகின்றேன்" -இவ்வாறு ,  யாழ்ப்பாணத்தில் இன்று நடைபெற்ற சூரிய பொங்கல் விழாவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரதம அதிதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் கூறினார்.

இவ்விழாவில் ஜனாதிபதி முற்றுமுழுதாக தமிழில் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், "வடக்கின் வசந்தம் மூலம் வட பகுதியை நான் அபிவிருத்தி செய்துகொண்டு செல்கின்றேன். வட பகுதி மக்கள்  தேசிய இனத்தின் ஒரு சொத்து. நாம் எமது மக்களை கைவிட மாட்டோம். ஏனைய மாகாணங்கள் மாவட்டங்களைப் போல் முன்னோக்கிய பாதையில் வட பகுதியை கொண்டு செல்வேன். கல்வி, பொருளாதாரம், அபிவிருத்தி, என்ற முன்னேற்றகரமான பாதையை நான் வடக்கு மக்களுக்கு காட்டுவேன்.

இனிமேல் இந்த நாட்டில் பயங்கரவாதம் உருவாக நான் ஒருபோதும் இடம்கொடுக்க மாட்டேன். யாழ்ப்பாணத்திலும் தென்பகுதியிலும் உருவெடுத்திருக்கும். பாதாள உலககக் குழுக்களை இந்த நாட்டிலிருந்து அகற்றிவிடுவேன்.

அப்பாவி மக்களை பலிகொடுக்க நான்ஒருபோதும் விட மாட்டேன். வடக்கில் நாம் செய்யும் அபிவிருத்தி திட்டங்கைள தீய சக்திகள் குழப்ப முயற்சிக்கின்றன.  வடபகுதியில் நான் மேற்கொள்ளும் அபிவிருத்தியை பற்றி பிழையான தகவல்களை சர்வதேசத்திற்கு கொடுக்கிறார்கள். இதனால் எமது பணி முழுமையடையாமல் இருக்கிறது.

நாட்டை அபிவிருத்தி செய்ய எம்மிடம் பணம் இல்லை. நாம் உலக நாடுகளிலிருந்து கடனாகப்பெற்று எமது நாட்டை நாம் அபிவிருத்தி செய்துவருகிறோம். இந்தகடனை திருப்பிச் செலுத்த வேண்டியவர்கள் எமது எதிர்கால பிள்ளைகள்.

எங்களுக்கு ஒரு பொறுப்பிருக்கிறது. இந்த நாட்டின் தலைவர்கள் எமதது மக்களை சரியாக நடத்த வேண்டும். குறுகிய அரசியல் லாபத்திற்காக இந்த மக்களைபிரிக்க வேண்டாம். இன மத பேதங்களைக் கடந்து, நாம் ஒரு தேசிய கொடியின்கீழ் ஒன்றிணைவோம்" என்றார்.

இவ்விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, புத்த சாசன பிரதியமைச்சர். ஏ.டி.எஸ். குணவர்தன, வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ. சந்திரசிறி, ஐ.தேக. யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஜ்வரன், ஈ.பி.டிபி. நாடாளுமன்ற உறுப்பினர்களான மு.சந்திரகுமார், சில்வஸ்டர் அலன்ரின், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், யாழ் நகர மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா, த.தே.கூ.ட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, சர்வமத குருமார்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் அதி விசேட சித்திகளைப் பெற்று பல்கலைக்கழத்திற்கு தெரிவானவர்களில் 100  பேருக்கு  மடிக் கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அவர்களில் 10 பேருக்கான மடிக் கணினிகளை இவ்விழாவில் ஜனாதிபதி வழங்கினார்.  யாழ் மாவட்டத்திலுள்ள 34 இந்துக்கோயில்களுக்கு ஒரு லட்சம் ரூபா வீதம் வழங்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .