2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

ஆர்பிகோ சுப்பர் சென்டரின் புதிய கிளை வத்தளையில்

Super User   / 2010 டிசெம்பர் 21 , பி.ப. 08:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கையின் முன்னணி சுப்பர் மார்க்கெட் தொடரான ஆர்பிகோ சுப்பர் சென்டரின் புதிய காட்சியறை வத்தளையில் பிரம்மாண்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய காட்சியறை 50000 சதுர அடி பரப்பளவில் 45000க்கும் அதிகமான பொருட்களை கொண்டு அமைந்துள்ளது. 'தினமும் பசுமையான சிந்தனைகள்' எனும் சந்தைப்படுத்தல் தொனிப்பொருளில் அண்மையில் மீள அறிமுகம் செய்யப்பட்ட ஆர்பிகோ சுப்பர் சென்டரின் செயற்பாடுகள் சூழல் பாதுகாப்பான நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் வழங்கி செயற்பட்டு வருகிறது.

புதிய ஆர்பிகோ சுப்பர் சென்டர் கிளையில் பலசரக்கு, பழங்கள், காய்கறிகள், மருந்துவகைகள், வீட்டுப்பாவனைப் பொருட்கள், லினென், இலத்திரனியல் பொருட்கள், விளையாட்டுப் பொருட்கள், சிறுவர் பொருட்கள், அன்பளிப்பு பொருட்கள், தளபாடங்கள், ஆடைகள், இரும்பு பொருட்கள் மற்றும் மேலும் பல பொருட்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இவை அனைத்தும் ஒரே தளத்தில் அமைந்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு எந்த சிரமமும் இன்றி இலகுவாக புதிய அனுபவத்துடன் தமக்கு தேவையான அனைத்து பொருட்களையும் ஒரே கூரையின் கீழ் கொள்வனவு செய்ய முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது. வேலைப்பளு நிறைந்த நகரங்களில் ஒன்றான வத்தளையில், வாகனம் நிறுத்தக்கூடிய வசதிகளுடனும், சிறுவர் விளையாட்டரங்குடனும், சிற்றுண்டிச்சாலை ஒன்றையும் காட்சியறை வளாகத்தினுள் கொண்டுள்ளது.

றிச்சர்ட் பீரிஸ் டிஸ்ரிபியுட்டர் லிமிட்டெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அன்ரியு டல்பி கருத்து தெரிவிக்கையில், 'வர்த்தக நடவடிக்கைகளை முன்னெடுக்க இது ஒரு சிறந்த காலப்பகுதியாகும். இலங்கையில் தற்போது நிலவும் சமாதான சூழ்நிலை வாடிக்கையாளர்களிடையே பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சாதகமான சூழலை பயன்படுத்தி ஆர்பிகோ தனது கிளையை நாடு பூராகவும் நிறுவ திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு அங்கமாகவே சூழல் பாதுகாப்பான கிளையை வத்தளையில் நிறுவ முன்வந்தது. இங்கு வாடிக்கையாளர்கள் புதிய சொப்பிங் அனுபவத்தை பெற்றுக் கொள்ள முடியும்.

பொறுப்புள்ள நிறுவனம் மற்றும் வியாபாரிகள் எனும் வகையில் சூழல் பாதுகாப்பான நடவடிக்கைகளை முன்னெடுப்பது எம் ஒவ்வொருவரினதும் முக்கிய பொறுப்பாகும். இதன் ஒரு அங்கமாக பிளாஸ்டிக் பொருட்களின் பாவனையை நாம் பெரிதும் குறைத்துள்ளோம். இதற்காக வாடிக்கையாளர்களுக்கு பச்சை புள்ளிகள் எனும் பொருட்களுக்கான விலைக் கழிவு வழங்கும் நடைமுறை ஒன்றை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம். நாம் வழங்கியுள்ள பொதியை பொருட்கொள்வனவின் போது சமர்ப்பித்து பிளாஸ்டிக் பைகளின் பாவனையை தவிர்ப்பதன் மூலம் இந்த புள்ளிகளை வாடிக்கையாளர் சேகரித்துக்கொள்ள முடியும். எதிர் காலத்தில் கொள்வனவில் ஈடுபடும்போது இந்த புள்ளிகளை சமர்ப்பித்து விலைக்கழிவை பெற்றுக் கொள்ள முடியும்' என்றார்.

மேலும் வத்தளை ஆர்பிகோ சுப்பர் சென்டரில் செயற்படுத்தப்பட்டுள்ள மின்வழங்கல் முறையானது முற்றிலும் மின் பாவனை சேமிப்பு முறையில் அமைந்துள்ளது. 'பிரிஸ்மட்டிக் லைட்டிங்' எனும் முறையில் சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் பெருமளவில் பெற்றுக்கொள்ளும் முறை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண மின்சாரப் பாவனை பெருமளவில் குறைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த சுப்பர் சென்டரில் மழை நீர் சேகரிப்பு திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. கூரைப்பகுதியில் மழை மூலம் சேகரிக்கப்படும் நீர், தூய்மையாக்கப்பட்டு, தோட்டப் பராமரிப்பு தேவைகளுக்கும், மலசல கூட பாவனைக்கும் உபயோகிக்கப்படவுள்ளது. இதன் மூலம் தேசிய நீர் வழங்கல் சபையினால் விநியோகிக்கப்படும் நீரின் அளவு குறைக்கப்படுகிறது.
குப்பைகளை பசளைகளாக மாற்றும் திட்டமொன்றும் இந்த சுப்பர் சென்டரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சேகரிக்கப்படும் குப்பைகள் தோட்ட பாவனைக்கான பசளைகளாக மாற்றப்படுவதால் பெருமளவு சூழல் மாசடைதல் தவிர்க்கப்படுகிறது.

ஆர்பிகோ சுப்பர் சென்டரின் சந்தைப்படுத்தல் அதிகாரி அவந்தி டி சொய்சா கருத்து தெரிவிக்கையில், 'வாடிக்கையாளர்களின் தேவையை அறிந்து, மீள உபயோகிக்கக்கூடிய கவர்ச்சிகரமான பைகளை சொப்பிங்கிற்காக நாம் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். வாடிக்கையாளர்கள் கடதாசி பைகளை கொள்வனவு செய்யக் கூடிய வாய்ப்பையும் நாம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். நாம் முன்னெடுக்கும் இந்த சூழல் பாதுகர்ப்பு திட்டத்தில் எமது வாடிக்கையாளர்களும் எங்களுடன் இணைந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கை எமக்குள்ளது.

சூழல் பாதுகாப்பான பிரிவிலேஜ் கார்ட் இனையும் நாம் அறிமுகம் செய்துள்ளோம். ஒரு தசாப்த காலத்துக்கு முன்பு சுப்பர் மார்க்கட் துறையில் தாம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருந்தோம். தரம், பெறுமதி, வசதி, சேவை மற்றும் தெரிவு போன்றவற்றுக்கு முக்கியத்துவம் வழங்கி நாம் சுப்பர் மார்க்கட்களை ஆரம்பித்தோம். நவீன கால வாடிக்கையாளர்கள், புதிய சிந்தனைகளுக்கமைய புதிய பொருட்களையும் சேவைகளை எதிர்பார்க்கின்றனர். இதனால் வாடிக்கையாளர்களுக்கு தினமும் பசுமையான சிந்தனைகள்' வழங்க நாம் தயாராக உள்ளோம்' என்றார்.

வத்தளையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ஆர்பிகோ சுப்பர் சென்டர் இலங்கையில் நிறுவப்பட்ட அதிக சூழல் பாதுகாப்பு திறன் வாய்ந்த சுப்பர் மார்க்கட் என்பது குறிப்பிடத்தக்கது. இதே சூழல் பாதுகாப்பு திட்டங்களை ஏனைய சுப்பர் சென்டர்களிலும் அறிமுகப்படுத்த ஆர்பிகோ திட்டமிட்டுள்ளது.

வத்தளையில் புதிதாக நிறுவப்பட்டுள்ள ஆர்பிகோ சுப்பர் சென்டரை றிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி யின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி. சேன யத்தெஹிகே வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்திருந்தார். இந்நிகழ்வில் நிறுவனத்தின் சிரேஷ்ட அங்கத்தவர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--