2020 செப்டெம்பர் 20, ஞாயிற்றுக்கிழமை

அரச ஊழியர்களும் வீட்டுத் திட்டங்களில் உள்வாங்கப்பட வேண்டும் : சந்திரகுமார் எம்.பி.

Super User   / 2010 டிசெம்பர் 20 , பி.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்களைச் சேர்ந்த அரச ஊழியர்களையும் வீட்டுத்திட்டங்களில் உள்வாங்கப்பட வேண்டுமென ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவருமான முருகேசு சந்திரகுமார், வீடமைப்பு பொறியியல் சேவைகள் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவங்சவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று காலை கிளிநொச்சியில் இடம்பெற்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் புதிய அலுவலகத் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இக்கோரிக்கையை விடுத்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கடந்த கால யுத்தம் காரணமாக இப்பிரதேசங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. இங்குள்ள மக்களின் இன்றைய முக்கிய பிரச்சினையே வீட்டுப் பிரச்சினைதான். எனவேதான் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கிளிநொச்சி கரைச்சிப் பிரதேசத்தில் மேற்கொள்கின்ற 50 வீட்டுத்திட்டம் போன்று இம்மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களான கண்டாவளை, பூநகரி, பளை போன்ற இடங்களிலும் மேற்கொள்ள வேண்டும்: எனவும் கேட்டுக் கொண்டார்.

அத்தோடு கடந்த மூன்று மாதங்களுக்கு முன் அமைச்சர் விமல் வீரவங்ச அவர்கள் கிளிநொச்சிக்கு வருகை தந்த போது உடைந்த நிலையில் காணப்பட்ட இத்தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கட்டிடத்தை புனரமைக்குமாறு அவரிடம் நான் கோரிக்கை ஒன்றை முன்வைத்தேன். அதனை ஏற்று அவர் அந்த இடத்திலேயே புனரமைப்புக்கான உத்தரவுகளை பிறப்பித்து இன்று புனரமைப்பு வேலைகளும் முடிக்கப்பட்டுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் மிக முக்கியமான பிரச்சினையாக உள்ள வீட்டுப் பிரச்சினைகளை இத் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மூலம் தீர்த்து வைப்பதில் பெரும் பங்காற்ற வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

அங்கு உரையாற்றிய வீடமைப்பு பொறியியல் சேவைகள் மற்றும் பொதுவசதிகள் அமைச்சர் விமல் வீரவன்ஸ, 'நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகுமாரின் கோரிக்கையை ஏற்று இக்கட்டிடத்தை புனரமைப்புச் செய்து திறந்து வைத்துள்ளோம். அதே போன்று அவரின் கோரிக்கையை ஏற்று கரைச்சி பிரதேசத்தில் நாம் 50 வீட்டுத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். அவ்வாறே இம்மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலக பிரிவுகளிலும் எதிர்வரும் ஜனவரி முதல் 50 வீட்டுத் திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம் அதுமட்டுமன்றி அரச ஊழியர்களையும் வீட்டுத் திட்டங்களில் உள்வாங்கப்படுவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் உறுதியளித்தார்.

இதேவேளை அமைச்சர் வீரவங்ச தலைமையிலான குழுவினர் பொன்னகரில் அமைக்கப்பட்டு வரும் 50 வீட்டுத்திட்டத்தையும் பார்வையிட்டனர்.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற அமைச்சர் குணரட்ன வீரக்கோன், மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தி, வீடமைப்பு பொறியியல் பொதுவசதிகள் அமைச்சின் செயலாளர் கோட்டாபய ஜெயரட்ன, கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ஜயந்த சமரவீர, பொதுமுகாமையாளர் பளம்சூர்ய, கிளிநொச்சி மாவட்ட கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன ராஜகிரி, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி பண்டார மற்றும் திணைக்களங்களின் துறைசார் அதிகாரிகள் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--