2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

த.தே.கூட்டமைப்பு தலைவர்கள் மத்தியிலும் ஒற்றுமையின்மை நிலவுகிறது: விநோ எம்.பி.

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் மத்தியிலும் ஒற்றுமையின்மை நிலவுகிறது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் வவுனியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விநோ நோகதாலிங்கம் கூறியுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர் உபதலைவர்களுக்கான தலைமைத்துவப்பயிற்சி வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை ஆரம்பமானபோது    உரையாற்றுகையிலேயே அவர்   இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

"நாம் தேர்தலுக்கு மக்களிடம் செல்லும் போது ஒற்றுமையை பற்றி பேசுகின்றோம். உணர்வுபூர்வமாக எமது உரிமைக்காக, விடுதலைக்காக ஒன்றுபடுங்கள், ஐக்கியப்படுங்கள் என மேடைகளில் பேசி வரும் நாம், மக்களால் தெரிவு செய்யப்பட்ட பின்னர் அந்த ஒற்றுமையை கட்டிக்காக்கின்றோமா என்றால், அதில் நாம் தோல்வி அடைந்திருக்கின்றோம் தோல்வி அடைந்து வருகின்றோம் என்றே கூற வேண்டும்.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் தலைவர்கள் மத்தியிலும் ஓற்றுமையின்மை இருந்து வருகின்றது. அதனை நாம் நிவர்த்தி செய்தேயாக வேண்டும். இல்லையேல் எந்த தீர்வையும் தமிழ் மக்களுக்கு எம்மால் பெற்றுக்கொடுக்க முடியாது போய் விடும்.

பத்திரிகைகளில் பார்க்கின்றபோதும் மக்களிடையே இருக்கும் விமர்சனங்களை பார்க்கின்றபோதும் எத்தனை நாட்களுக்கு இந்த தமிழ்தேசியக் கூட்டமைப்பு உயிரோடு இருக்கும் என்று சந்தேகிக்கப்படும் அளவிற்கு நாம் எல்லோரும் ஒட்டுமொத்தமாக நடந்துகொண்டிருக்கின்றோம். விடுதலைப் போராட்டமாக இருந்தாலும் சரி அபிவிருத்தி வேலைத்திட்டமாக இருந்தாலும் சரி எமது மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது.

மக்கள் எம் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் நிலையில் தொடர்ந்தும் நாங்கள் துரோகம் செய்ய முடியாது. இவற்றை நிவர்த்தி செய்யவேண்டுமாக இருந்தால் ஒவ்வொரு சபைக்குரிய உறுப்பினர்களை இதே மாதிரியான இடங்களுக்கு அழைத்து வந்து அவர்களது கருத்துக்களையும் கேட்பதோடு எமது கட்சியை வளர்க்கும் பணியாக கட்சிக்குள் இருக்கும் குறைபாடுகளையும் உறுப்பினர்களுக்கிடையில் இருக்கும் குறைபாடுகளையும் கேட்கும் அரங்கம் ஒன்றினை தலைவர்கள் உருவாக்க வேண்டும்.

எமது பிரச்சினைகளை தீர்க்க முடியாத நிலையில் நிச்சயமாக ஒட்டுமொத்த தாயக பிரதேச மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியாது"என்றார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்

த.தே.கூ. நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் உரையாற்றுகையில், "தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பலப்படுத்தும் நோக்கோடு கூடுதலாக எதிர்வரும் ஜனவரி மாதமளவில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை பதிவு செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறும். அதற்கு நடைமுறை பிரச்சனைகள் இருக்கின்றன. அதனை பேசி தீர்த்து பதிவு செய்து மாபெரும் சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பினை உருவாக்க வேண்டும்" என்றார்.

தொடர்ந்தும் அங்கு உரையாற்றிய அவர்,

"உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் தலைவர்களை மந்திரத்தாலோ மாயையாலோ கட்டிவைத்திருக்கின்ற நிலை காணப்படுகின்றது. உறுப்பினர்களை தலைவர்களோடும் உபதலைவரோடும் நெருங்க முடியாத அளவிற்கு செய்து வைத்துள்ளார்கள் என்ற குறை காணப்படுகின்றது.

இதன் மூலமாக செயலாளர்களை குறை கூற விரும்பவில்லை. அவர்கள் நிர்வாக ரீதியாக தலைவர்களுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் கூற வேண்டியவர்கள். ஆனால் செயலாளர்கள் தலைமை தாங்க முடியாது. நீண்ட காலமாக தேர்தல் இடம்பெறாது அவர்களே சபைகளை நடத்தியமையினால் பல சபைகளில் இருக்கின்ற நிலைப்பாடு செயலாளர்கள் தலைவர்களாக செயற்படுகின்றமையாகும். சபைகளில் எடுக்கும் தீர்மானம் வெளிப்படையாக இருக்க வேண்டும்.

சபைகள் அபிவிருத்தி பணிகளோடு நிற்காமல் எதிர்காலத்தில் கூட்டமைப்பு அரசாங்கத்துடனும் சர்வதேசத்துடனும் முக்கியமான சில இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளது. இதன்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தவிருக்கும் சம காலத்திலான ஜனநாயக ரீதியான சாத்வீக ரீதியான போராட்டங்களுக்கு மக்களை அணி திரட்டவேண்டிய செயற்பாட்டினையும் செய்ய வேண்டும்" எனவும் கூறினார்.


  Comments - 0

  • Nishanthan Monday, 17 October 2011 12:33 AM

    ஒற்றுமையின்மை இல்லை என்பதை இப்படி பகிரங்கமாக சொல்லியதன் மூலம் அது நிரூபணமாகிறது

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .