2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

வவுனியா நகரசபை கடைத்தொகுதி உரிமம் மாற்றத்திற்கான முற்பணத்தை குறைக்க நடவடிக்கை

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 16 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

வவுனியா நகரசபையின் கடைகளுக்கான உரிமம் மாற்றும்போது 4 வருடங்களுக்கான முற்பணத்தை மூன்று தவணைகளில் செலுத்தும் வகையில் எதிர்வரும் நகரசபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றி வர்த்தகர்களுக்கு ஏதுவான நிலையை ஏற்படுத்தித் தருவதாக வவுனியா நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன் தெரிவித்தார்.

வவுனியா நகரசபையின் கடைகளின் உரிமத்தை மாற்றிக்கொடுக்கின்றபோது நகரசபைக்கு 12 வருட முற்பணம் செலுத்தப்பட வேண்டுமென கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் 5 வருட முற்பணம் செலுத்தப்பட வேண்டுமென அண்மையில் இரு தடவைகள் நகரசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.

இந்த நிலையில், அதனை செயற்படுத்துவதில் ஏற்பட்ட சந்தேகங்களை களையும் நோக்கோடு உள்ளூராட்சி ஆணையாளரின் பரிந்துரைக்கு அனுப்பியபோது 20 வருட முற்பணம் செலுத்த வேண்டுமெனவும் அதற்காக வர்த்தகர்களுடன் கலந்துரையாடலை மேற்கொள்ளுமாறு கோரப்பட்டது. இதற்கமைய நகரசபை தலைவர் ஐ.கனகையா தலைமையில் நகர வர்த்தகர்களுடனான சந்திப்பொன்றுக்கும் நகரசபையின் சார்பில் கடந்த வெள்ளிக்கிழமை அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன்போது வர்த்தகர்கள் தாம் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்தனர்.

வர்த்தகர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தபோது நகரசபையே தீர்மானங்களை எடுக்கவேண்டுமே தவிர, வேறு யாரும் தீர்மானம் எடுக்கும் சக்தியாக உருவாகுவதற்கு சந்தர்ப்பமளிக்கக் கூடாதெனவும் வர்த்தகர்கள் கோரினர். கடந்த காலங்களில் வர்த்தகர்கள் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வந்தனரெனவும் இந்த நிலையில் பல ஆண்டுகளாக கடைகள் மூடப்பட்டிருந்ததுடன் பின்னர் பல்வேறு ஆயுதக்குழுக்களால் கப்பம் கோரல்களும் இடம்பெற்றன. இவற்றையெல்லாம் தாங்கியே வர்த்தகர்கள் தமது வர்த்தக நடவடிக்கையை தற்போதைய சுமுகமான சூழலில் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் பஸ் நிலையத்தினுள் பொதுவாகனங்கள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையால் கர்ப்பிணிகள் முதற்கொண்டு அனைவரும் பல சிரமங்களுக்கு மத்தியில் பஸ் நிலைய கடைகளுக்கு வரவேண்டியிருப்பதால் அவர்கள் தற்போது அக்கடைகளுக்கு வருவதை தவிர்த்து வருகின்றனர். மற்றும் பஸ் நிலைய கடைத்தொகுதி சுகாதாரமற்ற முறையில் காணப்படுகின்றதுடன், கடைகளின் மேல் கூரைப்பகுதி சேதமடைந்துள்ளமையினால் மழைக்காலங்களில் கடைகளினுள் நீர் வருகின்றது. பஸ் நிலைய மேல்மாடியிலிருக்கும் வர்த்தக நிலையங்களுக்கு செல்லும் படிக்கட்டுகள் தற்போது குட்டி மதுபானசாலையாக காட்சியளிக்கின்றது. இது தொடர்பில் வர்த்தகர்கள் எதனையும் செய்ய முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதன் காரணமாக வியாபாரம் குறைந்துள்ளது. இது தொடர்பில் நகரசபைக்கு பல்வேறு தடவை அறிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இவற்றை கவனிக்காது அதி கூடுதலான முற்பணத்தை பெற்று கடை உரிமத்தை மாற்றுவது வர்த்தகர்களால் தாங்கமுடியாத சுமையாகி விடுமென வர்த்தகர்கள் தமது சார்பில் கருத்துக்களை முன்வைத்தனர்.

இதனை கருத்திற்கொண்ட நகரசபையின் தலைவர், உறுப்பினர்கள் சார்பில் கருத்துத் தெரிவித்த நகரசபையின் உபதலைவர் எம்.எம்.ரதன் ஆகியோர் எதிர்வரும் 19ஆம் திகதி நடைபெறவுள்ள நகரசபைக் கூட்டத்தில் இவ்விடயத்தை ஆராய்ந்து அனைத்து உறுப்பினர்களின் சம்மதத்துடன் 4 ஆண்டு முற்பணமும் அவற்றை மூன்று தவணைகளில் செலுத்துவதற்கும் நடவடிக்கை எடுப்பதாகத்  தெரிவித்தார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--