2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

மன்னாரில் அவசர காலநிலை பிரகடனம்; விடுமுறை இரத்து

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 28 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 (எஸ்.ஜெனி)

மன்னார் மாவட்டத்தில் நிலவிவரும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து மன்னாரிலிருந்து வெளிமாவட்டங்களுக்கான அனைத்து போக்குவரத்துக்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியுடன் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ச்சியாக அடை மழை பெய்துவருவதுடன், அங்கு வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அரசாங்க உத்தியோகர்களின் விடுமுறைகளும் இரத்துச்செய்யப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில்  ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தொடர்பான அவசரக் கூட்டம் அம்மாவட்ட செயலகத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டி மேல் தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. இதன்போதே மன்னார் மாவட்டத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை புத்தளத்திலிருந்து படகுகள் மூலம் கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள அதேவேளை, வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்வதற்காக 20 பஸ்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களின் அவசர தேவைக்காக கடற்படையினரின் உதவியும் கோரப்பட்டுள்ளதாக இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இக்கூட்டத்தில் மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய பிரதேச செயலாளர்களும் அரசாங்க அதிகாரிகளும் கிராம சேவை  அலுவலகர்களும் கலந்துகொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .