2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

வடக்கு மக்கள் சமாதான காலத்திலும் அச்சத்துடன் வாழ்கின்றனர்: டெனிஸ்வரன்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 02 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

வடக்கிலுள்ள மக்கள் தற்போது பாரிய அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருவாக வடமாகாண போக்குவரத்து அமைச்சர் பாலசுப்பிரமணியம் டெனிஸ்வரன் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் புதன்கிழமை (02) விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'தற்போது வடமாகாணத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சோதனைச் சாவடிகளின் உருவாக்கம், அதன் தோற்றம் மக்கள் மத்தியில்  அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக அரசாங்கம் சமாதானம் என்று கதைத்துக்கொண்டு மறுபுறம் இராணுவக் கட்டுப்பாட்டை வடக்கு, கிழக்கிலுள்ள மக்கள் மீது திணிக்க வேண்டுமென்ற செயற்பாட்டோடு,  தற்போது புதிதாக புலிப் பயங்கரவாதம் என்ற பேச்சும் தோன்றியுள்ளது.

ஆனால், இலங்கை அரசாங்கமும் சரி ஏனைய தரப்புக்களாக இருந்தாலும் சரி இதய சுத்தியுடன் செயற்பட்டால் மாத்திரமே வட, கிழக்கு மாகாணங்களையும் எமது நாட்டையும் அபிவிருத்திப் பணிக்கு கொண்டு செல்லமுடியும்.  இவ்விடயங்களில் சரியான முறையில் சிந்தித்துச் செயற்பட வேண்டிய தேவையுள்ளது.

குறிப்பாக மக்கள் யுத்தத்தின் பின் ஓரளவு அச்சமின்றி வாழக்கூடிய நிலை ஏற்பட்டிருந்தது. ஆனால், தற்போது இராணுவத்தின் செயற்பாடுகளினால்  சமாதான காலத்திலும் மக்கள்; அச்சத்துடன் வாழவேண்டிய நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளமையை  நேரடியாக பார்க்கக்கூடியதாக உள்ளது.

இவ்விடயம் என்ன நோக்கத்திற்காக இந்த அரசாங்கத்தினால் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளதென்று தெரியவில்லை. இராணுவம் தனது கட்டுப்பாட்டை பொதுமக்கள் மீது வைத்துள்ளது போன்று குறித்த செயற்பாடுகள் தோன்றுகின்றன.

தற்போது யுத்தம் நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதென்றும் புலிப் பயங்கரவாத்தை ஒழித்து விட்டதாக  கூறும் இந்த அரசாங்கம், ஏன் இவ்வாறான செயற்பாடுகளை கட்டவிழ்த்து விட்டுள்ளதெனக் கேட்க விரும்புகின்றேன்.

சட்ட முரணான கைதுகள், ஆட் கடத்தல்கள் போன்ற சம்பவங்கள் தற்போது இடம்பெற்று வருகின்றமையால் மீண்டும் எமது மக்களை பாரிய படுகுழியில் தள்ளி விடுவது போல் தோன்றுகின்றது.

எனவே, இந்த அரசாங்கம் எதிர்காலத்தில் இதய சுத்தியோடு செயற்படவில்லை என்றால் மக்கள் மேலும் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுக்க நேரிடும்.

தற்போது இடம்பெற்றுவரும் சட்டவிரோதக் கைதுகளுக்கு இந்த அரசாங்கம் பதில் கூற வேண்டும்.

எனவே, இந்த அரசாங்கம்  எதிர்காலத்தில் இதய சுத்தியோடு செயற்பட வேண்டுமென இந்த அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கின்றேன்' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .