2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

கள்ளகாதலால் பெற்ற மகனை கொலை செய்ய முயற்சி செய்த தாய்

Editorial   / 2020 டிசெம்பர் 30 , பி.ப. 01:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த 27ஆம் திகதி காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள முட்புதரில் சிறுவன் ஒருவர் பேச்சு மூச்சு இல்லாமல் கண்டெடுக்கப்பட்டான். 

பின்னர் அச்சிறுவனுக்கு முதலுதவி அளித்து அப்பகுதியினர் உயிரை காப்பாற்றினர். பின்னர் ஸ்ரீபெரும்புதூர் காவல்நிலையத்தில் சிறுவன் ஒப்படைக்கப்பட்டான். சிறுவனிடம் பொலிஸார் விசாரணை நடத்தினார்கள். 

அப்போது அச்சிறுவன் தனது தாயின் பெயர் சித்ரா என்றும், தான் அவருடன் செல்லப்போவதில்லை என்றும் கூறி அழுதான். இதனால் பொலிஸார் சந்தேகம் அடைந்து சிறுவனிடம் மேலும் விசாரித்தனர்.

சிறுவனிடம் தீவிர விசாரணை நடத்தியபோதுதான், தன்னை கொலை செய்ய முயற்சி நடந்ததை அச்சிறுவன் சொல்ல பொலிஸார் அதிர்ச்சி அடைந்தனர். 

விவகாரத்தின் விபரீதத்தை அறிந்த பொலிஸார், சிறுவனின் தாய் சித்ரா, ஸ்ரீபெரும்புதூரை அடுத்த காமராஜர் நகரில் வசித்து வருவதை கண்டுபிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர். 

அப்போது சித்ராவிடம் பொலிஸார் விசாரணை நடத்தினர். 2 மகன்களுக்குத் தாயான சித்ரா, கணவர் ஆனந்தனைப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில், காமராஜர் நகரைச் சேர்ந்த மகேஷ் என்பவருடன் அவருக்கு காதல் ஏற்பட்டது. இருவரும் நெருங்கிப் பழகி வந்துள்ளனர். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு மகேஷை வற்புறுத்தியுள்ளார் சித்ரா.

ஆனால், ஆனந்தனுக்கு பிறந்த மகன்கள் இருவரையும் விட்டுவிட்டு வந்தால் மட்டுமே, சித்ராவைத் திருமணம் செய்துகொள்வேன் என்று கூறியுள்ளார் மகேஷ். இதனால் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து, கடந்த செப்டம்பர் மாதம் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய சித்ராவின் இரண்டரை வயது இளைய மகன் உயிரிழந்தான். இது விபத்தாக வழக்குப்பதிவு செய்யப்பட்டாலும், கொலை என்றே சந்தேகப்பட்டனர் அப்பகுதி கிராம மக்கள். அதில் மகேஷுக்கும் தொடர்பு இருப்பதாக ஊருக்குள் பேச்சு அடிபட்டுள்ளது.

சிறுவனின் மரணம் தன்மீது கொலைப்பழியாக விழுந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த மகேஷ், சித்ராவுக்கே தெரியாமல் ஒரு ரகசிய வேலையைச் செய்திருக்கிறார். 

கடந்த 4 தினங்களுக்கு முன் சித்ரா மூத்த மகனை கழுத்தை நெரித்துக் கொலை செய்ய முயற்சி செய்த போது அதனை யாருக்கும் தெரியாமல் அலைபேசியில் வீடியோ எடுத்து வைத்துள்ளார் மகேஷ். 

மயங்கி விழுந்த சிறுவன் உயிரிழந்துவிட்டதாக நினைத்த இருவரும், அவனை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள முட்புதருக்குள் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து, அந்த கொலை முயற்சி வீடியோவை நண்பர்களுக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினார் மகேஷ், சித்ரா தான் குழந்தையைக் கொன்றதாகவும், தனக்கும் இச்சம்பவத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

அந்த வீடியோவை அவருடைய நண்பர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ மற்ற வாட்ஸ்அப் குழுக்களுக்கு பரவியதும், உயிரிழந்துவிட்டதாக நினைத்த சிறுவன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டதுமே சித்ரா சிக்கிக்கொள்ள காரணமாக அமைந்திருக்கிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .