2020 ஜூன் 04, வியாழக்கிழமை

பெருமைக்கு ஆசைப்படாத பெருமகன்

Editorial   / 2018 ஓகஸ்ட் 27 , பி.ப. 12:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

“மேற்குத் தொடர்ச்சி மலை” என்ற தரமான திரைப்படத்தைக் கொடுத்த இயக்குநர் லெனின் பாரதிக்குக் குவியும் பாராட்டுகள், அந்தத் திரைப்படத்தைத் தயாரிக்க முன்வந்த விஜய் சேதுபதிக்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. ஆனால், தனக்கு அந்தப் பெருமை வேண்டாமென, வெளிப்படையாகப் பேசியுள்ளார் விஜய் சேதுபதி.

இந்தத் திரைப்படத்துக்குக் கிடைத்துள்ள விமர்சனத்துக்கும் பாராட்டுகளுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, படக்குழுவினரால் நேற்று (26), பத்திரிகையாளர்கள் சந்திப்பொன்று நடத்தப்பட்டது.

அதில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, “இந்தத் திரைப்படத்தைப் பார்த்ததும், எனக்குப் பிடிக்கவில்லை. அதேசமயம், இத்திரைப்படத்தை வெளியிடவும் முடியவில்லை. யாரும் இத்திரைப்படத்தை வாங்க வராததே அதற்குக் காரணம். சரி, வந்த விலைக்கு, அதாவது 70 இலட்சம் இந்திய ருபாய்க்கு, குறைத்துதேனும் இந்தத் திரைப்படத்தைக் கொடுத்துவிடலாமென முடிவெடுத்தேன்.

“ஒருவர் வந்து, அட்வான்ஸ் கொடுத்தார். பின்னர் என்ன நினைத்தாரோ அந்தப் பணத்தை திரும்ப வாங்கிச் சென்றுவிட்டார். பின்னர் தான், சரவணன் இந்தத் திரைப்படத்தை வெளியிட முன்வந்தார். இந்தத் திரைப்படம் வெளியானதற்கு, அவர்தான் காரணம். இந்தத் திரைப்படத்துக்காக, ஒரு பைசா கூட வாங்காமல், திரைப்படத்தைக் கொடுத்துவிட்டேன்.

“இந்தத் திரைப்படத்தின் இயக்குனர் லெனின் பாரதி மிகவும் நேர்மையானவர். நான் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டாக இருந்த காலத்திலேயே, அவருடன் நட்பு உண்டு. அவருடைய நேர்மைக்காகத் தான், இந்தத் திரைப்படத்தைத் தயாரித்தேன். இதை, அவர்தான் கடைசிவரை சுமந்து கொண்டிருந்தார். அதனால், இத்திரைப்படத்துக்காகக் கிடைக்கும் பாராட்டுகள், அவருக்குத் தான் போய்ச் சேர வேண்டும். இந்தத் திரைப் டத்தைத் தயாரித்தேன் என்ற பெருமைகூட எனக்கு வேண்டாம்.

“இன்று இத்திரைப்படத்தைப் பார்த்து, நீங்கள் அனைவரும் பாராட்டுகிறீர்கள். எனது திரைப்படங்களை நீங்கள் விமர்சிக்கும் போது, நான் கோபப்பட்டதுண்டு. இவர்களுக்குச் சினிமாவைப் பற்றி என்ன தெரியும், இப்படி விமர்சிக்கிறார்கள்? என்று கோபப்பட்டிருக்கிறேன்.

“ஆனால், இந்த “மேற்குத் தொடர்ச்சி மலை” திரைப்படத்தை நீங்கள் பார்த்த பார்வை, பாராட்டிய விதம் ஆகியவற்றைப் பார்த்த போது, எனது எண்ணங்களுக்குச் செருப்படியாக இருந்தது. சினிமா பற்றிய எனது பார்வையையும் உங்களது விமர்சனமும் மாற்றியிருக்கிறது.

“இந்தப் படத்தில் நாயகனாக நடித்துள்ள அண்டனி, நன்றாக வரவேண்டும். என்னை விடவும் வளர வேண்டும். அவ்வளவு திறமைசாலி. அவருக்கும் உங்களது ஆதரவு வேண்டும்” என, விஜய் சேதுபதி கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X