பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரின் ஊடக செயலாளர் முருகேசு நடேசலிங்கத்தின் தந்தை அமரர் கணபதிபிள்ளை முருகேசு அவர்களின் ஓராண்டு நினைவு தினம் நாளை செவ்வாய்க்கிழமையாகும்.
முத்தமிழ் வித்தகன் விபுலானந்தரின் புகழோடு பல அறிஞர்களையும் சமூக சேவையாளர்களையும் தோற்றுவித்த காரோறு மூதூர் என அழைக்கப்படும் பழம் பெரும் கிராமமான காரைதீவில் பிறந்த ஒரு சமூக சேவையாளர்தான் அமரர் கணபதிபிள்ளை முருகேசு அவர்கள். இவர் 1920ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி கணபதிபிள்ளைக்கும் செண்பகப் பிள்ளைக்கும் மகனாகப் பிறந்தார். இளமையில் ஆரம்பக் கல்வியைக் கற்றுத் தேர்ந்து அதன்பின் தந்தையாரின் பாரம்பரிய தொழிலான விவசாயத் தொழிலை மேற்கொண்டு வந்தார். இளமைப் பருவமதில் எல்லோரும் இல் வாழ்வில் இணைவது போல் இவரும் இவ்வூர் வேலுப்பிள்ளை அழகம்மா தம்பதியினரிள் அன்புப் புதல்வி புனிதவதியைக் கரம்பற்றி இல்வாழ்வில் இணைந்து இல்லற வாழ்விற்கு இலக்கணமாய் ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார்.
வேட்டியும் சால்வையும் அணிந்து காதிலே கடுக்கண்ணுடன் முறுக்கிய மீசையும் கை இடுக்கில் சொருகிய குடையுடன் நடமாடித் திரிந்து விவசாய மன்னனான இவர் தமிழ்ப் பண்பாட்டை வெளிப்படுத்தி வையகத்தில் பழமை மாறாது மரபுகளை பேணி தமிழர் தம் பாரம்பரியத்திற்கொப்ப வாழ்ந்த வந்தவர். அவரின் தமிழ் சமூக சேவையை பாராட்டி காரைதீவு பிரதேச செயலக சாகித்திய விழாவில் கணபதிபிள்ளை முருகேசு ஐயாவிற்கு “விபுலமணி” விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது.
1950ஆம் ஆண்டில் கிராமாட்சி மன்ற தேர்வில் வெற்றி பெற்றார். அக்காலங்களில் கடற்கரை குடியேற்ற திட்டத்தின் போது அம்மக்களின் நீருக்காக கிணறுகட்டும் பணியில் ஈடுபட்டு பண உதவியும் புரிந்தார். காரைதீவு – 05 பிரிவில் பழைய வைத்தியசாலை கட்டுமானப்பணியில் ஈடுபட்டார்.
2000ஆம் ஆண்டு மத்தியஜ்தர் குழுவில் இடம்பெற்று சேவை புரிந்து வரும்வேளை சமாதான நீதவானாக பதவியேற்று சேவை செய்தார். இவரின் சேவையை பாராட்டி 2002ஆம் ஆண்டு காரைதீவு சக்தி கல்வி நிலையத்தினால் பழம் பெரும் விவசாயி என்று கௌரவிக்கப்பட்டார். AURDL அம்பாறை மாவட்டவிவசாய தியைக்களத்தினாலும் பழம் பெரும் விவசாயி என கௌரவிக்கப்பட்டார்.
1940ஆம் ஆண்டு நெல் சந்தைப்படுத்தும் சங்கத்தின் உறுப்பினர் பலநோக்கு கூட்டுறவு சங்க உறுப்பினர் NEHRP வீட்டுத்திட்ட பணியில் காரைதீவு -07 ஆம் பிரிவில் பணியாற்றி சமூக சேவைக்காக வாழ்ந்த ஒரு தமிழ்த்தாய் மகன் என்று பெருமையுடன் சொல்லலாம்.
இவர் 2012.09.17ஆம் திகதி தனது 92ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.
-எம்.நடேசலிங்கம்.