2026 பெப்ரவரி 18, புதன்கிழமை

உணவுப் பழக்கங்களில் மாற்றம் அவசியம்

Janu   / 2026 பெப்ரவரி 16 , பி.ப. 05:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தினசரி சுமார் 100 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும், ஒரு நாளில் சுமார் 40 புற்றுநோயாளர்கள் உயிரிழப்பதாகவும் அண்மையில் சுகாதார இராஜாங்க அமைச்சர் வைத்தியர். ஹன்சக விஜேமுனி தெரிவித்திருந்தார். புற்றுநோயை ஆரம்பகட்டத்தில் இனங்கண்டு கொள்வதற்கான நிலையத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் அமைச்சர் இதனை தெரிவித்தார். சரி, இந்தப் பிரச்சனைக்கு ஏதுவான ஒரு பிரதான காரணியை எடுத்துநோக்கினால், இலங்கையில் புழக்கத்திலுள்ள உணவுப் பழக்கமுறை பெருமளவில் செல்வாக்குச் செலுத்துகின்றது.

குறிப்பாக, உணவகங்களில் தயாரித்து பரிமாறப்படும் உணவு வகைகளின் தரங்கள் குறித்த கேள்வி பெருமளவில் எழுந்துள்ளது. உணவகங்களுக்கு சென்று, எமக்கு பிடித்த உணவு வகைகளை நாம் வழங்குமாறு கேட்டதும், அவர்கள் ஏற்கனவே தயாரித்த உணவை, குளிர்சாதனப் பெட்டியிலிருந்து எடுத்து அவற்றை அடுப்பில் வைத்து சூடாக்கி பரிமாறுகின்றனர். அல்லாவிடின், கொத்து, பிரைட் ரைஸ் போன்ற உணவுகளில் பயன்படுத்தப்படும் சேர்மானங்கள், எண்ணெய் வகைகள், சுவையூட்டிகள் போன்றன எந்த தரத்தைக் கொண்டவை என்பது தொடர்பில் எவரும் பெருமளவில் கவனம் செலுத்துவதில்லை.

உற்பத்திச் செலவுகள் அதிகரித்து காணப்படும் நிலையில், உணவகங்களை முன்னெடுத்துச் செல்வோர், இயலுமானவரை தாம் இலாமீட்டுவதில் கவனம் செலுத்துகின்றனர். குறிப்பாக, சில உணவகங்கள் புதிதாக ஆரம்பிக்கப்படும் போது, வாடிக்கையாளர்களை கவர்ந்திழுப்பதற்காக குறைந்த விலையில், தரத்தில் உயர்வாகவும், சுவையில் உயர்வாகவும் உணவுகள் தயாரிக்கப்பட்டு பரிமாறப்பட்டாலும், காலப்போக்கில் குறித்த வியாபாரத்தை தொடர்ந்தும் கொண்டு நடத்துவதில் எழும் சிக்கல்களை கவனத்தில் கொண்டு அவை தரத்தை குறைக்கும் செயற்பாடுகளில் ஈடுபடத் தூண்டுகின்றன.

மனிதனின் அத்தியாவசிய தேவைகளில் உணவு பிரதானமானதாகும். அதுபோன்று ஆரோக்கியம், சுகாதாரமும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். அரசாங்கம் மருந்துப்பொருட்களுக்கு செலவழிக்கும் தொகையை குறைத்துக் கொள்வதற்காக, இந்த உணவு வகைகள் தரமாக பேணப்படுகின்றமையை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். குறிப்பாக உணவு உற்பத்திக்கு அவசியமான மூலப்பொருட்களின் விலைகளை அல்லது அவற்றின் மீது சுமத்தப்பட்டுள்ள வரிகளை தளர்த்தலாம். இதனால் மக்களின் சுகாதாரம் மேம்படுவது மாத்திரமன்றி, தரம் குறைந்த, புற்றுநோய் போன்ற பாரதூரமான நோய்நிலைகளை தோற்றுவிக்கும் உணவுப் பொருட்களை தவிர்த்து, தரமான உணவை உட்கொள்வதற்கு மக்களை தூண்டி, அதனால் ஆரோக்கியமான சமுதாயத்தை கட்டியெழுப்ப பங்களிப்பு வழங்கலாம்.

உணவு தயாரிப்பு என்பது ஒரு கலை என நிபுணர்கள் வர்ணிப்பதை நாம் கேள்வியுற்றுள்ளோம். தூர நோக்கில் சிந்தித்து, ஆரோக்கியமான உணவு வகைகளுக்கு மாறிக் கொள்ள வேண்டியதன் தேவை எழுந்துள்ளது. உணவு தயாரிப்பில் ஈடுபடுவோரும், உணவங்களைச் சேர்ந்தவர்களும், விரயத்தை குறைத்து, எஞ்சிய உணவுகளை குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து, மறுநாள் மீண்டும் பரிமாறுவதை தவிர்த்து, ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது சிறந்தது. வாடிக்கையாளர்களை மெல்லச் சாவடிப்பதை உணவகங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

16.02.2026


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X