2025 ஜூலை 19, சனிக்கிழமை

முடிச்சு மாறிகள் குறித்து அவதானமாக இருப்பது அவசியம்

Janu   / 2024 டிசெம்பர் 23 , பி.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பண்டிகை காலம் என்பதால், சகலரும் அவதானமாக இருக்க வேண்டும். தங்களிடம் இருக்கிறதோ, இல்லையோ, எனினும், பண்டிகையை கொண்டாடுவதில் சகலரும் ஆர்வமாக இருப்பர். சிலர், கடன்களை பெற்றாவது, தங்களுடைய பிள்ளைகளுக்கு புத்தாடைகள் வாங்கிக் கொடுப்பர். வீடுகளையும் சுத்தம் செய்து கொள்வர். இவ்வாறு கஷ்டப்படுவோரும் இருக்கின்றனர். மிக இலாவகமாக ஏமாற்றும் பேர்வழிகளும் இருக்கத்தான் செய்கின்றனர்.

கண் விழித்திருக்கும் போதே பலரும் தங்களுடைய கைவரிசையை மிகக் கச்சிதமாக அரங்கேற்றிவிட்டு, அடுத்த கைவரிசையை காட்ட சென்று விடுகின்றனர். இழந்தவர்கள், அதை மீளப் பெற்றுக் கொள்வதற்கு பெரும் சிரமங்களுக்கு முகம் கொடுக்கின்றனர். பண்டிகை காலத்தை மையமாகக் கொண்டு, கைவரிசையை கன கச்சிதமாக முடித்துக் கொள்வோரும் உள்ளனர்.

கைவரிசை காண்பதில் மட்டுமன்றி, தரம் குறைந்த பொருட்களை விற்பனை செய்வதிலும் கில்லாடிகள் இருக்கத்தான் செய்கின்றனர். எனினும், பொருட்களின் தரத்தை கவனிக்காது, குறைந்த விலைக்கு பின்னால் அலைமோதும் குழுவினரே, முதலைகள் விரித்திருக்கும் வலைக்குள் சிக்கிக் கொள்கின்றனர். இந்த பண்டிகை காலத்தில் நுகர்வோரை காப்பாற்ற வேண்டுமானால், நுகர்போர் பாதுகாப்பு அதிகார சபை அதிரடியாக களத்தில் இறங்கி நடவடிக்கையை எடுக்க வேண்டும்.  

அத்தியாவசிய பொருட்களை பதுக்கி வைத்து, செயற்கையாக தட்டுப்பாட்டை ஏற்படுத்திவிட்டு, விலையை அதிகரித்து விற்பனை செய்வதற்கு முயன்ற வர்த்தகர்கள் பலரும் கையும்  மெய்யுமாக சிக்கிக் கொண்டுள்ளனர். ஆகையால், பொருட்களை பதுக்கி வைத்து சிக்கிக்கொள்ள வேண்டாம். அவ்வாறு சிக்கிக்கொள்ளும் வர்த்தகர்களுக்கு கடுமையான தண்டனையை சட்டத்தின் ஊடாக பெற்றுக்கொடுக்க வேண்டும்.

பண்டிகை காலம் என்பதால், பெரும் நகர்களுக்கு மக்கள் குடும்பத்துடன் படையெடுப்பர், கடுமையாக உழைத்த பணத்தில் கொஞ்சமாக சேமித்து, வருட இறுதி கொண்டாட்டத்துக்கு பயன்படுத்த நினைக்கும் பலரும் அப்பணத்தை இழந்துவிடுவர். ஆகையால், பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துவோர் தங்களுடைய பெறுமதியான பொருட்களையும், ஆவணங்களையும், பணத்தையும் கவனமாக வைத்துக்கொள்ளவேண்டும்.

அருகருகே அமர்ந்து பயணிக்கும் பயணிகளிடம் மிகக் கவனமாக இருக்க வேண்டும். களைப்பில் அயர்ந்துவிட்டால், அதனையும் சுருட்டிக்கொண்டு அடுத்த பஸ் நிறுத்துமிடத்திலேயே பாய்ந்து இறங்கொள்வர். ஆகையால், பெறுமதியான பொருட்களை எடுத்து பஸ்களுக்குள் பார்ப்பை தவிர்த்துவிடுவது சால சிறந்தது. சில நிறுவனங்கள் வருடாந்த வருமான ​​கொடுப்பனவுகளை வழங்கியிருக்கலாம். அதனையும் சுருட்டிக்கொள்வதற்கு முயலக்கூடும். ஆகையால், சில விடயங்களில் மெனளமே சிறந்ததாக அமையும்.

முடிச்சுமாற்றிகள் தொடர்பில், பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களில், வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறு வர்த்தகர்களும் பயணிகளை அறிவுறுத்துவர். எனினும், ஒவ்வொரு நாளும் ஏதோவொன்றை பயணிகள் இழந்துவிடுகின்றனர். கண்களில்  விளக்கெண்ணெயை ஊற்றி விழித்திருந்தாலும், கண்களுக்குள் விரலை விட்டு ஆட்டி விடுகின்றனர். இதற்கிடையே மிக நாசுக்காக பேசி பல இலட்சம் ரூபாயை பலரும் கறந்துவிடுகின்றனர். ஆகையால், அவதானமாக இருப்பது சால சிறந்தது.

2024.12.23


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X