2021 ஜூன் 16, புதன்கிழமை

ஆப்கானிஸ்தான் விமானத் தாக்குதல்: சுயாதீன விசாரணை வேண்டும்: எம்.எஸ்.எஃப்

Shanmugan Murugavel   / 2015 ஒக்டோபர் 05 , மு.ப. 10:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பின் (எம்.எஸ்.எப்) வைத்தியசாலை மீது அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் குறித்து சுயாதீனமான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டுமென, அவ்வமைப்புக் கோரிக்கை விடுத்துள்ளது.

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் நகரிலுள்ள வைத்தியசாலை மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையில், அது தொடர்ந்து இயக்கத்தில் இல்லை எனவும் அவ்வமைப்பு அறிவிக்கின்றது.

குறித்த தாக்குதல் மீது அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வருத்தம் தெரிவித்ததோடு, அது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்படுமெனத் தெரிவித்த போதிலும், எல்லைகளற்ற வைத்தியர்கள் அமைப்பு, சுயாதீனமான விசாரணைகயைக் கோரியுள்ளது.

'போர்க் குற்றமொன்று இடம்பெற்றுள்ளது என்ற தெளிவான ஊகத்தின் அடிப்படையில், சுயாதீனமான சர்வதேச அமைப்பொன்றினால் முழுமையானதும் வெளிப்படையானதுமான விசாரணையை எம்.எஸ்.எப் வேண்டி நிற்கிறது" என, அவ்வமைப்புத் தெரிவித்துள்ளது.

'முரண்பாட்டில் சம்பந்தப்பட்ட தரப்பினால் மேற்கொள்ளப்படும் விசாரணையொன்றில் மாத்திரம் தங்கியிருத்தல், முழுமையான திருப்தியை வழங்காது" என, அவ்வமைப்பு மேலும் தெரிவிக்கிறது. அத்தோடு, இந்தத் தாக்குதலானது, சர்வதேச மனிதாபிமானச் சட்டங்களுக்கு எதிரானது எனவும் அவ்வமைப்புத் தெரிவிக்கின்றது.

அத்தோடு, குறித்த வைத்தியசாலைப் பகுதியில் ஆயுததாரிகள் மறைந்திருப்பதாகக் கிடைத்த தகவல்களின் பின்னரே இத்தாக்குதல் நடத்தப்பட்டது என, இத்தாக்குதலை நியாயப்படுத்த ஆப்கானிஸ்தான் அரசாங்க முயன்றதையும் அவ்வமைப்புக் கண்டித்துள்ளது. அவ்வாறானதொரு மோதல் அவ்வைத்தியசாலையில் நிலை காணப்படவில்லை எனவும் அவ்வாறு அங்கு மோதல் இடம்பெற்றதாகத் தங்களது ஊழியர்கள் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

இச்சம்பவம் குறித்துக் கருத்துத் தெரிவித்த அவ்வமைப்பின் பணிப்பாளர் நாயகம், 'முடியுமானமாளவு சுயாதீனமானதும் வெளிப்படையானதுமான விசாரணையொன்று எமக்குத் தேவைப்படுகிறது. விசாரணையின் முடிவில் வழங்கப்படும் முடிவுகளை மாத்திரமன்றி, முழு அறிக்கையையும் வாசிக்கக்கூடிய நிலை இருக்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இதேவேளை, இத்தாக்குதல் தொடர்பாகக் கருத்து வெளியிட்டுள்ள அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் ஆஷ் கார்ட்டர், அமெரிக்காவையும் அதன் படைகளையும் பொறுத்தவரை, அதன் விசாரணைகள் தொடர்பாக முழுமையான வெளிப்படைத் தன்மையும் காணப்படுவதுதும், யாராவது பொறுப்புக் கூறவேண்டியிருந்தால் அதற்குப் பொறுப்புக் கூறுவதும் குறித்து, உறுதியாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .