2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

இந்தியக் கப்பல்களுக்கு அனுமதி மறுத்த விவகாரத்தில் சுமுகத் தீர்வு: ஈரான் உறுதி

Freelancer   / 2026 ஏப்ரல் 20 , மு.ப. 08:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹார்முஸ் ஜலசந்தி​யில் இந்​திய கப்பல்களுக்கு அனு​மதி மறுத்த விவ​காரத்​தில் சுமுக தீர்வு காணப்​படும் என ஈரான் உச்ச தலை​வரின் பிர​தி​நிதி தெரிவித்​துள்​ளார்.

அமெரிக்​கா போர் நிறுத்த விதிகளை மீறியதாக, ஹார்முஸ் ஜலசந்​தியை மீண்​டும் மூடு​வ​தாக ஈரான் நேற்று முன்​தினம் அறி​வித்​தது. ஜலசந்தி திறக்கப்படும் என்ற அறிவிப்பு அதற்கு முன் வெளியானதால், 2 இந்​தி​ய எண்​ணெய்க் கப்​பல்​கள் பயணத்தைத் தொடர்ந்தன.

ஆனால், ஈரானிய புரட்​சிகர காவல்​ படை ஒரு கப்​பல் மீது துப்​பாக்​கிச் சூடு நடத்​தினர். இதில் எந்த பாதிப்​பும் ஏற்படவில்​லை. இதையடுத்​து, அந்​தக் கப்​பலும் ‘பாக்​ய லக்​ஷ்மி' என்ற கப்​பலும் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் இருந்து பின்வாங்​கியது. இதுகுறித்த வீடியோவை ஈரானிய பத்திரிகை​யாளர் ஒரு​வர் எக்ஸ் தளத்​தில் பகிர்ந்​துள்​ளார்.

அதில், கப்​பலின் மாலுமி ஈரானிய கடற்​படை​யுடன் தொடர்பு கொண்டு ‘‘ஈரானிய கடற்​படை, இது பாக்ய லக்​ஷ்மி. உங்​கள் குரல் தெளி​வாகக் கேட்​கிறது’’ என்று கூறுகிறார். அதற்கு ஈரானிய கடற்​படை​யினர், ‘‘உடனடியாகத் திரும்​பிச் செல்​லுங்​கள்’’ என்று உத்தரவிடுகின்றனர்.

இதையடுத்​து, பாக்​ய லக்​ஷ்மி கப்​பல் பின்​வாங்​கிச் சென்றது. இதே​போல், சன்​மார் ஹெரால்ட் என்ற மற்​றொரு கச்சா எண்​ணெய் டாங்​கரிட​மிருந்​தும் அபாய அழைப்புவந்​தது. இந்த விவ​காரம் குறித்து இந்​தி​யா​வின் கவலையை ஈரான் அதி​காரி​களிடம் தெரிவிக்​கு​மாறு இந்திய தூதரிடம் மத்​திய வெளி​யுறவுச் செய​லா​ளர் விக்ரம் மிஸ்ரி வலி​யுறுத்​தி​னார்.

மேலும் இந்​தி​யக் கப்​பல்​கள் பாது​காப்​பாகச் செல்வதற்கான வழி​முறை​களை விரை​வில் மீண்​டும் தொடங்​கு​மாறும் வலி​யுறுத்​தி​னார். இதுகுறித்து இந்தியாவில் உள்ள ஈரானிய உச்ச தலை​வரின் பிர​தி​நிதி டாக்​டர் அப்​துல் மஜித் ஹக்​கீம் இலாஹி கூறும்​போது, “ஈரானுக்​கும் இந்​தி​யா​வுக்​குமான உறவு வலு​வானது. நீங்கள்​ குறிப்​பிடும்​ இந்​தச்​ சம்​பவம்​ குறித்​து எனக்​குத்​ தெரி​யாது. இந்​தப்​ பிரச்​சினைக்​கு விரை​வில்​ தீர்​வு ​காணப்படும்​ என்​று நம்​புகிறோம்​’’ என்​றார்.​ (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .