2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

புட்டினுக்கு டிரம்ப் மனைவி எழுதிய முக்கிய கடிதம்

Editorial   / 2025 ஓகஸ்ட் 17 , மு.ப. 11:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சர்வதேச ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்தது. இதனால் தங்கள் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய ரஷ்யா அதனை கடுமையாக எதிர்த்தது. உக்ரைன் தனது முடிவில் உறுதியாக இருந்ததால், அந்த நாட்டின் மீது ரஷ் யா கடந்த 2022-ம் ஆண்டு தாக்குதலை தொடங்கியது. இந்த தாக்குதல் 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது.

உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்த அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். இதற்காக ரஷ் ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்தார். அதன்படி  அமெரிக்காவின் மத்திய மாகாணமான அலாஸ்காவில் இருநாட்டு தலைவர்களும், சனிக்கிழமை (16) பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டரை மணி நேரம் இந்த பேச்சுவார்த்தை நீடித்தது.

பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ரஷ்ய ஜனாதிபதி புட்டின், "இந்த பேச்சுவார்த்தை முன்பே நடந்திருக்க வேண்டும். தாமதமாக நடந்துள்ளது. ஆனாலும் இது சரியான நேரம். அப்போது ஜோபைடன் இடத்தில் டிரம்ப் இருந்திருந்தால், உக்ரைன் போர் ஏற்பட்டு இருக்காது. இப்போது ஒரு புரிதல் ஏற்பட்டுள்ளது" என்றார்.

பின்னர் பேசிய அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், "எங்களது பேச்சுவார்த்தையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால் எந்த முடிவும் எட்டப்படவில்லை. முடிவு எட்டவேண்டுமானால் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் நான் பேச வேண்டும். அவர் உடன்பாட்டுக்கு ஒத்துக்கொண்டால் அனைத்தும் முடிவுக்கு வரும். இனி எல்லாம் ஜெலன்ஸ்கியின் கையில் உள்ளது" என்றார்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ரஷ்ய ஜனாதிபதி புட்டின் இடையே நடக்கும் பேச்சுவார்த்தை உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் என்று அனைவரும் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் எந்த முடிவும் எட்டப்படாதது ஏமாற்றத்தை கொடுத்துள்ளதாக உலக தலைவர்கள் கருதுகிறார்கள்.

இந்த நிலையில் அமெரிக்க முதல் பெண்மணியும், டிரம்பின் மனைவியுமான மெலனியா டிரம்ப், ரஷ் ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது:-

ஒரு நாட்டின் கிராமப்புறப் பகுதியிலோ அல்லது அற்புதமான நகரத்தின் மையத்திலோ பிறந்திருந்தாலும், ஒவ்வொரு குழந்தையும் தங்கள் இதயத்தில் ஒரே கனவுகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள். அவர்கள் அன்பும், வாய்ப்பும், அபாயத்தில் இருந்து பாதுகாப்பும் வேண்டும் என்று கனவு காண்கிறார்கள்.

பெற்றோர்களாக, அடுத்த தலைமுறையின் நம்பிக்கையை வளர்ப்பது நமது கடமை. தலைவர்களாக, நம் குழந்தைகளைப் பராமரிக்கும் பொறுப்பு, ஒரு சிலரின் வசதிக்கு அப்பாற்பட்டது. ஒவ்வொரு ஆன்மாவும் அமைதியுடன் விழித்தெழ வேண்டும் என்பதற்காகவும், எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும் நாம் பாடுபட வேண்டும் என்பதை மறுக்க முடியாது.

ஒரு எளிமையான ஆனால் ஆழமான கருத்து; நீங்கள் ஒப்புக்கொள்வீர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது என்னவென்றால், ஒவ்வொரு தலைமுறையின் சந்ததியினரும் புவியியல், அரசாங்கம் மற்றும் சித்தாந்தத்திற்கு அப்பாற்பட்ட தூய்மை மற்றும் வெகுளித்தனத்துடன் தங்கள் வாழ்க்கையைத் தொடங்குகிறார்கள்.

இன்றைய உலகில், சில குழந்தைகள் சிரிப்பைச் சுமக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர். நீங்கள் தனி ஒருவராக அவர்களின் மென்சிரிப்பை மீட்டெடுக்க முடியும்.

இந்தக் குழந்தைகளின் வெகுளித்தனத்தைப் பாதுகாப்பதன் மூலம் நீங்கள் ரஷ்யாவிற்கு மட்டும் சேவை செய்வதை விட அதிகமாக மனிதகுலத்திற்கு சேவை செய்ய முடியும். இத்தகைய துணிச்சலான யோசனை அனைத்து மனிதப் பிரிவினைகளையும் கடந்து செல்கிறது. இந்தக் கண்ணோட்டத்தை ஒரு பேனாவால் செயல்படுத்தத் தகுதியானவர் நீங்கள் புட்டின். இதுதான் நேரம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X