ஈரானில் இவ் வருடம் ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை சிறுபான்மையினர் 105 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர் என ஐநா வருத்தம் தெரிவித்துள்ளது.
அண்மையில் ஜெனிவாவில் நடைபெற்ற மனித உரிமைகளுக்கான பேரவை கூட்டத்தின் போதே ஐநா இதனைத் தெரிவித்துள்ளது.
மேலும் ஈரானில் அவசியமில்லாமல் மரண தண்டனைகள் விதிக்கப்படுவது பற்றிய அறிக்கையொன்றையும் இதன் போது ஐநாவின் பொது செயலாளரான ஆண்டனியோ குட்டரஸ் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த அறிக்கையில் ” ஈரானில் கடந்த 2020 ஆம் ஆண்டு 260 பேரும், கடந்த வருடத்தில் 310 பேரும் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

அதே போல் இந்த வருடம் ஜனவரி மாதத்திலிருந்து மார்ச் மாதம் வரை சிறுபான்மையினர் 105 பேர் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.
அதிலும் ஈரானில் சிறுபான்மையினரே அதிகமாக தூக்கிலிடப்படுகின்றனர்.
அத்துடன் கடுமையான குற்றங்கள் செய்யாதவர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்படுகிறது ” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஈரானில் நியாயமான முறையில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதில்லை எனவும், சர்வதேச சட்டத்தை மீறி சிறுவர்களுக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவது தொடர்கின்றது என்றும் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
எனினும், இக்குற்றச் சாட்டுக்களுக்கு ஈரான் மறுப்புத் தெரிவித்துள்ளதுடன், இது ஒரு தலைப்பட்சமான குற்றச்சாட்டு என்றும் தெரிவித்துள்ளது.