2025 ஜூலை 09, புதன்கிழமை

புத்தளத்தில் ’டச்சுப் பாலம்’ திறந்துவைப்பு

R.Tharaniya   / 2025 ஜூலை 08 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் மாவட்டத்தின் மதுரங்குளி – தொடுவா பிரதான வீதியின் கடையாமோட்டை (டச்சுப் பாலம்) பகுதியில் உள்ள புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பாலம் அரசியல் பிரமுகர்களால் மக்கள் பாவனைக்காக திங்கட்கிழமை (07) அன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

மதுரங்குளி பிரதேசத்தில் மிக நீண்ட கால வரலாற்றைக் கொண்ட மிகவும் பழமை வாய்ந்த குறித்த பாலம் நீண்ட காலமாக உடைந்து பழுதடைந்து காணப்பட்டமையினால் இந்த பாலத்தின் ஊடாக நாளாந்தம் போக்குவரத்து மேற்கொள்ளும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும், நூற்றுக்கணக்கான வாகன சாரதிகளும் பெரிதும் சிரமத்திற்கு முகம் கொடுத்து வந்தனர்.

இந்த நிலையில், குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட போதிலும், அவை புனரமைக்கப்படாமல் இடை நிறுத்தப்பட்டிருந்தது.

எனினும், இந்த வருடம் மார்ச் மாதம் முதல் பாலத்தின் புனரமைப்பு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதுடன், 30 மீட்டர் நீளமும், 9.2 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் பாலத்தின் நிர்மாணப் பணிகளுக்கான பொது நிர்வாக , மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக நெதர்லாந்து அரசாங்கம் 191 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்திருந்தது.

இந்தப் புதிய பாலத்தின் திறப்பு விழா நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான கயன் ஜானக, முஹம்மது பைஸல், புத்தளம் மாவட்ட செயலாளர் எச்.எம்.எஸ்.பி.ஹேரத், கற்பிட்டி பிரதேச சபைத் தலைவர் ஏ.எஸ்.எம். ரிகாஸ், பிரதித் தலைவர் சமன் குமார, மதுரங்குளி வர்த்தக சங்கத் தலைவர் எம்.எஸ்.ரி.அமான் , மதுரங்குளி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் காமினி விக்ரமசிங்க உட்பட

புத்தளம், கற்பிட்டி ஆகிய பிரதேச சபைகளின் ஆளும் கட்சி உறுப்பினர்கள்,பொறியியலாளர்கள், பொதுமக்கள் என பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர்.

நீண்ட காலமாக இந்தப் பிரதேசத்தில் காணப்பட்ட டச்சுப் பாலம் பழுதடைந்தமையினால், மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வந்ததாகவும்,எனினும் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் நான்கு மாதங்களில் அதற்கான தீர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைஸல் இதன்போது தெரிவித்தார்.

மக்களின் தேவைகளை உணர்ந்து குறுகிய காலத்திற்குள் இந்தப் பாலத்தின் புனரமைப்பு பணிகளை நிறைவு செய்து கொடுப்பதற்கு உதவிய நெதர்லாந்து அரசு மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க உட்பட இதற்காக முயற்சி செய்த அரசியல் பிரமுகர்கள், அரசாங்கத்தின் அதிகாரிகள், பொறியியலாளர்கள், மதுரங்குளி வர்த்தக சங்கம் உள்ளிட்ட தனவந்தர்கள் அனைவருக்கும் பொதுமக்கள் சார்பாக நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், முந்தைய அரசாங்கங்களைப் போல அன்றி, செலவுகளை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த பாலத்தின் திறப்பு விழா நிகழ்வை ஆடம்பரமின்றி,மிகவும் எளிமையாக நடத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், மீன்பிடி, தும்பு ஏற்றுமதி, விவசாயம் மற்றும் கைத்தொழில் என பல துறைகளில் இந்தப் பிரதேசம், இலங்கை அந்நிய செலாவணியை பெறுவதற்கு பெரும் பங்காற்றி வரும் நிலையில், இன்னும் பல அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கும் கற்பிட்டி சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம் எனவும் கூறினார்.

குறித்த பாலத்தின் நிர்மாணப்பணிகள் முன்னெடுக்கப்பட்ட போது, மக்களின் போக்குவரத்துக்காக மதுரங்குளி வர்த்தக சங்கம் உட்பட தனவந்தர்களின் நிதிப் பங்களிப்பு பாலத்திற்கு அருகில் தற்காலிக வீதி ஒன்றும் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ரஸீன் ரஸ்மின்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .