R.Tharaniya / 2025 ஜூன் 15 , மு.ப. 09:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலையில் உள்ளூராட்சி மன்றங்களில் இணைந்து ஆட்சியமைப்பதற்காக ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின்(சங்கின்) கோரிக்கைகள் அனைத்திற்கும் உடன் பட்டுள்ளோம் என்று பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் சனிக்கிழமை (14) அன்று ஊடகங்களுக்குகருத்து தெரிவித்தார்.
திருகோணமலையில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்காக அவர்களின் அனைத்து கோரிக்கைகளுக்கும் தமிழரசுக் கட்சி பல விட்டுக் கொடுப்புகளைச் செய்து உட்பட்டுள்ளது.தற்போது அவர்களுடைய பதிலுக்காக காத்திருக்கிறோம்.
மாவட்டத்தில் உள்ள சில உள்ளூராட்சி மன்றங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்ட தமிழரசுக் கட்சியானது எவ்வாறு ஆட்சியமைக்கப் போகின்றது என்பது தொடர்பாக கட்சி அலுவலகத்தில் வைத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
திருகோணமலை மாநகர சபை, திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபை மற்றும் மூதூர் பிரதேச சபை ஆகியவற்றில் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் சேர்ந்து ஆட்சியமைப்பதற்காக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அதில் அவர்கள் திருகோணமலை மாநகர சபையின் பிரதி மேயரையும், நகரமும் சூழலும் பிரதேச சபையில் இரண்டு ஆண்டுகளுக்கு தவிசாளர் பதவியையும், மூதூர் பிரதேச சபையில் இரண்டு ஆண்டுகளுக்கு உப தவிசாளர் பதவியையும் வழங்குமாறு கேட்டிருந்தார்கள்.
நாம் இவை அனைத்தையும் வழங்குவதாக உடன் பட்டிருக்கின்றோம்.இது தொடர்பில் இம்மாதம் 5ஆம் திகதி பாராளுமன்றத்தில் வைத்து பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவரிடமும் கதைத்திருந்தேன் அப்போது 8ஆம் திகதி திருகோணமலைக்கு வந்து கதைப்பதாக தெரிவித்திருந்தார்.
எனினும் வேலைப்பளு காரணமாகவோ என்னவோ அவர் இன்னும் வரவில்லை. பல தடவைகள் தொலைபேசி அழைப்புகளும் மேற்கொண்டிருந்தேன் பதில் எதுவும் இல்லை. ஓய்வாக இருக்கும் போது அழைப்பு எடுப்பார் என நம்புகின்றேன். நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெருகல் பிரதேச சபையில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதில் கடந்த திங்கட்கிழமை அதாவது ஜூன் 09 ஆம் திகதி ஆட்சி அமைத்து விட்டோம்.
அதேபோல் திருகோணமலை மாநகர சபை, பட்டணமும் சூழலும் பிரதேச சபை, மூதூர் பிரதேச சபை ஆகியவற்றில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தனிப் பெரும்பான்மை கட்சியாக வெற்றி பெற்றுள்ளது.
குச்சவெளிப் பிரதேச சபையில் 2018 இல் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் இரண்டு வட்டாரங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்தோம். இம்முறை நான்கு வட்டாரங்களில் வெற்றி பெற்றுள்ளோம்.மேற்படி சபைகளில் ஆட்சி அமைப்பது தொடர்பாக அந்தந்த சபைகளில் உறுப்பினர்களைக் கொண்டுள்ள கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றோம்.
அத்துடன் உள்ளூராட்சி தேர்தல் பரப்புரைக் காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் அண்ணளவாக ஐம்பது சிறு பரப்புரைக் கூட்டங்களில் நான் பங்கு கொண்டிருந்தேன். அனைத்து கூட்டங்களிலும் மக்கள் கேட்ட கேள்வி தேர்தலுக்கு பின்பு தவிசாளர் தெரிவுகள் எப்படி இடம்பெறும் என்பதாகும்.
அதற்கு நான் “ஒவ்வோர் உள்ளூராட்சி சபைக்கும் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி ஜனநாயக முறைப்படி தமக்குள் ஒருவரைத் தெரிவு செய்வர்” என்று கூறியிருந்தேன். மேற்படிக் கருத்தை திருகோணமலையில் உள்ள புத்தி ஜீவிகளும் தமிழ் அரசுக் கட்சியின் நலன் விரும்பிகளும் மிகப் பெரும்பான்மையான கட்சி உறுப்பினர்களும் என்னிடம் வலியுறுத்தி இருந்தார்கள்.
அதற்கமைய வெருகல் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி சேதுராமன் கருணாநிதி என்பவரைத் தவிசாளராகவும், மூதூர் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி செல்வரெத்தினம் பிரகலாதன் என்பவரைத் தவிசாளர் பதவிக்கான தமது வேட்பாளராகவும்,
திருகோணமலை மாநகர சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி கந்தசாமி செல்வராஜா என்பவரைத் தமது முதல்வர் பதவிக்கான வேட்பாளராகவும், பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி துரைராசா தனராஜ் என்பவரைத் தமது தவிசாளர் பதவிக்கான வேட்பாளராகவும் முன்மொழிந்தனர்.
அதேபோன்று குச்சவெளிப் பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் ஒன்று கூடி ஜெகதீசன் நிமலஹாசன் என்பவரைத் தமது தவிசாளர் பதவிக்கான வேட்பாளராகவும் முன்மொழிந்தனர். மேற்படி தெரிவுகள் ஜனநாயக முறைப்படி நடைபெற்றன எனவும் தெரிவித்தார்.
எஸ்.கீதபொன்கலன்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .