2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

இஸ்லாம் பாடநூல்களை மீளப்பெறும் விவகாரம்

Johnsan Bastiampillai   / 2022 ஜனவரி 25 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள இஸ்லாம் பாடப் புத்தகங்கள் சிலவற்றை, மீளப்பெறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளமையும் இதற்கு வெளித்தரப்பின் அழுத்தமே காரணம் எனக் கூறப்படுகின்றமையும், இன்று முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் கரிசனைக்குரிய விவகாரமாக நோக்கப்படுகின்றது. 

வழங்கப்பட்டுள்ள அல்லது வழங்கப்பட்டுக் கொண்டிருக்கும் சிங்கள மொழிமூலத்திலான தரம் 6, 7, 10 மாணவர்களுக்கான இஸ்லாம் பாடநூல்கள், தமிழ் மொழிமூலமான தரம் 6, 10, 11 தர மாணவர்களுக்கான இஸ்லாம் பாடநூல்கள் ஆகியவற்றை மீளப் பெறுமாறே கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பாடசாலைகளுக்கு உத்தியோகபூர்மாக அறிவித்துள்ளதாக அறிய முடிகின்றது.

முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு, பாடநூல்கள் பெருமளவுக்கு விநியோகிக்கப்பட்ட பிற்பாடு, ஏதோ ஒரு தவறைக் கண்டுபிடித்து அல்லது, ஒரு காரணத்தின் அடிப்படையில் பாடநூல்களை மீளப் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டு இருக்கின்றமை கவனிப்புக்கு உரியது.

குறிப்பிட்ட பாடப் புத்தகங்களில், ஒருசில இஸ்லாமிய விடயங்கள் தொடர்பான விடயதானங்களில் திருத்தங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே, இவற்றை மீளப்பெறும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

பாடசாலை பாடப் புத்தகங்களைத் திருத்தி அமைப்பதும் மறுசீரமைப்பதும் காலத்துக்குக் காலம் சில உள்ளடக்கங்களை நீக்கிவிட்டு, புதுப்புது விடயங்களை  உட்சேர்ப்பதும் வழக்கமானது மட்டுமன்றி, அவசியமானதும் ஆகும்.

ஆனால், சமய விடயங்கள் பெரும்பாலும் வரலாற்றுடன் தொடர்புபட்டவை என்பதாலும் இஸ்லாம் உட்பட அனைத்து சமயங்களின் நடைமுறைகளும் தொன்மையானவையுடன் எல்லாக் காலத்திலும் நிலைமாறாத் தன்மை கொண்டவை என்பதாலும், இதில் பெரியளவான மாற்றங்கள் மேற்கொள்ள முடியாது. 

பன்மைத்துவ சமூகங்கள் வாழும் நாடு என்ற வகையிலும், சமய விடயங்களை மிகச் சரியாகப் பிள்ளைகளுக்கு கற்றுத்தர வேண்டும் என்ற அடிப்படையிலும், காலத்துக்கு ஏற்ப சிறுசிறு சரிபார்ப்புகள் மேற்கொள்ளப்படுவது நல்ல விடயமே.

ஆனால், பொதுவாக பாடப் புத்தகங்களில் தவறு இருந்தால் அவை திருத்தப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்படும். இந்த வருடத்தில் தவறுகள் அடையாளம் காணப்பட்டால், அது பெரும்பாலும் அடுத்த வருட நூல்களிலேயே திருத்தப்பட்டிருக்கும். ஏனெனில், அப்பணியை ஒரு குறிப்பிட்ட சில நாள்களுக்குள் செய்து முடிக்க இயலாது.

நிலைமை இப்படியிருக்க, பாடசாலை ஆரம்பித்து, இரு வாரங்களில் கொடுக்கப்பட்ட நூல்களை மீளப் பெறுமாறு அறிவிக்கப்பட்டமையே, முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, ஞானசார தேரர் தலைமையிலான ‘ஒரேநாடு, ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் சிபாரிசுக்கு அமைவாகவே, இந்தப் பாடநூல்களை மீளப் பெற நடவடிக்கை எடுக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பரிமாற்றப்படுகின்றன.

ஆயினும், “இவ்விடயம் தொடர்பில் ‘ஒரேநாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியில் கலந்துரையாடப்பட்டது என்றாலும், இவ்வாறு மீளப் பெறுவதற்கான அறிவுறுத்தல்களையோ சிபாரிசையோ செயலணி வழங்கவில்லை” என்று, செயலணியின் உறுப்பினர் மறுத்துரைத்துள்ளார். இதுவெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்!  

இவ்வருடம் பாடப் புத்தகங்கள் விநியோகிக்கப்பட்ட பிறகே, இதிலுள்ள திருத்தப்பட வேண்டிய  விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளன என்று அனுமானிக்க முடிகின்றது. அப்படியென்றால், தமிழ், சிங்கள மொழி மூலங்களிலான மேற்படி ஆறு புத்தகங்களிலும், இவ்வளவு காலமும் இந்தத் தவறு காணப்பட்டுள்ளது என்பதே அர்த்தமாகும்.

பாடப் புத்தகங்களை, இலங்கை முஸ்லிம்கள் சார்ந்த எந்த அமைப்பும் நேரடியாக அச்சிடுவதில்லை. கல்வி அமைச்சிலும் கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திலும் அதற்கென்று ஒரு கட்டமைப்பு இருக்கின்றது; பரிந்துரைக்கப்பட்ட துறைசார் வளவாளர்கள் உள்ளனர்.

இவர்கள் எல்லோராலும் சரிபார்க்கப்பட்டு, அச்சிடப்பட்டு, விநியோகிக்கப்பட்ட புத்தகங்களில் உள்ள விடயங்களில், தவறுகள் இருக்கின்றன என்ற விடயம், நீண்ட காலத்துக்குப் பின்னரே கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாகவே கருத வேண்டியுள்ளது.

அவ்வாறாயின், மேற்படி பாடப் புத்தகங்களைக் கடந்த கல்வியாண்டுகளில் கற்ற மாணவர்கள், தவறான விடயங்களைக் கற்றுக் கொண்டிருக்கின்றார்களா என்ற வினா எழுகின்றது? அப்படியாயின், அதற்குக் காரணமான முஸ்லிம் துறைசார்ந்தவர்களும் கல்வி அமைச்சின் அதிகாரிகளும் இதற்குக் கூறும் பதில்தான் என்ன என்ற கேள்வியும் உள்ளது.

பாடப் புத்தகங்கள் என்பவை, மாணவர்கள் வெறுமனே படித்துவிட்டு, பரீட்சைக்கு விடையளிப்பதோடு சம்பந்தப்பட்ட விடயமல்ல. முழுக் கல்வியுமே மாணவர்களின் வாழ்க்கையோடு கலந்து விடுகின்றது. அதுதான் கல்வியின் உண்மையான நோக்கமாகவும் இருக்க வேண்டும்.

அந்தவகையில், இலங்கையில் பௌத்த மதத்தை அடிப்படையாகக் கொண்ட வரலாறு, மாணவர்களுக்கு புகட்டப்பட்ட அளவுக்கு, தமிழ், முஸ்லிம் மக்கள் இந்த நாட்டுக்குச் செய்த தியாகங்கள், பாடவிதானங்களில் பெருமளவுக்கு உள்ளடக்கப்படவில்லை. பல வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளன என்பது, நீண்டகாலமாக முன்வைக்கப்படுகின்ற விமர்சனமாகும்.

எவ்வாறிருப்பினும், தவறுகள் அடையாளம் காணப்படும்போது, அதைத் திருத்துவதுதான் சிறந்தது. அந்தவகையில், உண்மையிலேயே பிழையைத் திருத்துவதற்கு கல்வி வெளியீட்டுத் திணைக்களம் இந்த நடவடிக்கையை எடுத்திருக்குமாயின், அது பாராட்டப்பட வேண்டும்.

ஆனால், இவ்வளவு காலமும் தவறுடன் இந்நூல் பிரசுரமாகியிருந்ததை, கல்வி வெளியீட்டுத் திணைக்களமோ கல்வி அமைச்சில் இருந்த அதிகாரிகளோ இஸ்லாம் பாட ஆசிரியர்களோ கண்டறியவில்லையா? அப்படியென்றால், யார் இதற்குப் பொறுப்பாளிகள்?

‘இது அவ்வளவு பெரிய தவறு இல்லை’ என்றால், இந்த நூல்களை அதிரடியாக மீளப் பெற்றிருக்கத் தேவையில்லை. நூல்களில் திருத்தங்களை மேற்கொண்டு, மீள்பதிப்பை அச்சிட்டு விட்டு, அடுத்த ஆண்டுக்கு விநியோகித்திருக்க முடியும்.

அவ்வாறில்லாமல். இப்போது திடுதிடுப்பென தவறுகள் அடையாளம் காணப்படுவதும், அவசரமாக மீளப் பெறப்படுவதுமே இதற்குப் பின்னால் வேறு மறைமுக அழுத்தம் இருக்கக் கூடும் என்ற சந்தேகத்தை முஸ்லிம்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

இப்பாடப் புத்தகங்களில் உள்ளடங்கியுள்ள விடயங்கள், தற்போது தவறு என அடையாளம் காணப்படுகின்றது என்றால், இவ்வளவு காலமும் அதைச் சரி எனக் கூறியவர்கள் யார்? அதற்கு மேலொப்பம் இட்ட அதிகாரிகள் யார்?

அவர்கள் முதற்கொண்டு, எந்தக் கேள்வியும் இல்லாமல் கற்பித்த இஸ்லாம்பாட ஆசிரியர்கள் வரை, எல்லோருமே இதற்குப் பொறுப்புக் கூற வேண்டும். சமயம் பற்றிய விடயம், இளைய தலைமுறையினருக்கு மிகச் சரியாகக் கடத்தப்படாமல் விட்டதற்கு, அவர்கள் காரணமாகி இருக்கின்றார்கள்.

அதற்காக, தவறுகளைத் தவறுகளாக விட்டு வைக்க முடியாது. பெரிய அதிகாரிகள் தொகுத்த பாடவிதானம் என்பதற்காக, இஸ்லாத்தை பிழையாக மாணவர்கள் கற்பதற்கு வழிவிட முடியாது. தவறுகள் யார் செய்தார்கள் என்பது ஒருபுறமிருக்க, அவை திருத்தப்படுவது அவசியமாகும்.

அந்த வரிசையில், கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அதைத் திருத்த எடுத்த முயற்சியையும் பாராட்ட வேண்டும். சமகாலத்தில், இந்த விடயதானங்கள் தவறு என்றால், அதற்குக் காரணமான சகலருக்கும் எதிராக நடவடிக்கை எடுக்கப்பதும் கட்டாயமானது.

மறுபுறத்தில், இந்த உத்தேச பிழைதிருத்தம், மறுசீரமைப்பு என்பன எந்தவித உள்நோக்கங்களும் இல்லாதவை ய என்பதை யார் உறுதிப்படுத்துவது? திருத்திய பதிப்பில் எல்லாம் நூறுசதவீதம் சரியாக இருக்கும் என்பதற்கு யார் உத்தரவாதம் தருவது?

எனவே, இதுபற்றி கல்வி அமைச்சும் கல்வி வெளியீட்டுத் திணைக்களமும் தெளிவான விளக்கங்களை அளிக்க வேண்டும். இந்தத் தவறான பாடநூல்களைக் கற்ற மாணவர்கள், அவர்களது பெற்றோர், சமூக ஆர்வலர்கள் என சமூகத்தின் எல்லா மட்டத்தினரும் விளங்கிக் கொள்ளும் விதத்தில் இவ்விளக்கம் இருக்க வேண்டும்.

அதுபோல, கல்வி வெளியீட்டுத் திணைக்களத்துக்கு இஸ்லாம் தொடர்பான பாடவிதானங்களைத் தொகுத்தளிக்கின்ற வளவாளர்கள், திணைக்களம், அமைச்சிலுள்ள முஸ்லிம் அதிகாரிகள் முதற்கொண்டு அதிபர், ஆசிரியர்கள் வரை, இதுபற்றிய ஆரோக்கியமான கருத்துகளை முன்வைக்க வேண்டும்.

தமது சம்பள அதிகரிப்புக்காக போராடிய கல்விச் சமூகம், மாணவர்களுக்கு சரியான, தவறற்ற அறிவு கிடைப்பதை உறுதிப்படுத்தவும் முன்வர வேண்டும். ‘எங்களுக்கென்ன, கல்வி வெளியீட்டுத் திணைக்களம் அனுப்புகின்ற புத்தகங்களில் உள்ள விடயதானங்களை, எந்தச் சுய ஆய்வும் இன்றி மாணவர்களுக்கு புகட்டிவிட்டுப் போவோம்’ என்று நினைப்பவர்கள், நல்ல ஆசிரியர்களாக இருக்க முடியாது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X