Thipaan / 2015 செப்டெம்பர் 22 , பி.ப. 10:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென் பகுதியில் 1971 மற்றும் 1988-89ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற இரண்டு கிளர்ச்சிகளின் போது, சாதாரண மக்கள் உட்பட ஆயிரக் கணக்கானோர் கொல்லப்பட்டு, வீதிகளிலும் ஆறுகளிலும்
தூக்கியெறியப்பட்டார்கள். அந்த எண்ணிக்கை 64 ஆயிரம் எனக் கூறிய அப்போது எதிர்க்கட்சியில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட பலர், அதற்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வாசுதேவ நாணயக்கார ஆகியோர், அச் சடலங்களின் படங்களை எடுத்துக் கொண்டு ஜெனீவாவுக்குப் புறப்பட்டார்கள். ஆனால், அதே மஹிந்த உட்பட தென் பகுதியில் பெரும்பாலானவர்கள், புலிகளின் கிளர்ச்சியின் போது வட பகுதியில் சாதாரண மக்கள் எவரும் கொல்லப்படவில்லை என்கிறார்கள்.
அதேபோல் தான், தமிழர் தரப்பிலும் பிரச்சினைகள் அணுகப்படுகின்றன. போரின் இறுதிக் கட்டத்தில், கிழக்கு மாகாணத்தை இராணுவத்தினர் கைப்பற்றிக் கொள்ளும் போது, பாரியளவில் சாதாரண மக்கள் கொல்லப்படவில்லை. ஆங்காங்கே ஒருவர் இருவர் தான் கொல்லப்பட்டார்கள். ஆனால், வடக்கில் வன்னிப் பிராந்தியத்திலேயே வாழ்ந்த மக்கள் அனைவரையும் புலிகள் தம்மோடு அழைத்துச் சென்று அவர்களைக் கேடயமாகப் பாவித்தமையினால், பாரியளவில் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டன. அதனை தமிழ்த் தரப்பினர் ஏற்றுக் கொள்வதில்லை.
இவ்வாறு இரு தரப்பினரும் பிரச்சினைகளை அணுகும் நிலையில், தான் நாடு மனித உரிமை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கும் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் முயற்சி செய்கிறது. இந்த நிலையில் தான், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகரின் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அறிக்கை வெளியாகியுள்ளது.
இந்த அறிக்கை, வடக்கிலும் தெற்கிலும் அரசியல்வாதிகளை ஏமாற்றிவிட்டதைப் போலவே, மகிழ்ச்சியடையவும் செய்துள்ளது. வடக்கில் இன அழிப்பு இடம்பெற்றதாகப் பல தமிழ் அமைப்புக்கள் கூறி வருவதை அவ்வறிக்கை ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால், வடக்கில் பலர் ஏமாற்றமடைந்திருப்பார்கள். குறிப்பாக, இலங்கையில் போர் காலத்தில் இன அழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்றதாக வட மாகாண சபையில் தீர்மானமொன்றை நிறைவேற்றிய வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் ஏமாற்றமடைந்திருப்பார்கள்.
தென் பகுதியைப் பொறுத்தவரை, போர்க் காலத்தில் நாட்டை ஆட்சி செய்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மட்டுமல்லாது தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்களும் இதனால் மகிழ்ச்சி அடைந்திருப்பார்கள். இன ஒழிப்பு இடம்பெற்றுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தால், போரின் போது அதிகாரத்தில் இருக்காவிட்டாலும் அந்தக் குற்றச்சாட்டிலிருந்து நாட்டைக் காப்பாற்றும் பொறுப்பை தற்போதைய அரசாங்கத்தின் தலைவர்கள் ஏற்க வேண்டியிருக்கும். இப்போது அவர்களும் தப்பித்துவிட்டார்கள்.
போரின் போது குறிப்பிடத்தக்க அளவில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இடம்பெற்றதாக போர் காலத்தில் கூறப்படவில்லை. புலிகளினால் நடத்தப்பட்ட தமிழ்நெட் போன்ற செய்திச் சேவைகளாவது அவ்வாறு கூறவில்லை. போருக்குப் பின்னர் அவ்வாறானதோர் பிரச்சினை இருப்பதாக சில தமிழ்த் தலைவர்களும் சிவில் சமூக உறுப்பினர்களும் கூறியிருந்தார்கள். ஆனால், போரின் போது பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் ஒரு போர் ஆயுதமாக பாவிக்கப்பட்டதாக இந்த அறிக்கை மூலமாகவே முதன் முறையாக கூறப்பட்டுள்ளது.
எந்தவொரு போரின் போதும் கிளர்ச்சியின் போதும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதில்லை. இலங்கையில் நடைபெற்ற போரின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் குற்றச் செயல்களைப் பற்றிக் குறிப்பிடுகையில், ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சம்பிக்க ரணவக்கவும் 2010ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், ஞாயிறு லங்காதீப பத்திரிகைக்கு தாம் எழுதி வரும் பத்தியொன்றில் அவ்வாறு கூறியிருந்தார்.
ஆனால் இது, இலங்கையில் போர் ஆயுதமாக பாவிக்கக் கூடிய அளவில் பயங்கரமாக இடம்பெற்றதாக இப்போது தான் கூறப்படுகிறது. போர்க் காலத்தில் இலங்கையில் இயங்கிய சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம் ஐ.நா. அலுவலகம் போன்ற சர்வதேச நிறுவனங்களும் போர்க் காலத்திலோ அல்லது அதற்குப் பின்னரோ அவ்வாறு கூறவில்லை.
போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்களைப் பற்றி விசாரணை செய்வதற்காக கலப்பு நீதிமன்றம் ஒன்றை உருவாக்க வேண்டும் என ஐ.நா. மனித உரிமை உயர் ஸ்தானிகர் இளவரசர் ஷெய்ட் ராத் அல் ஹுஸைன் தமது விசாரணை அறிக்கையில் சிபாரிசு செய்திருக்கிறார். அந்த நீதிமன்றம், அறிக்கையில் குறிப்பிடப்படும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்களை, தனித் தனியாக விசாரிக்குமா என்பதும் விசாரிக்க முடியுமா என்பதும் சந்தேகமே. ஏனெனில், அதற்காக பெண்கள் சாட்சியாளர்களாக வருவார்களா என்பது சந்தேகமாக இருக்கிறது. அவ்வாறாயின் இந்தக் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படுமா?
அரசாங்கம், போர் நடைபெற்ற பகுதிகளுக்கான உணவு விநியோகத்தையும் போர் ஆயுதமாகப் பாவித்ததாக இந்த அறிக்கை கூறுகிறது. போர்க்; காலத்தில் வட பகுதியில் சிலவேளைகளில் ஆங்காங்கே உணவுத் தட்டுப்பாடு நிலவியதாகக் கூறப்பட்ட போதிலும் உணவு விநியோகம், போர் ஆயுதமாக பாவிக்கப்படுவதாக போர் காலத்தில் தமிழ்நெட் செய்திச் சேவையாவது கூறவில்லை. சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் அகதிகளுக்கான ஐ.நா. உயர் ஸ்தானிகராலயம் போன்ற சர்வதேச நிறுவனங்களும் இதுவரை அவ்வாறு கூறவில்லை.
மாறாக, உலகிலுள்ள அரசாங்கங்களுள், கிளர்ச்சிக்காரர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளுக்கு உணவு விநியோகம் செய்த அரசாங்கம் தமது அரசாங்கமே என மஹிந்த அரசாங்கத்தின் தலைவர்கள் கூறி வந்தனர்.
ஆனால், இப்போது அது தொடர்பாக முன்னர் சுமத்தப்படாத ஒரு குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. உத்தேச கலப்பு நீதிமன்றத்திலோ அல்லது அரசாங்கம் திட்டமிட்டுள்ள உள்ளக நீதிமன்றத்திலோ அதனை நிரூபிக்கப்போவது யார் என்பது தெளிவாகவில்லை. ஆனால், யார் நிரூபிக்கப் போனாலும் அரசாங்கம் கட்டாயம் அதனை எதிர்கொண்டேயாக வேண்டும்.
உள்நாட்டுப் போர்களின் போது, பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் உணவு விநியோகமும் போர் ஆயுதங்களாக பாவிக்கப்படுவது என்பது இலங்கை விடயத்தில் மட்டும் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டல்ல. இதற்கு முன்னர் ஆபிரிக்க கண்டத்தில் சியராலியோன் போன்ற நாடுகளில் இடம்பெற்ற பல உள்நாட்டுப் போர்களின் போதும் குறிப்பிட்ட நாடுகளின் அரசாங்கங்கள் இவற்றை ஆயுதமாகப் பாவித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளன.
எனவே, இந்த விடயங்கள் உள்நாட்டுப் போர்களின் போது சர்வதேச நிறுவனங்களால் கவனத்திற் கொள்ளப்படுகின்றன. ஆனால், அவ்வாறிருந்தும் இதற்கு முன்னர் இலங்கை விடயத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படவில்லை.
இப்போது போர்க் காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக சாதகமானதோர் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. குறிப்பாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினதும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினதும் புதிய அரசாங்கம், மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தைப் போல், போரின் போது எவ்வித கொடூரச் செயலும் இடம்பெறவில்லை என்று கூறுவதில்லை. இந்த அரசாங்கம், கடந்த ஜனவரி மாதம் பதவிக்கு வந்த உடன் தாமாகவே முன்வந்து போர் காலச் சம்பவங்கள் பற்றிய குற்றச்சாட்டுக்களை விசாரிக்க உள்ளக நீதிமன்றம் ஒன்றை நிறுவுவதாக சர்வதேச நிறுவனங்களுக்கு அறிவித்து இருந்தது.
அதேவேளை, இப்போது சில சிங்கள தேசியவாதிகளும் போரின் போது இடம்பெற்ற சம்பவங்களைப் பற்றி விசாரணை செய்வதை எதிர்க்கவில்லை. மாகாண சபைச் சட்டத்தினால் இணைக்கப்பட்டு இருந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பிரிப்பதற்கான வழக்கில், தேசியவாதிகளின் சட்டத்தரணியாக வாதாடிய கோமின் தயாசிறி -போரின் போது இடம்பெற்ற சட்ட விரோதச் சம்பவங்களைப் பற்றி விசாரணை செய்ய வேண்டும் என, தாம் போர் முடிந்த உடன் அப்போதைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொண்டதாக கடந்த வாரம் தொலைக்காட்சி கலந்துரையாடல் ஒன்றின் போது கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் இந்தக் குற்றச்சாட்டுக்களைப் பற்றி விசாரணை செய்வது தொடர்பாக வாய் திறக்கவே, சாதாரண மக்களும் ஊடகங்களும் அச்சப்பட்ட போதிலும் இப்போது சிங்கள மக்களிடையே பலர் அவை விசாரிக்கப்பட வேண்டும் என பகிரங்கமாகவே கூறி வருகிறார்கள். ஐக்கிய தேசியக் கட்சி கடந்த ஜனவரி மாதம் பதவிக்கு வந்தது முதல் அந்த நிலைப்பாட்டிலேயே இருந்தது. அப்போது அதனை எதிர்த்த
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் இப்போது அரசாங்கத்தில் இணைந்துள்ளதால் மௌனத்தின் மூலம் தமது சம்மதத்தைத் தெரிவித்து வருகிறார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ, கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் விமல் வீரவன்ச போன்ற ஒரு சிலர் மட்டுமே இப்போது தேசிய விசாரணையோ சர்வதேச விசாரணையோ நடத்தப்படக் கூடாது என்று கூறி வருகிறார்கள்.
இவ்வாறு நாட்டில் பெரும்பாலானோர், போர்க் கால குற்றச்சாட்டுக்களைப் பற்றி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துள்ள போதிலும் நடத்துவது எவ்வாறான விசாரணை என்பது இன்னமும் சர்ச்சையாகவே இருக்கிறது. அரசாங்கம், உள்நாட்டு விசாரணையொன்றை நடத்துவதாக கடந்த ஜனவரி மாதம் முதல் கூறி வருகிறது. கடந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்த தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலும் அந்தக் கருத்தை ஏற்றுக் கொண்டு அதற்காக இம்மாதம் ஐ.நா. மனித உரிமை பேரவையில் பிரேணையொன்றை சமர்ப்பிப்பதாகக் கூறினார்.
அவ்வாறாயின் அந்த உள்ளக நீதிமன்றத்துக்கு, வெளிநாட்டு நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் என அப்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்
எம்.ஏ. சுமந்திரன் கூறியிருந்தார். அந்தக் கருத்தை ஏற்பதைப் போல், உள்ளக விசாரணையொன்றை நடத்தும் அளவுக்கு இலங்கையின் நீதித்துறை பலமானதாக இல்லை என்றும் அது ஊழல் மலிந்த துறையாக இருப்பதாகவும் கூறும் மனித உரிமை உயர்ஸ்தானிகர் ஹுஸைன், போர்க் கால குற்றச்சாட்டுக்களை விசாரணை செய்வதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச நீதிபதிகள் மற்றும் சட்டத்தரணிகளைக் கொண்ட சிறப்பு கலப்பு நீதிமன்றமொன்றை உருவாக்க வேண்டும் என தமது அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்.
ஆனால், உள்ளக விசாரணையொன்றை நடத்துவதென்ற தமது நிலைப்பாட்டில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில் தான், இலங்கை தொடர்பாக அமெரிக்கா சமர்ப்பிக்கும் என நிஷா பிஸ்வால் குறிப்பிட்ட பிரேரணை இம் மாத முடிவில் சமர்ப்பிக்கப்பட இருக்கிறது. அதிலும் கலப்பு நீதிமன்றம் என்ற கருத்தே இருக்கலாம் எனவும் இப்போது தகவல்கள் வருகின்றன.
ஆயினும், பிற நாடுகள் தொடர்பாக பகிரங்கமாகவும் உத்தியோகபூர்வமாகவும் தாம் வெளியிட்ட கருத்தொன்றை அமெரிக்க அரசாங்கம் இலகுவில் மாற்றிக் கொள்வதில்லை. எனவே, அமெரிக்கப் பிரேரணையின் மூலமும் உள்ளக விசாரணையே வலியுறுத்தப்படலாம் எனவும் ஓர் அபிப்பிராயம் நிலவுகிறது.
அதேவேளை, பிற நாடுகள் விடயத்தில் அமெரிக்கா கூறுவதையே ஐ.நாவின் நிறுவனங்கள் செய்கின்றன என்றும் இலங்கை விடயத்தில் மனித உரிமைப் பேரவையின் செயற்பாடுகள் அனைத்தும் 2010ஆம் ஆண்டு அமெரிக்கா முன்வைத்த பிரேரணையின் அடிப்படையிலேயே அமைந்திருக்கின்றன என்றும், எனவே அமெரிக்கா முன்னர் எதனை கூறிய போதிலும் இறுதியில் அந்நாடும் கலப்பு நீதிமன்றம் என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளும் என்றும் மற்றொரு அபிப்பிராயம் நிலவுகிறது.
இலங்கையின் நீதித்துறையின் நம்பகத்தன்மை தொடர்பாக, இளவரசர் ஹுஸைன் கூறும் கருத்தை மறுப்பது கடினமாக இருக்கிறது. இலங்கையின் நீதித்துறையானது மிகமோசமான முறையில் ஊழல் மலிந்ததாக இருக்கிறது. உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஓய்வு பெற்றதன் பின்னர், வெளிநாட்டுத் தூதுவர்களாக நியமிக்கப்படுகிறார்கள். இதனால் அவ்வாறு நியமிக்கப்பட்டவர்களின் செயற்பாடுகளைப் பற்றி மட்டுமல்லாது, நாளை அவ்வாறு நியமிக்கப்படக் கூடிய அதற்காக காத்திருக்கும் தற்போதைய நீதியரசர்களினது செயற்பாடுகளும் சந்தேகத்துக்குள்ளாகிறது.
கௌரவமான முறையில் நீதித்துறையில் கடமையாற்றியவர் என அரசியல் எதிரிகளாலும் பெயர் பெற்ற முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரும் தற்போதைய வட மாகாண முதலமைச்சருமான விக்னேஸ்வரன் -நீதியரசர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உடன் கூறிய ஒரு கூற்று, நீதித் துறையின் சுயாதீனத்தன்மை எந்தளவு என்பதை எடுத்துக் காட்டுகிறது. 'பென்ச்சில்' (நீதியரசர் ஆசனத்தில்) இருப்பவரைப் பார்த்தால் கிடைக்கப் போகும் தீர்ப்பை முன்கூட்டியே கூறலாம் என அவர் அப்போது கூறியிருந்தார்.
சர்வதேச பிரமுகர்களின் மேற்பார்வையில், திருகோணமலை மாணவர்களின் படுகொலை மற்றும் மூதூர் தொண்டர் அமைப்பினரின் படுகொலை உட்பட 15க்கும் மேற்பட்ட பாரிய குற்றச் செயல்களைப் பற்றி விசாரணை செய்வதற்காக, மஹிந்தவின் அரசாங்கம் ஆணைக்குழுவொன்றை நியமித்தது. ஆனால், அந்தப் பிரமுகர்கள் விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக் கூறி இடை நடுவே வெளியேறிவிட்டார்கள்.
அரசாங்கம் முன்வைத்த திவிநெகும சட்டமூலத்துக்கு மாகாண சபைகளின் அங்கிகாரத்தைப் பெற வேண்டும் என தீர்ப்பு வழங்கியமைக்காக முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க பதவி நீக்கம் செய்யப்பட்டார். அப்போது
ஷிராணிக்கு சாதகமாக சில முடிவுகளை எடுத்த நீதிச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் மிரட்டப்பட்டார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா - அரசியல் ரீதியாக தமக்கு சவால் விடுத்தமைக்காக அவர் இராணுவத் தளபதியாக இருக்கும் போது அவரால் பாதிக்கப்பட்டவர்களைக் கொண்ட இராணுவ நீதிமன்றம் ஒன்றை அமைத்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவருக்குச் சிறைத் தண்டனை விதித்தது மட்டுமன்றி அவரது பதக்கங்களையும் ஓய்வூதியத்தையும் கூடப் பறித்தார்.
புலிகளுக்கு சுமார் 30 ஆண்டுகளாக ஆயுதங்களை வழங்கியவரும் பிரபாகரனுக்குப் பின்னர் புலிகள் அமைப்பின் தலைமைப் பதவியை ஏற்றவருமான கே.பி. என்றழைக்கப்படும் குமரன் பத்மநாதனுக்கு எதிராக வழக்குத் தொடர இதுவரை ஆதாரங்களும் கிடைக்கவில்லை என சட்ட மா அதிபர் அண்மையில் கூறியிருந்தார். புலிகள் சார்பாக ஊடகங்களுக்கு பல்லாயிரக் கணக்கில் அறிக்கைகளை வெளியிட்ட தயா மாஸ்டர், புலிகளுக்காக செயற்பட்டார் என்பதற்கு ஆதாரம் இல்லை என இரகசிய
பொலிஸார் நீதிமன்றத்துக்குத் தெரிவித்தனர். ஆனால், இரண்டே இரண்டு கட்டுரைகளில் புலிகளுக்குச் சாதகமாக கருத்துத் தெரிவித்து இருந்தார் என்பதற்காக ஊடகவியலாளர் திஸ்ஸநாயகத்துக்கு 20 வருட கடூழியச் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
எனவே, நீதித்துறை ஜனாதிபதியின் விருப்பத்துக்கு இணங்க செயற்பட்டதாகவே அப்போது கூறப்பட்டது. இந்த நிலையில் இளவரசர் ஹுஸைன், இலங்கையில் நீதித்துறை உள்ளக விசாரணைக்கு பொருத்தமற்றது என்று கூறுவதில் ஆச்சரியப்படத்தக்க எதுவும் இல்லை.
ஆனால், இதற்கு மாறான சம்பவங்கள் இடம்பெற்றதும் உண்டு. மேற்படி 15 குற்றச் செயல்களைப் பற்றிய விசாரணையின் போது சட்ட மா அதிபராக இருந்து வெளிநாட்டு பிரமுகர்களைச் சினம்கொள்ளச் செய்த சி.ஆர்.டி. சில்வாவே கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், அந்த ஆணைக்குழுவின் அறிக்கை சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த அறிக்கையின் சிபாரிசுகளை அமுலாக்குமாறே, 2012ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையில் சமர்ப்பித்த பிரேரணையின் மூலம் இலங்கைக்கு அமெரிக்கா கூறியது.
தீவிர சர்வதேச கண்காணிப்பின் காரணமாகவே நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அவ்வளவாக அரசியலால் பாதிக்கப்படவில்லை. எனவே, அரச தலைவர்கள் தலையிடாவிட்டால், அதேவேளை சர்வதேச சமூகம் தீவிரமாக கண்காணிப்பதாக இருந்தால் உள்ளக விசாரணை மூலமும் நீதி வழங்க முடியும். தற்போதைய அரசாங்கம் அந்த உத்தரவாதத்தை மனித உரிமை உயர் ஸ்தானிகருக்கு வழங்கும் முயற்சியில் தோல்வி கண்டால் நிச்சயமாக கலப்பு நீதிமன்றம் வந்தே தீரும்.
2 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago
7 hours ago
8 hours ago