Thipaan / 2015 டிசெம்பர் 05 , மு.ப. 05:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹமட் பாதுஷா
கிழக்கு மாகாணத்தில் தனி முஸ்லிம் அலகை நிறுவுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. 'அண்மையில், அமைச்சர்களான ரவூப் ஹக்கீமும் ரிஷாட் பதியுதீனும் ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதுவர் சமந்தா பவரை சந்தித்தபோது, 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் அமெரிக்காவின் தலையீட்டை அவர்கள் கோரியுள்ளமையானது, முஸ்லிம்கள், அரசாங்கத்துடன் தனி முஸ்லிம் அலகு ஒன்றைப் பெறுவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொண்டிருக்கலாம்' என்ற சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது என்றும் அவ்வியக்கம் கூறியுள்ளது.
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ஹக்கீமும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டும் சிறுபான்மை மக்களின் நலன்களை முன்னிறுத்தி, 13ஆவது திருத்தத்தை அமுலாக்குவது தொடர்பில் சமந்தா பவரிடம் கோரிக்கைகளை முன்வைத்திருப்பார்களேயானால் அது மிகவும் சந்தோசமான செய்தியே. ஏனென்றால், சிறுபான்மை முஸ்லிம் தலைமைகள் அரசியலில் தொடர்ச்சியாக இணைந்து செயற்படுவது சாத்தியமில்லை என்றாலும் நல்ல விடயங்களுக்காகவாவது ஒன்றிணைந்து குரல்கொடுக்க வேண்டுமென்றே மக்கள் எதிர்பார்க்கின்றனர். அந்தவகையில், அவர்கள் சமந்தா பவரிடம் என்ன கோரிக்கையை முன்வைத்தார்கள் என்பதை ஒருபுறம் வைத்துவிட்டு அவர்கள் இருவரும் சேர்ந்து பவரைச் சந்தித்தமை வரவேற்புக்குரியது.
ஆனால், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் சொல்வது போல் முஸ்லிம் தனி அலகு என்றொரு பேசுபொருள் இங்கு இல்லை. அப்படி ஒன்று இருந்தாலும் ஹக்கீமும் ரிஷாட்டும் அதைப் பெற்றுக் கொடுப்பதற்காக முன்னிற்க மாட்டார்கள். அதைவிட முக்கியமாக, உலக முஸ்லிம்களின் விடயத்தில் அமெரிக்கா ஏற்படுத்திய அனுபவங்கள் எப்பேற்றபட்டவை என்பது தெரியும். இவ்வாறான ஒரு பின்புலத்தில், யாழ்ப்பாணத்துக்கு வந்திருந்த சமந்தா பவர், வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றத்தை 'இனச் சுத்திகரிப்பு' என்று சொன்னார் என்பதற்காக, தனி முஸ்லிம் அலகை உள்நோக்கமாக வைத்துக் கொண்டு 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துமாறு முஸ்லிம் தலைமைகள் கோருவார்கள் என்றால் அவர்களைப் போல அறிவிலிகள் யாரும் இருக்க மாட்டார்.
இலங்கையின் முஸ்லிம் தலைவர்கள் இருவர் தம்மை சந்திக்க வருகின்றனர் என்றால் அதற்கு முன்னமே முழு புலனாய்வு தகவலையும் அமெரிக்கா பெற்றுக் கொண்டிருக்கும். அவ்வாறிருக்கையில் உண்மையாகவே தனி முஸ்லிம் அலகை பெறுவதற்காகவே ஹக்கீமும் ரிஷாட்டும் 13 இனை நடைமுறைப்படுத்த கோருகின்றார்கள் என்பது அமெரிக்காவுக்கு முன்னரே நிரூபணமாகியிருந்தால், சமந்தா கடுந்தொனியில் பதிலளித்திருப்பார். அத்துடன் அக்கோரிக்கையை அமெரிக்கா ஆழமாக மீள்பரிசீலனை செய்யும். ஏனெனில், அமெரிக்கா, தமிழர்கள் விடயத்தில் காட்டுகின்ற அக்கறையை முஸ்லிம்கள் விடயத்தில் வெளிப்படுத்துமென எதிர்பார்க்க இயலாது என்பதே முஸ்லிம்களின் உலக அனுபவமாக இருக்கின்றது.
இன்னுமொரு விடயம், அமெரிக்காவோ அல்லது வேறு ஏதேனும் ஓர் உலக நாடோ தலையிட்டு இலங்கையில் எந்த நிலப்பரப்பையும் யாருக்கும் பிரித்துக் கொடுக்க முடியாது. அப்படிச் செய்ய முடியுமென்றால் அமெரிக்காவை பயன்படுத்தி புலிகள் தனித் தமிழீழத்தைப் பெற்றுக்கொள்ள முயற்சித்திருப்பர். எனவே, உள்நாட்டுப் பிரச்சினைக்கு, மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஓர் அரசாங்கமே தீர்வினை முன்வைக்க வேண்டும். அதற்கான முக்கியத்துவத்தை வெளிநாடுகள் வலியுறுத்தலாம். அதற்கு செவிசாய்க்காவிடில் உலக அரங்கில் குறித்த நாடு எவ்வாறு கையாளப்படும் என்பதை எச்சரிக்கலாம்.
யதார்த்தம் இவ்வாறிருக்க, தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் 13ஆவது திருத்தத்தையும் - இல்லாத ஒரு தனி முஸ்லிம் அலகையும் போட்டுக் குழப்பிக் கொண்டுள்ளது. தேசிய அரசாங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அரசாங்கத்துடன் சிறுபான்மை இனங்கள் நெருக்கமான உறவைக் கொண்டிருப்பது சிங்கள கடும்போக்கு சக்திகளால் பொறுக்க முடியாதிருக்கின்றது. என்ன செய்தாவது இந்த உறவை சிதைத்துவிட வேண்டும் என்ற நோக்கத்தில் அவ்வியக்கங்கள் செயற்படுவதை காண்கின்றோம்.
அதுமட்டுமன்றி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிடிக்காத ஒரு பெண்ணாக சமந்தா பவர் இருந்ததாக அண்மையில் தகவல்கள் கசிந்திருந்தன. போர்க்குற்ற விசாரணைக்கான அழுத்தங்களைக் கொடுப்பவராக சமந்தா பவர், முன்னாள் ஜனாதிபதியால் நோக்கப்பட்டமையே அதற்குக் காரணமாகும். இந்நிலையில் அவர் இலங்கைக்கு வருவதும் அவருடன் சிறுபான்மை கட்சிகள் பேசுவதும், மஹிந்தவுக்கு ஆதரவு தெரிவிக்கும் கடும்போக்காளர்களுக்கு வயிற்றைக் கலக்கியிருக்கின்றது. அதன் வெளிப்பாடாகவும், தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் மேற்குறித்த அறிக்கையை நோக்க முடிகின்றது. அதாவது, 13 என்ற பெயரில் தமிழர்களும் முஸ்லிம்களும் ஆளுக்கொரு நிலத் துண்டங்களை எடுத்துக் கொள்வார்களோ என்ற பயம், இந்த 'தேசப்பற்றாளர்களை' ஆட்கொண்டிருக்கின்றது.
உண்மையில் முஸ்லிம்கள் தனியான முஸ்லிம் அலகு ஒன்றை இப்போது கோரவே இல்லை. அது இனவாதிகளின் கட்டுக்கதையாகும். முன்னொரு காலத்தில், அதாவது புலிகள் கிழக்கில் முஸ்லிம்கள் மீது இனவெறுப்பு தாக்குதல்களை கட்டவிழ்த்து விட்டிருந்த காலத்தில், நிலத் தொடர்பற்ற முஸ்லிம் முஸ்லிம் அலகு என்றொரு எண்ணக்கரு முஸ்லிம் அரசியலில் பேசப்பட்டது. ஆனால், அது புவியியல் ரீதியாக நடைமுறைச் சாத்தியமற்றதாக இருந்தது. அத்துடன் பின்னர் புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் தனி அலகை கோருவதற்கான நிர்ப்பந்தம் ஒன்று முஸ்லிம்களுக்கு இல்லாது போய்விட்டது. இப்போது தனி அலகு பற்றிய எந்தக் கருத்துப் பரிமாற்றங்களும் முஸ்லிம்கள் மத்தியில் இல்லை என்றே கூற வேண்டும்.
ஆனால், அம்பாறை மாவட்டத்தில் வாழ்கின்ற முஸ்லிம்கள் புதிய நிர்வாக மாவட்டம் ஒன்றை கோரி நிற்கின்றனர். இந்தக் கதை கிட்டத்தட்ட 55 வருடங்கள் பழமையானது. மட்டக்களப்பு மாவட்டத்துக்குள் உள்ளடக்கப்பட்டிருந்த தற்போதைய அம்பாறை மாவட்டத்தை பிரித்தெடுத்து தனி மாவட்டமாக உருவாக்கும் பிரேரணை 1960இன் ஆரம்பத்தில் நாடாளுமன்றத்துக்கு வந்தபோது, அப்போதிருந்த சிங்கள ஆட்சியாளர்கள் முஸ்லிம் அரசியல்வாதிகள் மூவரை நாடாளுமன்றத்துக்கு வராதாவாறு 'ஏற்பாடுகளை' செய்து விட்டு.
மிக நயவஞ்சகமான முறையில் அம்பாறையை, புதிய மாவட்டத்தின் தலைநகராக்கினர். இதன்படி, தமிழர்களையும் முஸ்லிம்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட வேறு இரண்டு தொகுதிகள் இருக்கத்தக்கதாக, அதற்கு முன்னைய தேர்தலில் வெறும் 600 க்குறைவான சிங்கள வாக்குகளையே கொண்டிருந்த அம்பாறை என்ற இடம், புதிய மாவட்டத்தின் தலைநகராக ஆக்கப்பட்டது. இதற்காக, அன்றைய சிங்கள ஆட்சியாளர்கள் பெருந்தொகையான சிங்கள மக்களை மீரிகம போன்ற இடங்களில் இருந்து கொண்டு வந்து குடியேற்றினர் என்பதே வரலாறு.
இவ்வாறு சிங்கள அரசியல்வாதிகள் செய்த மாபெரும் நயவஞ்சகத்தனத்துக்கு பிராயச்சித்தம் தேடும் முகமாகவே, அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களும் தமிழர்களும் வாழும் கரையோர பிரதேசங்களை ஒன்றிணைத்து, புதிய ஒரு கரையோர மாவட்டத்தை உருவாக்குமாறு முஸ்லிம் காங்கிரஸ் கோரி வருகின்றது. அம்பாறை நகரிலேயே அம்பாறை மாவட்ட கச்சேரி உள்ளடங்கலாக 90 சதவீதமான அரச அலுவலகங்களில் மாவட்ட காரியாலங்கள் அமைந்திருக்கின்றன. இங்கு நியமிக்கப்படும் இனவாத சிந்தனை கொண்ட மாவட்ட செயலாளர்களால் முஸ்லிம்களுக்கு கிடைக்காமல் போனவற்றின் பட்டியல் - கள உத்தியோகத்தர்களுக்கான மோட்டார் சைக்கிள்கள் வரை நீட்சி கொள்கின்றது. இதற்கு புறம்பாக, மொழிப் பிரச்சினை, போக்குவரத்து பிரச்சினை, புறக்கணிப்பு, இழுத்தடிப்பு, காணி அபகரிப்பு என மேலும் பல அசௌகரியங்களையும் தமிழர்களும் முஸ்லிம்களும் எதிர்கொள்கின்றனர்.
கரையோர ஊர்களை உள்ளடக்கியதாக ஒரு புதிய நிர்வாக மாவட்டம் உருவாகும் என்றால், இதற்கெல்லாம் தீர்வு கிடைக்கும். தமிழர்களையும், சிங்களவர்களையும் பெரும்பான்மையாகக் கொண்ட எத்தனையோ மாவட்ட செயலக எல்லைகள் உள்ளபோது, முஸ்லிம்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரேயொரு மாவட்டமாகவும் இது இருக்கும். இவ்வாறான மாவட்டம் ஒன்றை உருவாக்குவதற்கான எல்லா நியாயங்களும் இருக்கின்றன. மொறகொட ஆணைக்குழு உள்ளடங்கலாக அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட பல ஆய்வுக் குழுக்கள் தற்போதைய அம்பாறை மாவட்டத்தின் கரையோரத்தில் இன்னுமொரு மாவட்டம் உருவாக்கப்பட வேண்டுமென பலமுறை சிபாரிசு செய்திருக்கின்றன. ஆனால், எல்லா அதிகாரங்களையும் கையில் வைத்துக் கொண்டிருந்த மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சி வரைக்கும், அவ்வாறான ஒரு மாவட்டம் சாத்தியப்படவில்லை.
மஹிந்த அரசாங்கம் கரையோர மாவட்டத்தை தருவதாகச் சொன்னது. அதைக் கொடுத்திருந்தால் மு.கா., மஹிந்தவுக்கு ஆதரவளித்திருக்கும். ஆனால், கடைசி வரைக்கும் இழுத்தடிக்கும் எண்ணமே மஹிந்தவுக்கும் பசிலுக்கும் இருப்பதை அறிந்து கொண்ட மு.கா. செயலாளர், இவ்விடயத்தை கட்சித் தலைவரிடம் பேசி, 'இது சரிப்பட்டு வராது' என்று சொன்னார். அதன் விளைவாகவே மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கும் ஐக்கிய தேசிய முன்னணியின் பக்கம் முஸ்லிம் காங்கிரஸ் வந்ததை நாமறிவோம். ஆனால், இது தொடர்பில் எந்த ஒப்பந்தத்தையும் முஸ்லிம் காங்கிரஸோ மக்கள் காங்கிரஸோ அரசாங்கத்துடன் இம்முறை செய்து கொள்ளவில்லை. ஆயினும், கடந்த 12 வருடங்களுக்கு முன்னமே ஐக்கிய தேசிய கட்சியால் ஏற்றுக் கொள்ளப்பட்ட கல்முனை கரையோர மாவட்டத்தை அரசாங்கம் தரும் என்று மு.கா. அசையாத நம்பிக்கை கொண்டுள்ளது. அது வேறு விடயம். ஆனால் இங்கு தனி முஸ்லிம் அலகு என்ற விடயம் பற்றி பேசப்படவில்லை.
அதிகார அலகு என்பது வேறு, நிர்வாக மாவட்டம் என்பது வேறு என்ற அடிப்படை விளக்கம் கூட இல்லாதவர்களாக இனவாதிகள் இருப்பது கவலைக்குரியது. இவர்கள் உண்மையிலேயே முட்டாள்களா அல்லது அவ்வாறு நடிக்கின்றார்களா, என்ற சந்தேகம் எப்போதும் இருக்கின்றது.
முஸ்லிம் தனி அலகு என்பது, விடுதலைப் புலிகள் கேட்ட தனியீழத்தை ஒத்த ஒரு சிறிய வடிவமாக நோக்கப்படலாம். அது உண்மையில் இந்தியாவிலுள்ள மாநிலங்கள் போல, அனைத்து அதிகாரங்களும் வழங்கப்பட்ட ஒரு சிறிய ஆட்புல நிலப்பரப்பாக இருக்கும். இங்கு மத்திய அரசாங்கத்தின் அதிகாரம் மட்டுப்படுத்தப்பட்டதாக காணப்படும்.
நிர்வாக மாவட்டம் என்பது இதிலிருந்தும் முற்றாக வேறுபடுகின்றது. கொழும்பைப் போல, மாத்தறையை போல, யாழ்ப்பாணத்தைப் போல, இன்றிருக்கின்ற அம்பாறையைப் போல - இன்னுமொரு புதிய மாவட்டமாக கரையோர மாவட்டம் இருக்கும். அந்த மாவட்டத்தின் பிரதான நகராக ஒன்று தெரிவு செய்யப்பட்டு அங்கே மாவட்ட கச்சேரி இருக்கும். பொது நிர்வாக அமைச்சினால் நியமிக்கப்படும் ஒரு நிர்வாக சேவை அதிகாரியே அங்கு மாவட்ட செயலாளராக இருப்பார். ஏனைய எல்லா மாவட்டங்களைப் போன்றே இப் புதிய மாவட்டமும் இயங்கும். சிறுபான்மையின மக்களுடன் சிறிதளவான சிங்களவர்களும் இதற்குள் நிர்வகிக்கப்படுவார்கள்.
இவ்வாறான ஒரு மாவட்டம் உருவாவதால் இந்த நாட்டின் இறைமைக்கு குந்தகம் ஏற்படப்போவதில்லை. முஸ்லிம்களுக்கோ, தமிழர்களுக்கோ இதனால் 'கொம்பு' முளைக்கப் போவதும் இல்லை என்பதை, மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் கடும்போக்கு சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.
28 minute ago
44 minute ago
53 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
44 minute ago
53 minute ago
57 minute ago