2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

தமிழ் மக்களின் தேவை: மாற்று அரசியலா, ஒன்றிணைந்த அரசியலா?

Editorial   / 2019 டிசெம்பர் 19 , மு.ப. 11:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் மக்களின், இன்றைய அரசியல் தேவை என்ன என்பது, ஆழமாக அலசப்பட வேண்டிய ஒன்றாகும்.  

போர் முடிந்து, பத்து ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், கடந்த 10 ஆண்டுகால தமிழ் அரசியலைத் திரும்பிப் பார்த்தால், நாம் இன்று எங்கு வந்து நிற்கின்றோம் என்பதை அறிவதில் சிரமங்கள் இருக்க மாட்டாது.   

கடந்த பத்தாண்டுகளில் எதிர்ப்பு அரசியல், இணக்க அரசியல் ஆகிய இரண்டையும் செய்திருக்கிறோம். இரண்டும் எமக்கு, எதுவித பலனையும் தரவில்லை என்பது, புதிய கண்டுபிடிப்பு அல்ல. 

இன்று, எமது அடிப்படை உரிமைகளுக்கான கோரிக்கைகளுக்காகவே, போராட வேண்டிய நிலையில், தமிழர்கள் இருக்கிறார்கள். இது, இலங்கையின் ஏனைய சிறுபான்மை இனங்களுக்கும் பொருந்தும்.   

போரின் பின்னரான காலப்பகுதியில், தமிழர்கள் எதிர்த்த ஓர் ஆட்சியையும் தமிழர்கள் ஆதரித்த ஆட்சியையும் நாம் கடந்து வந்திருக்கிறோம். 

கடந்த பத்தாண்டுகளில், முன்னிலைக்கு வந்த மூன்று பிரதான கேள்விகளும் பதில்களும் அழிக்கப்படாமல், இன்னமும் அப்படியே இருக்கின்றன.   

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு, என்ன நடந்தது என்பது, இன்னமும் தெரியாது; அரசியல் கைதிகளின் விடுதலை, எப்போது என்பதற்கும் பதில்கள் இல்லை; மக்கள் தங்கள் சொந்த இடங்களில், எப்போது மீளக்குடியேறுவார்கள் என்பது நிச்சயம் அற்றது. 

இந்தச் சூழலில், தமிழரது அரசியல் திசை வழிகள் குறித்த கேள்விகள் முக்கியமானவை.   
தமிழ் மக்கள் மட்டுமன்றி, இலங்கையின் சிறுபான்மை இனங்கள் அனைத்தும் எதிர்நோக்குகின்ற பொதுவான பிரச்சினைகள் இருக்கின்றன. 

இன்று, இருப்புக்கும் நிலைப்புக்குமான போராட்டமாகச் சிறுபான்மையினரின் போராட்டங்கள் மாற வேண்டிய கட்டத்தை அடைந்திருக்கின்றன. 

இந்த நிலையை, எவ்வாறு நாம் வந்தடைந்தோம் என்பதைக் கொஞ்சம், இதய சுத்தியோடு திரும்பிப் பார்க்க வேண்டும்.   

இன்று, இரண்டு வேறுபட்ட சிந்தனைகள், தமிழ் அரசியல் சூழலில் அடிக்கடி பேசுபொருள் ஆகின்றன. 

ஒன்று, தமிழ் மக்களின் இன்றைய தேவை, மாற்றுத் தலைமை என்ற கோரிக்கை.
இன்னொன்று, தமிழ் மக்களின் இன்றைய தேவை, ஒன்றிணைந்த தலைமை என்ற கருத்து. 

இந்த இரண்டு வாதங்களிலும் இருக்கின்ற அடிப்படை என்னவெனில், தமிழ் மக்களுக்குத் தலைமை தாங்குவது, யார் என்ற கேள்வியாகும். இந்த வினாவே, தமிழ் அரசியலின் அடிப்படைக் கோளாறு.  

இந்த இரண்டு கருத்துகளையும் ஒட்டியே, விவாதங்களும் கருத்து மோதல்களும் நடக்கின்றன. 
எந்தவொரு வகையிலும், இந்த விவாதங்கள், மக்களை மய்யப்படுத்தியதாக நடைபெறவில்லை என்பது, வருந்தத்தக்க உண்மை. 

தமிழ் மக்களை ஆளுவோர் யார் என்பதே, இன்று பேசுபொருளாக இருக்கிறது. ஆனால், தமிழ் மக்களை ஆள்வது, யார் என்பதல்ல இங்கு பிரச்சினை. 

பிரச்சினை யாதெனில், தமிழ் மக்களின் பிரச்சினைகளைச் சரிவர விளங்கியவர்கள் யார், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெறக்கூடியவர்கள் யார், தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் கொடுக்கக் கூடியவர்கள் யார், போராடக் கூடியவர்கள் யார் என்பதே ஆகும். தமிழ் மக்களின் தேவை, குத்தகைக்காரர்களோ தரகர்களோ அல்ல!   

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசப்படாமல், தலைமை ஏற்பது குறித்துச் சண்டைகள் நடப்பது, ஆரோக்கியமானதல்ல; தமிழ் மக்கள் எதிர்பார்ப்பதும் அதுவல்ல.   

இந்த விவாதங்கள், தமிழ்ச் சமூகம் எதிர்நோக்கியுள்ள, மிக முக்கியமான நிலைமையைக் சுட்டிக் காட்டும் அதேவேளை, கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய, அடிப்படையான ஒரு விடயத்தில் கவனத்தைக் குவிக்கிறது. 

தமிழ் மக்களின் அரசியல், ஆளுவோர் அரசியலாகவும் நேரம் பேசுவோர் அரசியலாகவே இருந்து வந்திருக்கிறது.

 தமிழ் மக்கள் அரசியல் என்பது, மக்கள் அரசியலாக, மக்கள் நலன் நோக்கிய அரசியலாகத் திசை மாற்றம் பெறுவது தவிர்க்க இயலாதது. 

இதைச் செய்யாமல், தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசுவதில், எதுவித பலனும் இல்லை. ஏனெனில், மக்கள் நல நோக்கில் இல்லாத அரசியல் என்பது, தலைமைகளைத் தெரிவதற்கான அரசியலாக இருக்குமே அன்றி, மக்களுக்கான அரசியலாக இருக்காது. 

இதை, தமிழ் மக்கள் உணரும் வரை, தமிழ் மக்களது விடுதலைக்கான பாதை, இருட்டாகவே இருக்கும்.  

இந்த உண்மையை இங்கு சொல்லியாக வேண்டும்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .