2025 ஜூலை 21, திங்கட்கிழமை

தமிழ்நாட்டின் எழுச்சிகளும் கரிசனைகளும்

Administrator   / 2017 பெப்ரவரி 23 , மு.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

- கனகலிங்கம் கோபிகிருஷ்ணா  

இந்தியாவின் தமிழ்நாடு, அண்மைக் காலமாகவே, போராட்டக்களம் போன்று மாறியிருக்கிறது. அனேகமான தருணங்களில், ஓர் இடம் “போராட்டக்களம்” போன்று மாறியிருக்கிறது என்ற வார்த்தைப் பிரயோகம், எதிர்மறையான கருத்தையே வெளிப்படுத்தும். 

தமிழ்நாட்டிலும் எதிர்மறையான சம்பவங்கள் இடம்பெறுகின்ற போதிலும், அங்கு ஏற்பட்டுள்ள எழுச்சி, ஒரு வகையான புத்துணர்ச்சியைத் தருகின்றது என்பதை மறுக்க முடியாது.  

ஜெயலலிதாவின் மரணமும் அது ஏற்படுத்தியிருக்கும் ஒரு வகையான வெற்றிடமும் தலைமையற்ற உணர்வொன்றை, அம்மாநில மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது என்பது யதார்த்தமானது.

ஜெயலலிதா மீதான விமர்சனங்களைத் தாண்டி, அம்மாநிலத்தில் மறக்கடிக்கப்பட முடியாத ஓர் ஆளுமையாக அவர் இருந்தார் என்பது, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு கருத்துத்தான்.

அதனால்தான், ஜெயலலிதாவின் மரணமென்பது, தமிழக அரசியலிலும் பொது வாழ்விலும், மிகப்பெரிய இழப்பென, ஏராளமான அறிஞர்கள் கூறுவதற்கும் காரணமாக இருந்தது.  

சல்லிக்கட்டுத் தொடர்பாக தமிழகத்தில் ஏற்பட்ட உணர்வெழுச்சி, அண்மைக்காலத்தில் முக்கியமான அரசியல் மாற்றமாக அமைந்தது. அந்தப் போராட்டம் தொடர்பான பாராட்டுகளையும் விமர்சனங்களையும் தாண்டி, இளைஞர்களைப் பிரதானப்படுத்திய முக்கியமான போராட்டமாக, அது அமைந்திருந்தது.

இளைஞர்களின் அந்தப் போராட்டம், மத்திய அரசாங்கம் வரை சென்றிருந்தது. அவர்களுக்கான பதிலும் கிடைத்தது.  
அதேபோன்று, தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்கப் போகிறார் என்பதும் கிடைத்த எதிர்ப்பு அலையென்பது, சாதாரணமானது கிடையாது.

சமூக வலையமைப்புகளில் கேலி செய்யும் பதிவுகளில் ஆரம்பித்த எதிர்ப்பு, ஊடகங்களை முழுமையாக ஆக்கிரமித்தது. இறுதியில் வெறுமனே 11 சட்டசபை உறுப்பினர்களைக் கொண்டிருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கு, மாபெரும் ஆதரவு திரண்டது.

ஊடகங்கள் முழுவதிலுமே, நியாயஸ்தராக அவர் முன்னிறுத்தப்பட்டார். இதற்கான பிரதான காரணமாக, ஓ.பன்னீர்செல்வத்துக்கு, மக்களிடத்தில் காணப்பட்ட பேராதரவு அமைந்தது.  

தமிழக முதலமைச்சராக சசிகலா பதவியேற்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சொத்துக்குவிப்பு வழக்குத் தொடர்பான தீர்ப்பு வரும்வரை காத்திருப்பதற்கு ஆளுநர் முடிவுசெய்தமைக்கு, மக்களிடத்தில் காணப்பட்ட எதிர்ப்பும் முக்கியமானது என்பதை, அச்சமின்றிக் குறிப்பிட முடியும். 

இப்போது வரை, இந்தச் சட்டசபை கலைக்கப்பட்டுத் தேர்தலொன்று உடனடியாக நடத்தப்பட்டால், சசிகலாவுக்கு ஆதரவு வழங்கிய சட்டசபை உறுப்பினர்களில் அனேகமானோர், தங்களது பதவியை இழப்பதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன என்பது யதார்த்தமானது. தமிழக மக்களில் குறிப்பிடத்தக்க அளவானோர், அரசியல்வாதிகளிடமிருந்து பணத்தைப் பெற்ற பின்னர், நேர்மையாக அவர்களுக்கே வாக்கை வழங்கும் தன்மை கொண்டவர்கள் என்ற அடிப்படையில், தேர்தல் வந்தவுடன் மக்கள் மாறிவிடுவார்களா என்ற சந்தேகம் இருந்தாலும், இப்போதைய நிலை இது தான்.  

இந்த இரண்டு சம்பவங்களுமே, அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் விழிப்புணர்வைக் காட்டுகின்றன. மக்கள், தமது அரசியல்வாதிகளை நம்பாது, தாங்களே நேரடியாகக் களத்தில் இறங்கி, தமது குரல்களைப் பதிவுசெய்வதைத்தான் இவை காட்டுகின்றன. இது, அரசியல் விழிப்புள்ள சமுதாயமொன்றுக்கான அறிகுறியாகும்.  

ஆனால், இதை மற்றைய பக்கமாகப் பார்த்தால், இந்த இரண்டு போராட்டங்கள் அல்லது எழுச்சிகளிலும் கூட்டுக்கலக மனப்பாங்கு ஒன்று காணப்பட்டதே தவிர, பகுத்தறியும் திறன் மூலமாக, அனைவரும் சிந்தித்து, குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டனவா என்பது சந்தேகமே. “சல்லிக்கட்டு என்பது தமிழர்களின் அடையாளம்/பாரம்பரியம்.

அதை நிறுத்த, சர்வதேச சதி நடக்கிறது” என்பது, பகுத்தறிந்து பெற்ற முடிவு கிடையாது. மாறாக, இனத்தை முன்னிறுத்திய போராட்டமே. சர்வதேச சதி இடம்பெறுகிறது என்பதற்கான எந்தவொரு நம்பத்தகுந்த ஆதாரமும் முன்வைக்கப்பட்டதாகத் தெரியவில்லை.

ஆனால், “பீட்டா அமைப்பைத் தடை செய்” என்பது, போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. எதற்காகத் தடைசெய்யப்பட வேண்டும் என்ற கேள்விக்கு, பலரிடமும் பதில்கள் இருக்கவில்லை.  

அதேபோல் தான், ஓ.பன்னீர்செல்வம், தான் முதலமைச்சராக வர வேண்டுமென்பதும், “எல்லோரும் அந்தக் கருத்தைத்தான் கொண்டிருக்கிறார்கள். அதனால் நானும் அதே கருத்தைக் கொண்டிருப்பேன்” என்று உருவான நிலைமையாக இருந்ததே தவிர, ஆராய்ந்து எடுக்கப்பட்ட முடிவாகக் காணப்பட்டிருக்கவில்லை. 

சசிகலா - ஓ.பன்னீர்செல்வம் என்ற இருவரில், ஓ.பன்னீர்செல்வம் ஓரளவு சிறந்தவர்; எனவே அவருக்கு ஆதரவளிக்கிறோம் எனக் குறிப்பிட்ட ஒரு தொகுதியினர் கூறியிருந்தனர். அவர்களை, இவ்விமர்சனத்திலிருந்து தவிர்த்து விடலாம்.  

ஆனால், ஓ.பன்னீர்செல்வம், நேர்மையானவராக ஊடகங்களால் முன்னிறுத்தப்பட, அவருக்கான ஆதரவு பெருகியது. நேர்மையின் சிகரமாக, அடுத்த காந்தி அவர்தான் என்ற அளவில், அவருக்காக (இலவச) பிரசாரங்கள் அமைந்தன. 

ஆனால், அவர் கொண்டுவரப் போவதாக அறிவித்திருக்கும் “அம்மா ஆட்சி” என்பது, ஊழல் மிகுந்தது எனச் சுட்டிக்காட்டப்படவில்லை; ஊழல் காலத்தில், அவரும் ஜெயலலிதாவோடு இருந்தார் என்பது சுட்டிக்காட்டப்படவில்லை; ஜெயலலிதா இருக்கும் வரையில் - முக்கியமாக அவர் சிறையில் இருந்தபோது - அவரின் கைப்பொம்மையாகவே ஓ.பன்னீர்செல்வம் செயற்பட்டார் என்பது சுட்டிக்காட்டப்படவில்லை.  

உண்மையில், உச்சநீதிமன்றத் தீர்ப்பின் பின்னரும் கூட, “அம்மா ஆட்சி” என்றும் வேறு வழிகளிலும் ஜெயலலிதாவின் பெயரை, தமிழகத்தில் விற்க முடியுமாக இருப்பது, அவலத்தின் உச்ச நிலை. தற்போது சசிகலாவுக்குச் சிறையைப் பெற்றுக் கொடுத்திருக்கும் வழக்கு, ஜெயலலிதா மீதானதுதான். அவருக்கு உதவியதோடு, அவருடன் இணைந்து கொள்ளையடித்தார் என்றே, சசிகலாவின் பெயரும் குறிப்பிடப்பட்டது.

எனவே, சசிகலா குற்றவாளி என்றால், ஜெயலலிதா மிகப்பெரிய குற்றவாளி. அப்படிப்பட்ட ஒருவரின் பெயரை இன்னமும் பயன்படுத்த முடிவது, கவலைக்குரிய நிலையே தான்.  

ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாகவும் சந்தேகத்தை ஏற்படுத்தி, தனது ஆதரவுத்தளத்தைப் பெருக்கியிருந்தார். இத்தனைக்கும், தான் முதலமைச்சராக இருக்கும் வரைக்கும், தான் விசுவாசியாக இருக்கும், தான் தலைவியாக எண்ணும், தான் வழிபடும் ஜெயலலிதாவின் மரணத்தில், எந்தவிதச் சந்தேகத்தையும் கண்டிருக்காத அல்லது சந்தேகத்தைக் கண்டாலும் அது தொடர்பில் கருத்தெதனையும் முன்வைத்திருக்காத ஓ.பன்னீர்செல்வம், அவருடைய முதலமைச்சர் பதவி பறிபோகிறது என்ற நிலை வந்தவுடன் மாத்திரம், திடீரென ஞானதோயம் பெற்றவர் போன்று காட்டிக்கொள்வது, நகைப்புக்கிடமானது

. “அம்மாவின் ஆவி பேசியது” என்பதெல்லாம், ஏற்கெனவே அரசியல் சாக்கடையை, குளமென்று நம்பி, குதித்து விளையாடி, அதைத் தமது உடலில் பூசிக் கொண்டிருக்கின்ற அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்கான ஏமாற்று வார்த்தைகளேயன்றி, வேறேதுமில்லை.  

இதில், சசிகலாவை நியாயப்படுத்த முடியாது. ஜெயலலிதாவின் அனேகமான தவறான, ஊழல், மோசடிகள் நிறைந்த முடிவுகளில் அவரோடிருந்தவர்தான் சசிகலா. அவருக்கான தண்டனையென்பது, பொருத்தமானது. இன்னமும் கடுமையாக்கப்பட்டிருந்தாலும் கூட, பொருத்தமானதுதான்.

அத்தோடு, ஜெயலலிதாவின் கட்சியிலிருந்து விலக்கப்பட்ட பின்னர், தனது குடும்பத்தினருடன் தொடர்புகளை அறுத்துக் கொள்வதாக மன்னிப்புக் கடிதத்தை வழங்கி, கட்சியில் மீண்டும் சேர்ந்துகொண்ட சசிகலா, ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின்னர், கட்சிக்குள் தனது குடும்பத்தினரை உள்வாங்கிக் கொண்டார்.  

சசிகலா மீதான சிறைத்தண்டனை குறித்த தீர்ப்பு வெளியான பின்னர், தனது சகோதரனின் மகனான தினகரனை, கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளராக அறிவித்திருந்தார். இவர், ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்ட ஒருவராவார். எனவே, கட்சியைத் தனது தனிப்பட்ட சொத்துப் போலவே சசிகலா கருதுகிறார் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட முடியும்.  

ஆகவே, ஓ.பன்னீர்செல்வம் தொடர்பான விமர்சனங்கள், சசிகலாவை நியாயப்படுத்துவனவாகக் கருதப்படக்கூடாது. மாறாக, தமிழகத்தின் அரசியல் நிலைமையை ஒட்டுமொத்தமாக விமர்சனம் செய்பவையாகவே கருதப்பட வேண்டும்.  

எனவே, தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் எழுச்சியென்பது, அரசியலில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கின்ற ஆர்வம் என்ற வகையில் வரவேற்கப்பட வேண்டியதொன்றாக இருக்கின்ற போதிலும், அதில் விமர்சனங்கள் காணப்படாமலில்லை. என்றாலும் கூட, இந்த ஆர்வம் என்பது, சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டியதொன்றாக இருக்கிறது.  

அதேபோல், ஜெயலலிதா உயிரோடு இருந்திருந்தால், இத்தனை எழுச்சியும் சாத்தியப்பட்டிருக்குமா என்பது சந்தேகமே. இந்தியாவின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகக் கருதப்படும் கமலஹாசன், மிகச்சிறப்பான ஆளுமையும் கூட. தமிழகத்தில், ரஜினிகாந்துக்கு அதிக இரசிகர்கள், அதிகமான பக்தர்கள் காணப்பட்டாலும் கூட, கமலஹாசன் என்ற ஆளுமைக்கான மரியாதை, அறிவுசார் சமூகத்திடையே உண்டு. 

அத்தைய கமல், ஜெயலலிதா உயிரோடு இருந்த காலத்தில், நேரடியாக அரசியல் கதைத்தது கிடையாது. தன்னுடைய திரைப்படம் தடை செய்யப்பட்ட போதிலும், நாட்டைவிட்டுச் செல்வதாகக் கூறினாரே தவிர, ஜெயலலிதா மீது நேரடியான விமர்சனங்களை முன்வைத்திருக்கவில்லை.

தனது எதிர்ப்புக் குரல்களை நசுக்கும் ஜெயலலிதாவின் பண்பு, அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனால் இன்று, சசிகலாவுக்கு எதிராக நேரடியாக விமர்சனங்களை, கமல் முன்வைக்கிறார்; ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக இருப்பதாக அவர் கூறுகிறார்; சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த சட்டசபை உறுப்பினர்களுக்கு, அவர்களது ஊரில் “போதிய மரியாதை” வழங்குங்கள் என்று, தனது இரசிகர்களுக்குக் கூறுகிறார்.

இவையெல்லாம், தற்போது ஏற்பட்டுள்ள ஒரு வகையான ஜனநாயக இடைவெளி என்பதை மறுக்க முடியாது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .