2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

நல்லிணக்கத்தை உருவாக்கிய வெள்ளம்

Thipaan   / 2015 டிசெம்பர் 07 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

வரலாறு காணாத மழை சென்னை வாழ் மக்களின் வாழ்வாதாரத்தை வாரிச் சுருட்டிக் கொண்டு சென்று கடலில் கரைத்து விட்டுப் போயிருக்கிறது. மாநகரத்தின் பல்வேறு பகுதிகள் மார்பளவு தண்ணீரில் சிக்கித் தத்தளித்துக் கொண்டிருக்கிறது.

மாநகர மக்களின் தவித்த வாய்க்கு நேற்றுவரை தண்ணீர் வழங்கிக் கொண்டிருந்த செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளுக்கு என்ன கோபமோ தெரியவில்லை. அந்த மக்களின் வாழ்க்கையைத் தண்ணீரில் மிதக்க விட்டுள்ளது. உள்ளபடியே சென்னை புறநகர மக்களுக்கு 'தண்ணியில் கண்டம்' என்பதை இந்தப் பெருமழை வெள்ளம் உருவாக்கி விட்டது.

சென்னைக்கு மழையினால் பாதிப்பு இல்லை. ஆனால், மழையால் செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து வந்த வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டு விட்டது. அடையாறு ஆறு கரை புரண்டு ஓடியது. சென்னையை ஆளுநர் தங்கியிருக்கும் ராஜ்பவனுடன் இணைக்கும் கோட்டூர் புரம் பாலம் மிதக்கவில்லை.

 ஆனால், அந்தப் பாலத்தின் அருகில் இருக்கும் அடுக்கு மாடிக் குடியிருப்பு மிதந்து விட்டது. குடிசையில் இருப்பவர்கள் முதல் கோபுரத்தில் இருப்பவர்கள் வரை அனைவரையும் மிரட்டி விட்டது இந்த மழை. கோட்டூர் புரம் கரையோரத்தில் இருந்த குடிசை வீடுகளில் உள்ளோருக்கும் பாதிப்பு. அந்தப் பகுதியின் மறுபக்கத்தில் வி.வி.ஐ.பி.கள் வசிக்கும் போட் கிளப்புக்கும் பாதிப்பு. அமெரிக்க துணைத் தூதரகத்தின் அதிகாரியொருவர் கோட்டூர்புரம் பகுதியில் வசிக்கிறார். அவரையும், அவரது குடும்பங்களையும் மட்டும் ஹெலிகொப்டர் வந்து மீட்டுக் கொண்டு போனது. ஆனால், கோட்டூர் புரம் பகுதி மக்களை மீட்கத் தேசிய பேரிடர் மீட்புக் குழுவில் உள்ள படையினர் வந்த பின்னர் தான் முடிந்தது.

கோட்டூர்புரம் மோசமாகப் பாதிக்கப்பட்ட பகுதியென்றால் அமைச்சர்கள் குடியிருப்புக்கு பின்னால் இருக்கும் பல்வேறு நகர்கள் (இவையெல்லாம் அடையாறு ஆற்றின் கரையோரத்தில் இருப்பவை) மழை பாதிப்பில் சிக்கின. அவர்களின் வீட்டில் மேல் வெள்ளம் கரை புரண்டு ஓடிய காட்சி கல்மனதையும் கரைக்கும் விதத்தில் கொடூரமான காட்சியாக இருந்தது. செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து திறந்து விடப்பட்ட இந்தத் தண்ணீர் மக்களை மட்டுமல்ல, அவர்களின் வாழ்விலும் இருட்டை படர விட்டுச் சென்று விட்டது. பெரும்பாலும் ஏரிப்புறங்களாக இருந்த முடிச்சூர், தாம்பரம், சோளிங்க

நல்லூர், வேளச்சேரி, வளசரவாக்கம் என்று அனைத்துப் பகுதிகளிலும் சிக்கிய மக்கள் இரண்டு மூன்று நாட்கள் உணவு தண்ணீர் இன்றி தவிக்கும் நிலை ஏற்பட்டது.

ஐ.ஏ.எஸ் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் வசிக்கும் மணப்பாக்கம் பகுதி செம்பரம்பாக்கம் ஏரிச் சீற்றத்தில் முதலில் சிக்கியது. அங்குள்ள அதிகாரிகளின் வீடுகளிலும் மழை நீர் புகுந்தது. முதல் மாடி, இரண்டாவது மாடி என்று மழை புகுந்தது. அப்பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழகத் தலைவர் ஈ.வி.கே. எஸ் இளங்கோவன் குடும்பத்தினரை வெள்ள அபாயத்திலிருந்து மீட்டுக் கொண்டு வந்தனர். சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் இன்னொரு ஏரி போல் மாறியது. எங்கும் தண்ணீர் காடாக இருந்த விமான நிலையம் மூடப்பட்டதால் பயணிகள் சொல்ல முடியாத அவதிக்கு உள்ளானார்கள்.

ரயில் தண்டவாளங்கள் பெரும்பாலும் தண்ணீரில் மறைந்தன. அதனால் சென்னையிலிருந்து வெளியூர் போகும் ரயில்களும், சென்னைக்கு வரும் ரயில்களும் ரத்துச் செய்யப்பட்டன. கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து ஆலந்தூர் வரை இயக்கப்பட்ட 'சென்னை மெட்ரோ ரயில்'தான் ஆபத் பாந்தவனாக மக்களுக்கு உதவி செய்தது. சென்னை மெட்ரோ ரயிலின் வெற்றி நிலுவையில் கிடக்கும் 'எண்ணூர் துறைமுகம்- மதுராவயல் பறக்கும் சாலை திட்டத்தை' மக்களுக்கு நினைவுபடுத்தியது. இந்தப் பறக்கும் சாலை அமைந்திருந்தால் மக்களுக்கு போக்குவரத்து எளிதாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

மழையின் உச்சத்தில் அரசியல் கட்சித் தலைவர்களும் மிஸ்ஸிங். கவுன்சிலர்களும் மிஸ்ஸிங். 'மக்களுக்காக மக்களே' காப்பாற்றிக் கொள்ளும் நிலைமை இருந்தது. கூடுதல் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் கடலோர காவல்படை வீரர்கள் கூட ஏனோ களத்தில் காணப்படவில்லை. முதல் மழையின் போது மூழ்கி மக்களை காப்பாற்றிய கூடுதல் டி.ஜி.பி.யையும் களத்தில் காணவில்லை.

சென்னை மாநகராட்சியின் சார்பில் ஹெல்ப் லைன் நம்பர்கள் கொடுக்கப்பட்டன. ஆனால், அந்த நம்பர்களில் தொடர்பு கொண்டவர்கள் அனைவருமே தங்களுக்கு வேண்டிய உதவியைப் பெறமுடியவில்லை. ஆனால், மதங்கள் கடந்து, ஜாதிகள் கடந்து, ஏழை, பணக்காரர் என்ற நிலை கடந்து மக்கள் ஒருவருக்கு ஒருவர் உதவிக் கொண்ட அருங்காட்சியைப் பார்க்க முடிந்தது. அரசால் ஆயிரம் வருடங்களாக உருவாக்க முடியாத 'மத ஒற்றுமை'யை, 'ஜாதி ஒற்றுமை'யை, 'ஏழை- பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகளை நீக்கி சமத்துவத்தை' ஓரிரு நாள் மழையிலேயே மனிதனுக்கு இயற்கை கற்றுக் கொடுத்தது என்றால், அது சென்னை மாநகரத்தைப் புரட்டிப் போட்ட பேய் மழையும் பெருவெள்ளமும்தான்.

'சகிப்புத்தன்மை இல்லை' என்று இந்தியாவில் கிளம்பியுள்ள குற்றச்சாட்டுக்கு பதில் சொன்னது இந்த மழை- ஆம் மதமாச்சரியங்களைக் கடந்த அனைவரும் அனைவருக்கும் உதவிய காட்சியைப் பார்க்க முடிந்தது. இந்தமுறை 'பாதிக்கப்பட்ட மக்களைப் பார்வையிட வேண்டும்' என்று எதிர்கட்சிகள் முழக்கமிடும் வரை முதல்வர் ஜெயலலிதா காத்திருக்கவில்லை. ஹெலிகொப்டர் மூலம் டிசெம்பர் 3ஆம் திகதி பாதிக்கப்பட்ட சென்னை மாநகரப் பகுதிகளை பார்வையிட்டார்.

அவர் ஆட்சிக்கு வந்தவுடன் 2011ஆம் வருடத்தில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றை முதலமைச்சர் ஜெயலலிதா இப்படியொரு 'Aerial SurveY' செய்தார். அதன் பிறகு தனது ஆட்சியில் இறுதிக்கட்டத்தில் வந்த இந்த பெருமழையின் பாதிப்பை யுநசயைட ளுரசஎநலு செய்திருக்கிறார். கடற்படை விமான தளத்திலிருந்து மேற்கொண்ட இந்த சர்வே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களைப் பார்க்கும் விதத்தில் அமைந்தது.

15,000 கோடி இந்திய ரூபாய் பாதிப்பு இருக்கும் என்று கருதிய அரசு மத்திய அரசின் உடனடி நிவாரணமாக 5,000 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தது.  அன்று மாலை பிரதமர் நரேந்திரமோடி அரக்கோணம் ராஜாளி விமான தளத்தின் மூலம் சென்னையின் வெள்ள சேதங்களை 'ஹெலிகொப்டரில்' பார்வையிட்டார்.

முதல்வர் ஜெயலலிதா, தமிழக ஆளுநர் ரோசைய்யா ஆகியோருடன் விவாதித்து ஏற்கெனவே வழங்கியுள்ள 940 கோடி ரூபாய் நிவாரண நிதியுடன் மேலும் 1,000 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்று அறிவித்தார். நிதியறிவிப்புக்கும், பிரதமரின் வருகைக்கும் முதலில் நன்றி சொன்னது தி.மு.க. தலைவர் கருணாநிதி. அந்த நன்றி கூறிய அறிக்கையில், 'மத்திய அரசின் 1,940 கோடி ரூபாய் முறைப்படி பாதிக்கப்பட்ட மக்களுக்குப் போய்ச் சேர அனைத்துக் கட்சி குழுவை நியமித்து அந்த குழு மூலம் நிவாரண உதவிகளை வழங்க வேண்டும்' என்று கோரிக்கை வைத்தார்.

இந்த வெள்ள சேதத்தில் இன்னொரு ஒற்றுமை அரசியல் கட்சிகளுக்குள் ஏற்பட்டது. தி.மு.க.வின் சார்பில் 'அரசின் நிவாரண நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கப்படும்' என்று அறிவித்த கலைஞர் கருணாநிதி, ஆங்காங்கு உள்ள தி.மு.க. தொண்டர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்று அறிவித்தார்.

 தி.மு.க. பொருளாளர் முக. ஸ்டாலின், 'தன்னுடைய கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் மழை விடும் வரை உணவு வழங்கப்படும்' என்று அறிவித்தார். பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தர்மபுரியிலிருந்து படகுகளைக் கொண்டு வந்து அரும்பாக்கம் போன்ற பகுதிகளில் வெள்ள நீரில் சிக்கியிருந்தவர்களை மீட்க உதவி செய்தார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், படகு மூலம் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். ஆனால், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் மட்டும், 'இரண்டு கட்சியும் சரியில்லை' என்று அறிக்கை விட்டுக் கொண்டு இந்த முறை அமைதியாக இருந்து விட்டார். அனைத்து அரசியல்வாதிகளும் இந்த மழை வெள்ளத்தில் இவ்வளவு ஈடுபாட்டுடன் பணியாற்றியதற்கு 2016இல் வரப் போகும் சட்டமன்றத் தேர்தலும் ஒரு முக்கிய காரணம் என்றால் மிகையாகாது.

இனி அரசியல் கட்சிகள் 'எல்லாம் அதிமுக அரசால் என்று குற்றம்' சாட்ட முயற்சி செய்யும். அதற்கான பிரசாரங்கள் முடுக்கி விடப்படும். ஆனால், இந்த மழை இன்னும் பத்து வருடம் கழித்து வந்தாலும், இதே பாதிப்பை மக்கள் சந்திக்க வேண்டிய சூழல் உருவாகும். ஆளுகின்ற கட்சியாக இருந்தாலும் சரி, ஆட்சிக்கு வர வேண்டிய கட்சியாக இருந்தாலும் சரி சென்னை மாநகரின் உட்கட்டமைப்பை சரி செய்தால் மட்டுமே மக்களை இதுபோன்ற பாதிப்புகளில் இருந்து காப்பாற்ற முடியும். ஏரிகளை வீடுகளாக்கும் திட்டத்தை மாநில அரசே கைவிட வேண்டும்.

விவசாய நிலங்களை வீடுகளாக மாற்றிக் கொடுக்க வழி செய்யும் அரசு ஆணையை அப்படியே ரத்து செய்ய வேண்டும். ஏரிகளும், விவசாய நிலங்களும் ஆங்காங்கே இருக்க, வீடுகள் மக்கள் வசிக்க வேண்டிய பகுதிகளில் கட்டப்பட்டால் எத்தனை வெள்ளம் வந்தாலும், மக்கள் காப்பாற்றப்படுவார்கள்.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதபதி எஸ்.க.கவுல், 'இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழித்து விடும்' என்று சில நாட்களுக்கு முன்பு வந்த முதல் மழை வெள்ளம் பற்றிக் குறிப்பிட்டார். அவர் சொன்ன அந்த வாக்கு அருள் வாக்கு என்பது இரண்டாவது முறை சென்னையின் மீது தாக்குதல் நடத்திய இயற்கை காட்டி விட்டது. 'பருவநிலை மாற்றம் இந்த மழைக்கு காரணம்' என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியிருந்தாலும், 'ஏரிகளும் குளங்களும், விவசாயக நிலங்களும்' வீடுகளாக மாற்றப்பட்டதே இந்த பேராபத்துக்குக் காரணம்.

200க்கும் மேற்பட்ட மக்கள் இறப்புக்குக் காரணம். 'மியாட்' மருத்துவமனையில் ஒட்சிசன் விநியோகம் கிடைக்காததால் 14 பேருக்கும் மேற்பட்டோர் இறந்து போன கொடுமைக்குக் காரணம். 'தயவுசெய்து இயற்கையைத் தொல்லை செய்யாதீர்கள்'. இதுதான் இன்றைக்கு தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் எழுப்பும் கூக்குரல்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X