Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
R.Tharaniya / 2025 ஜூலை 07 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஸ்மன்
தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்டமை முதல் நடைபெற்று வருகின்ற அனைத்து விதமான முயற்சிகளும் வீணானவைகளாகவே போய்க் கொண்டிருக்கின்றன.
ஆனால், போராட்டத்தை ஆரம்பித்த தமிழ் மக்களையும் போராட்ட குணம் கொண்டவர்களையும் அடக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட பயங்கரவாதத் தடைச்சட்டம் இப்போதும் நீக்கப்படவில்லை.
ஆனால், 1979இல் தற்காலிக ஏற்பாடாக ஏற்படுத்தப்பட்டு இதுவரையில் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவில்லை. இருந்தாலும் அச்சட்டத்தை நீக்குவது குறித்து அக்கறை செலுத்துவதாக கருத்துக்கள் அரசாங்கங்களால்
முன்வைக்கப்படுவது மாத்திரமே நடைபெற்று வந்திருக்கிறது.
இதனுடன் சேர்ந்த ஒரு அறிவிப்பாகவே கடந்த வாரம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் வெளியிடப்பட்ட கருத்தையும் கொள்ளமுடியும்.
இந்த இடத்தில் தான், அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலுக்குத் தயாராகிறதா என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது. பயங்கரவாதத் தடைச்சட்டதை நீக்குவதற்கான முழு முயற்சியில் இருப்பதாக சொல்வதும் ஒரு ஏமாற்றமாகவே அமையும் என்ற சந்தேகத்துடனேயே இதனை நாம் அணுகுவதே புத்திசாலித்தனம்.
மக்கள் விடுதலை முன்னணியைத் (ஜே.வி.பி) தலைமையாகக் கொண்டு இயங்குகின்ற தேசிய மக்கள் சக்தி ஒரு புதிய கட்சியல்ல. அது ஒரு கூட்டணி. இருந்தாலும் கூட மக்கள் விடுதலை முன்னணியே தேசிய மக்கள் சக்தியை இயக்கும் சக்தியாகும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இவ்வாறான நிலையில், மக்கள் விடுதலை முன்னணியின் கடந்த கால அரசியலை எடுத்துக் கொண்டால் மக்களுக்கான நல்ல விடயங்களைச் செய்யவிருக்கிறோம். நாட்டை கட்டியெழுப்பவிருக்கிறோம் என்கிற கோசங்களுடன் ஆட்சிக்கு வந்து இதுவரையில் பிரயோசனமாக எதனையும் செய்ததாகப் பதிவுகள் இல்லை என்றே சொல்லமுடியும்.
இருந்தாலும், தாம் ஏதோ மலையைப் பிழந்து மாமரத்தில் சாத்திவிட்டதான தோரணையே காணப்படுகிறது. அதே நேரத்தில் அரசியல்வாதிகள் வலையை விரித்து ஒவ்வொருவராகக் குற்றவாளிகளாகக் கண்டுபிடிக்கப்பட்டு சிறையில் அடைப்பதற்கான அரசியல் பழிவாங்கல் செயற்திட்டமே நடைபெறுகிறது.
நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம் கணக்கில்லாமல் தமிழ் மக்களின் போராட்டத்தினை அடக்குவதற்காக செலவு செய்யப்பட்ட நிதியும் முக்கிய காரணம் என்பதனை ஏற்காமல், பெரும்பான்மைத் தரப்பும் அரசாங்கங்களும் நகர்ந்து கொண்டிருக்கின்றன என்பது அவதானிக்கப்படுவதில்லை.
அரசாங்கத்தின் கஜானா காலியாகும் நிலை வெறுமனே அரசாங்கங்களிலிருந்த அரசியல்வாதிகளின் ஊழலால் மாத்திரம் மேற்கொள்ளப்பட்டது என்ற ஒரு மாயை ஏற்படுத்தி, தமிழ் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தினை அனைவரும் மறக்கின்ற சூழலை ஏற்படுத்தவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது ஒரு நாட்டில் வாழும் ஒரு இனத்தின் உரிமையை மறுக்கின்ற அல்லது மறைக்கின்ற செயற்பாடே என்பதனை யாரும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை. இந்த சிந்தனையில் மாற்றம் ஏற்படாத வரையில் நாட்டின் மீட்சி சாத்தியமில்லை என்பதனை எல்லோரும் நினைவில் வைத்திருக்க வேண்டும்.
நாட்டில் தேர்தல்கள் நடைபெற ஏற்பாடுகள் நடைபெறும் போது ஆட்சியிலிருக்கும் அரசாங்கங்களால் மக்களுக்கான நலத்திட்டங்கள் அறிவிக்கப்படுவதும் பொருட்களின் விலைகள் குறைக்கப்படுவதும் நடைபெறுவதும் தேர்தல் முடிந்த பின்னர் அவை இல்லாமல் செய்யப்படுவதும் நடைபெறுவது வழமையாகும்.
அதேபோன்ற செயற்பாடுகள் கடந்த பாராளுமன்றத் தேர்தல், உள்ளூராட்சித் தேர்தல்களில் நடைபெற்றிருக்கவில்லை.மாறாக, ஊழல் ஒழிப்பு, பொருளாதார நிலை நிறுத்தம் போன்ற விடயங்களே வெளிவந்தன. அதேநேரத்தில், படுகொலை செய்யப்பட்ட ஊடகத்துறையினரின் கொலைகளுக்கான நீதி, 2019 ஈஸ்டர் தாக்குதல் போன்ற விடயங்களே முன்னிலைப்படுத்தப்பட்டன.
அரசியலை அரசியலாக நடத்தத் தெரிந்த மக்கள் விடுதலை முன்னணி, நடத்துகின்ற அரசியல் நாடகங்களின் மூலம் எந்தவிதமான நல்ல வித மாற்றங்களையும் மக்களுக்கோ நாட்டுக்கோ ஏற்படுத்தாது என்பதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ளாதிருப்பது கவலையானதே.
இலங்கை அரசியல் வரலாற்றில் குள்ளநரித்தனம் மிக்கவர் என்ற புகழுக்குரிய ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் நரித் தனமான சிந்தனையின் வெளிப்பாடே தற்காலிக ஏற்பாடாகக் கொண்டு வரப்பட்ட 1979ம் ஆண்டின் 48ம் இலக்கப்
பயங்கரவாதத் தடைச்சட்டம்.
அன்று நடைபெற்ற தமிழ் இளைஞர்களின் உணர்வுப்பூர்வமான உரிமைப் போராட்டத்திற்கு முகங்கொடுக்க முடியாமல் சர்வதேசநியமங்களுக்குப் புறம்பாக, சர்வதேச மனிதாபிமான சட்டங்களுக்கு முரணாக, குறுகிய காலத்துக்கென பாராளுமன்றத்தை ஏமாற்றி, தனது குள்ள நரி இராஜதந்திரத்தைச் சாமர்த்தியமாகச் செயலில் காட்டி, இந்த நாட்டின் தமிழ்
இளைஞர்களை, தமிழ்த் தேசியவாதிகளை இலக்கு வைத்துக் கொண்டு வரப்பட்டதே பயங்கரவாதத் தடைச் சட்டம்.
ஆயுதப் படையினருக்கும், முப்படையினருக்கும், பொலிஸாருக்கும் நாட்டின் குற்றவியல் நடைமுறைக் கோவைக்கும் மற்றும் தண்டனைச் சட்டக் கோவைகளுக்கு அப்பால் தனித்துவமான அதிகாரங்களை வழங்கி எவர் மீதாவது சந்தேகம் இருந்தால் கைது செய்யலாம் அல்லது உயிரைப் பறிக்கலாம்.
மரண விசாரணையோ எவ்வித விசாரணையோ இன்றி இந்த நாட்டை நேசிக்கும் தனது வாழ்வுரிமையைக் கோரும் எந்தத் தமிழனையும் அழித்துவிடலாம். முடிந்தவரை தமிழனைக் கொடுமைப்படுத்தலாம்.
என்கிற மனிதாபிமானம் கண்டிராத, மனித குலம் கண்டிராத, சித்திரவதைகளைச்
செய்வதற்குப் படையினருக்கு அங்கீகாரம் அளித்ததே இந்தச் சட்டம்.
சர்வதேச நெருக்குவாரத்தால், இந்தப் பயங்கரவாதத் தடைச் சட்டத் திருத்தம் பற்றிக் கடந்த அரசாங்க ஆட்சிக்காலத்தில் பேச்சுகள் இருந்தன.
ஆனால், பயங்கரவாதத் தனிச்சட்டத்தைப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமாக உருமாற்ற அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. இருந்தாலும், அதற்கிருந்த எதிர்ப்புகள் காரணமாக அம்முயற்சி கைவிடப்பட்டிருந்தது. அப்போது மக்கள் விடுதலை முன்னணியும் இதற்கு ஆதரவானதாக இருந்த நிலை காணப்பட்டது.
1979களில், பயங்கரவாதத் தடைச் சட்டம் இந்த நாட்டிலுள்ள தமிழர்களை, தமிழ் இளைஞர்களை இலக்காகக் கொண்டே கொண்டுவரப்பட்டது.
ஆனால், இந்தச் சட்டம் ஈஸ்ரர் தாக்குதலின் பின் முஸ்லிம்களையும், அரகலயவிற்குப் பின்னர்
சிங்களவர்களையும் நோக்கிப் பாயத் தொடங்கியமே தமிழ், முஸ்லிம், சிங்களம் என்ற வித்தியாசமின்றி, பயங்கரவாதத் தடைச் சட்டம், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிர்ப்புகள் உருவாகக் காரணமாக இருந்தது. ஆனால், இந்த
நாட்டின் அரசியலை இயக்கும் மகா சங்கத்தினர், மல்வத்து, அமரபுர நிக்காய சங்க நாயக்கர்கள், பௌத்த பீடங்களின் பிரதானிகள், பௌத்த மேலாதிக்கச்
சிந்தனை வாதிகள் இதற்கு வெளியிலேயே இருந்து வந்தனர்.
தமிழ் மக்கள் கொன்றொழிக்கப்பட்ட போது தமிழ் கத்தோலிக்க பாதிரிமார்கள் குரல் கொடுத்தபோதிலும் சிங்கள பாதிரியார்கள் சத்தமின்றியே இருந்தனர்.
ஆனால், ஈஸ்ரர் தாக்குதலையடுத்துகர்தினால் மல்கம்
ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்டோர் பெருமளவில் குரல் கொடுப்பதைக் கண்டிருந்தோம். இதற்கு எந்த வகையான பாகுபாடு என்று பெயர் சூட்டுவது என்று யாருக்கும் தெரியவில்லை.
இந்தப் பாரபட்சம் முதலில் தமிழ் மக்கள் விடயத்தில் களையப்படவேண்டும். இந்த நாட்டின் தமிழ் முஸ்லிம், சிங்கள மூவின மக்களும் ஒத்துழைக்கின்ற ஒரு ஏற்பாடு உருவாக்கப்படவேண்டும்.
இன்று இந்த நாட்டின் ஆட்சியாளர்களாக இருக்கின்ற மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி முன்னைய அரசாங்கங்கள் போன்று சட்டத் திருத்தங்கள் தொடர்பில் போலி வேடம் காண்பிப்பதாக இருந்துவிடக்கூடாது என்பது இந்த இடத்தில் முக்கியமாகும்.
பயங்கரவாதத் தடைச் சட்டமானது நாட்டுக்குத் தேவையற்ற விடயம் என்று, அச்சட்டம் உருவாக்கப்பட்ட காலம் முதலே குரல் கொடுத்து வந்த, எதிர்ப்புகளைக் காண்பித்துவந்த தமிழர்கள் அதனைப்பற்றிப் பேசமறந்தவர்களாக
ஆனதற்கு முஸ்லிம், சிங்கள மக்களின் மீது அச்சட்டம் பாயத் தொடங்கியதும் உருவான களேபரமேயாகும்.
ஆனாலும், அச்சட்டம் தமிழர்களுக்கெதிராகக் கொண்டுவரப்பட்டது என்பதில்
எந்த மாற்றுக் கருத்துமில்லை.இவ்வாறான நிலையில் தமிழர்கள் மாத்திரமல்ல எல்லோரும் கேட்பது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் திருத்தம் அல்ல. இந்தக் கொடிய சட்டம் முற்று முழுதாக நீக்கப்பட வேண்டும்.
தூக்கி எறியப்பட வேண்டும் என்பதாகவே இருக்கிறது.இருந்தாலும் இந்த அரசாங்கம், உருவாகி ஒன்பது மாதங்கள் கடந்த நிலையில் இது தொடர்பில் கருத்துக்கள் வெளிவருவது அரசியல் நாடகமா என்று சந்தேகிக்கவே தோன்றுகிறது. இதனைச் சந்தேகப்படாத ஒன்றாக மாற்றவிடவேண்டியது மக்கள் விடுதலை முன்னணி தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கமேயாகும்.
வெறுமனே, பயங்கரவாதத்துச் சட்டம் பற்றிய பேச்சை எடுப்பது தமிழர்களுக்கோ இந்த நாட்டு மக்களுக்கோ நிம்மதியான வாழ்வைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக அல்லாமல், சர்வதேச அழுத்தம், ஐரோப்பியப் பாராளுமன்றம் இலங்கைக்காக வழங்கும் ஜி.எஸ்.பி. வரிச்சலுகை, வரவிருக்கின்ற மாகாண
சபைத் தேர்தல் காரணங்களாக இல்லாமலிருப்பதே நல்லது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
3 hours ago
3 hours ago