Janu / 2026 பெப்ரவரி 09 , பி.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
லக்ஷமன்
வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 50ஆண்டு நிறைவையொட்டிய நகர்வுகளில் தமிழர்கள் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அத்துடன், தங்களது சுயநிர்ணயக் கோரிக்கைக்கும் நாட்டில் யுத்த காலத்தில் நடைபெற்ற இன அழிப்பு, காணாமலாக்கப்பட்டமை மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு சர்வதேச நீதியே தேவை உள்நாட்டுப் பொறிமுறையில் எங்களுக்கு நம்பிக்கையில்லை என்று தொடர்ச்சியாக போராடியும் வருகின்றனர்.
இந்தநிலையில்தான், நாடாளுமன்றத்தில் சில தினங்களுக்கு முன்னர் பேசிய அமைச்சர் விஜித ஹேரத் கடந்தகால மனித உரிமை மீறுல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல், நல்லிணக்கத்தை அடிப்படையாக கொண்ட வேலைத்திட்டங்களை உள்நாட்டுப் பொறிமுறையின் கீழ் முன்னெடுத்துள்ளோம். இராணுவ அதிகாரிகள் மற்றும் நபர்கள் குறித்து எடுக்கப்படும் நடவடிக்கைகள், தடைகளை நாம் கண்டிக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார். பிரித்தானியா இராணுவ பிரதானிகளுக்கு விதித்துள்ள தடைகுறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இக்கருத்தினைஅவர் வெளியிட்டிருக்கிறார்.
இக்கருத்து, கடந்த வருடம் செப்ரம்பரில் நடைபெற்ற 60ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு சார்பில் உரையாற்றிய போது வெளிவிவகார அமைச்சராக விஜித்த ஹேரத் கூறிய, இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவமளிக்கிறோம். சர்வதேச தலையீடுகளை நிராகரிக்கிறோம். உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடையமுடியும்.
வெளித் தலையீடுகள் அதன் உள்நாட்டு நீதி மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும். இலங்கை மக்கள் ஒரு நியாயமான, சமமான மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார்கள். வெளிப்புற நடவடிக்கைகள் பிரிவினையை மட்டுமே ஏற்படுத்தும் என்ற கருத்துக்கும் எந்த வித்தியாசமுமில்லை.
இக்கருத்து அமைச்சர் விஜித ஹேரத்தினுடைய தனிப்பட்ட கருத்தல்ல. அரசாங்கத்தினதும் ஜனாதிபதியான அனுரகுமார திசாநாயக்கவினதும் உறுதியான நிலைப்பாடு. ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தன்னுடைய ஜனாதிபதித் தேர்தல் பிரச்சார காலத்திலும் அதற்கு முன்னரும் இராணுவத்திற்கெதிரான மனித உரிமை மீறல் செயற்பாட்டுக்கு ஒருபோதும் இடமில்லை என்ற உறுதியான நிலைப்பாட்டினையே வெளிப்படுத்தியிருந்தார். அதனையே தற்போதும் தொடர்ந்து வருகிறார்.
ஜே.வி.பி.யைப் பொறுத்தவரையில் தங்களது நிலைப்பாட்டில் உறுதியுடனேயே இருக்கிறார்கள். அதற்கான காய்நகர்த்தல்களும் அதற்கேற்றால் போலவே தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் கடந்த காலத்தில் முன்னைய அரசாங்கங்கள் எவ்வாறு தமிழர்களை தங்களுடைய அரசியல் காய் நகர்த்தல்களுக்குப் பயன்படுத்திக் கொண்டார்களோ அவ்வாறே, சற்று அதிகமாகவே தேசிய மக்கள் சக்தியினர் பயன்படுத்தி வருகிறார்கள். இதற்கு தமிழக முதல்வரைச் சந்திக்கச்சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள், தற்போது இந்தியாவின் டெல்லிக்கு சென்றிருக்கின்ற ஜே.வி.பி.யின் செயலாளர் ரில்வின் சில்வாவுடன் பயணமாகியிருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை உதாரணமாக காண்பிக்கமுடியும்.
2024 செப்டம்பர் ஜனாதிபதித் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திக்கு சிறுபான்மை மக்களின் அமோக ஆதரவு கிடைத்தது. வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாண மக்கள் தேசிய கட்சி ஒன்றுக்கு இவ்வளவு ஆதரவு வழங்கியது இலங்கையின் வரலாற்றில் இதுவே முதல்முறையாக இருந்தது. பல்வேறு சமூகத்தினரையும், பெண்களையும் உள்ளடக்கிய மிகச் சிறந்த நாடாளுமன்றம் இது என்ற பாராட்டும் கிடைத்தது. பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றத்தே ர்தல்கள் நடத்தப்பட்டன. இருந்தாலும் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கான ஆறுதலான செயற்பாடுகளைக் காணவில்லை என்பதே குற்றச்சாட்டாக மாறிவருகிறது. இதற்குள் மாகாண சபைத் தேர்தலும் இருக்கிறது. ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்க தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கும். தங்களது விடயங்களில் கடந்த கால அரசாங்கங்கள் போன்று நடந்து கொள்ளாது என்று தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருந்தாலும் பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக
பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டத்தினை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. நிகழ்நிலைக் காப்புச் சட்டம் வேண்டாம்
என்று எதிர்ப்புகள் தொடர்ந்தவண்ணமிருந்தாலும் இன்னமும் அதற்கான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வடக்கு கிழக்கில் தொல்பொருள் சார்ந்த விடயத்தில் பௌத்த மயமாக்கலுக்கு அனுசரணையான செயற்பாடுகள் தொடர்கின்றன.
பொருளாதார அபிவிருத்தியை ஏற்படுத்தல், ஊழலை ஒழித்தல், சமூக பாதுகாப்பு, நலத்திட்டங்கள் மேற்கொள்ளுதல், விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட நிவாரணங்கள் வழங்குதல். சுகாதார கல்வித் துறைகளுக்கு அதிக நிதிகளை ஒதுக்குதல், வறுமையில் வாடுவோருக்கும்- பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகளை வழங்குதல் போன்றவற்றின் ஊடாக பொதுப்படையாக மக்களின் மனங்களை கொள்ளை கொள்ள முனையும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமிழ் மக்களின் மனங்களை வெல்ல எதனைச் செய்கிறது என்றால் அதற்குப் பதில் மௌனமாகவே அமைகிறது.
1979களில் தற்காலிக ஏற்பாடாக உருவாக்கப்பட்டு 46ஆண்டுகளைக் கடந்தும் அமுலிலிருக்கும் பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டம் ஏற்படுத்தப்படவிருக்கிறது. கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட அத்தனை விடயங்களிலும் நெருக்குதல்களைக் கொடுக்கும் சட்டமாகவே இது பார்க்கப்படுகிறது. இருந்தாலும், நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திற்கு இருக்கும் பெரும்பான்மையில் அது நிறைவேறிவிடும் என்பதில் சந்தேகமில்லை.
வேண்டாம் என்று அனைவரும் கூறும் நிகழ்நிலைக் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்று அரசாங்கம் கூறுகிறது. அதே போன்று பாதிக்கப்பட்ட மக்கள் நிராகரிக்கின்ற காணாமல்போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்றவற்றினை தங்களுக்கேற்றாற்போல் மேம்படுத்தும் வேலைகள் நடைபெற்று வருகின்றன. புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படும் என்று வெளிப்படுத்தப்பட்டிருக்கின்ற போதிலும் நல்லிணக்கத்திற்கு தமிழ்த் தலைவர்கள் உதவ வேண்டும். பிரிவினைவாதத்துக்கு ஒருபோதும் இடமில்லை என்றே ஜனாதிபதி கூறிக்கொண்டிருக்கிறார்.
இறுக்கமான சட்ட நடைமுறைகள், அதற்கேற்றாற்போன்ற அரசியல் நகர்வுகளுடன் நகரும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெளியில் காண்பிக்கும் முகத்துக்கும் உள்ளே இருப்பதற்கும் வித்தியாசம் கொண்டதாக இல்லாமல் இருந்தாலும் நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற தமிழ் மக்களின்இனப்பிரச்சினைக்கு தீர்வை முன்வைக்காமல் காலம் கடத்தி வருவது சந்தேகங்களை ஏற்படுத்துவதாகவே அமையும்.
நாட்டிலுள்ள பெரும்பான்மை மக்களை முழுமையாகத் திருப்திப்படுத்தாது ஒரு தேசிய அரசாக செயற்பட முடியாது. இது பொதுப்படையான, எழுதப்படாத விதியாகும்.இதனையே தேசிய கட்சிகளாக இருக்கின்ற ஐக்கிய தேசிய கட்சி, சிறிலங்கா சுதந்திரக்கட்சி, சிறிலங்கா பொதுஜன பெரமுன போன்ற கட்சிகளுக்கும் பொருந்தும். அதேநேரத்தில் வடக்கு கிழக்கின் பெரும்பான்மை மக்களின்
பலத்துடன் இலங்கை தமிழரசுக் கட்சியும், மலையகத்தில் இலங்கை தொழிலாளர் காங்கிரசு தோட்டத் தொழிலாளர் சங்கம் போன்றவை மலையக மக்களின் ஆதரவுடன் இருந்து வருகின்றன. இதற்கு ஜே.வி.பி.யோ, அக்கட்சி தலைமையிலான தேசிய மக்கள் சக்தியோ விதிவிலக்கானதல்ல.
அந்த வகையில்தான், தேசிய ரீதியான முடிவொன்றை எடுக்கின்ற சந்தர்ப்பத்தில் பெரும்பான்மை மக்களை முதலில் திருப்திப்படுத்துமா என்பதனையே ஒரு கட்சி சிந்திக்க வேண்டிய கட்டாயம் இலங்கையில் காணப்படுகிறது. இந்தவகையில் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தின் நிலைப்பாடு முதலில் பெரும்பான்மை மக்களை மனதில் கொண்டது என்பதே. இந்த நிலைமையை, பெரும்பான்மை மனோநிலையில் மாற்றம் ஏற்படாத வரையில் இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், சுயநிர்ணயக் கோரிக்கைகள் முடிவுக்குவராததாகவே தொடரப் போகின்றன என்பது மாத்திரமே நிச்சயம். இதனை அப்படியே வைத்துக் கொண்டு செம்மணி புதைகுழி உட்பட பல்வேறு புதைகுழிகள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்படுகின்றன. பொலிஸ் துறைக்கு சுதந்திரம் வழங்கப்பட்டிருக்கிறது. ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழங்குகள் மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுதல், தனியார் காணிகள் விடுவிக்கப்படுதல், மோதல்களில் உயிரிழந்தோரை நினைவு கூருவதில் தலையிடாமை போன்றவற்றினால் எதிர்பார்க்கப்படும் முடிவு எட்டப்படப் போவதில்லை.
இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதையும், வெளிநாட்டுத் தலையீடுகளை நிராகரிப்பதையும், உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என்ற நம்பிக்கையையும் கொண்டிருக்கும் இலங்கை அரசாங்கத்திடம் பெரும்பான்மை ஆதரவை இலக்காக கொண்டிருக்கும் அரசாங்கத்திடம் எதனை எதிர்பார்க்க முடியும் என்பதுதான் தமிழ் மக்களின் கேள்வி.
8 hours ago
09 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
09 Feb 2026