Thipaan / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
பொதுவாக, சர்வதேச மாநாடுகள் நம் கவனத்தை ஈர்ப்பன. பல வேளை, அவை ஏன் நடக்கின்றன என்ற நினைவில்லாமலே அவை நிகழ்வதுண்டு. அங்கு பேசும் விடயங்களை விடப் பேசாத விடயங்கள் பெரியன. அவ்வாறே உடன்பட்டவற்றை விட உடன்படாதவை அதி முக்கியமானவை. உடன்பட்ட விடயங்களிலும் உடன்படாத நாடுகள் எவை என்பது நோக்கற்குரியது.
அநேகமாக, இக் கட்டுரையை நீங்கள் வாசிக்கும் போதில் பிரான்சின் பாரிஸ் நகரில் எமது அடுத்த சந்ததியின் எதிர்காலம் குறித்த முடிவுகள் காணப்பட்டிருக்கும். தமிழ்நாட்டிற் பெய்த பெருமழைக்குக் காரணமானோர் அங்கு கூடியுள்ளனர் எனின்; நம்ப முடியுமா?
பாரிஸில் இப்போது நடக்கிற பருவநிலை மாநாடு எல்லோர் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பருவநிலை மாற்ற மாநாடு இம்முறை 21ஆவது வருடமாக நடைபெறுகிறது. உலகின் எல்லா மூலைகளில் இருந்தும் சென்றுள்ள அரச தலைவர்களும் அதிகாரிகளும் இம் முறையும் உடன்பாட்டை எட்டுவதற்காகப் பேசுகிறார்கள்.
எதிர்பாராத காலநிலையையும் பருவநிலை மாற்றங்களையும் உலக மக்கள் முன்னெப்போதினுங் கூட உணர்கின்றனர். பருவங்களின் வரவில் மாற்றமும் அளவிறந்த மழைவீழ்ச்சி ஒருபுறமும் மோசமான வரட்சி மறுபுறமும் என எதையும் எதிர்வுகூற இயலாதவாறு இன்றைய உலகம் இயங்குகிறது. எதிர்பாரா வரட்சி, வெள்ளப்பெருக்கு போன்ற இயற்கைத் தாக்கங்களால் ஆண்டுதோறும் பல்லாயிரம் பேர் மடிகின்றனர்;. இவை தற்செயல் நிகழ்வுகளல்ல. பூகோள வெப்பமடைதலும் (Global Warming) காலநிலை மாற்றமும் (Climate Change) பற்றி நாம் அடிக்கடி கேட்கின்றோம். இப் பின்னணியிலேயே இம் மாநாடு முக்கியமாகிறது.
19ஆம் நூற்றாண்டின் இறுதி தொட்டுப் புவிக்கோள வெப்பநிலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக, 20ஆம் நூற்றாண்டில், புவிக்கோளம் 0.8 பாகை செல்சியஸ் சூடாகியுள்ளது. மனிதச் செயற்பாடுகளே இதன் முக்கிய காரணமாகும். காடுகளை அழித்தல், மரங்களை வெட்டுதல், அளவுக்கதிகமான புதைபடிவ எரிபொருட் (fossil fuel) பாவனை என்பன அவற்றுள் முக்கியமானவை. 21ஆம் நூற்றாண்டில் புவிக்கோளமானது மேலும் 1.1 பாகை செல்சியஸ் முதல் 6.4 பாகை செல்சியஸ் வரை அதிகரிக்கும். அதனால் வடதுருவப் பகுதியின் பனிப் பாளங்கள் உருகிக் கடல் மட்டம் உயரும். கடல் மட்டத்தையண்டிய தீவுகள் பல கடலில் அமிழ்ந்து போகும். உலகெங்கும் தட்பவெட்ப நிலைகள் மாறும். புவி வெப்பமடைதல் இத்தகைய பாரிய ஆபத்துக்களை உள்ளடக்கியதாகும்.
பருவநிலை மாற்றங்கள் எனுஞ் சொற்றொடர் பொதுப்பட வானிலை மாற்றங்களைக் குறிக்கும். மாகடற் சுற்றோட்டம் (oceanic circulation), சூரியக் கதிர்வீச்சு (solar radiation), எரிமலைக் குமுறல் (volcanic eruption), புவி மேலோட்டுப் பேரசைவு (plate tectonics) என்பவற்றுக்கப்பால் மனிதச் செயல்களினதும் விளைவுகளே பருவநிலை மாற்றங்களின் அடிப்படைக் காரணிகளாம். அவையே புவி வெப்பமடைதலின் காரணங்களுமாம். பருவநிலை மாற்றங்கள் என்ற பதம் இன்று மனிதச் செயல்களின் விளைவான மாற்றங்களைக் குறிக்கிறது.
பசுமைக்குடில் வாயுக்கள் என்பன சூரியக் கதிர்வீச்சின் வெப்ப அகச்சிவப்புப் பகுதியிலுள்ள வெப்பத்தை உறிஞ்சி வளியைச் சூடேற்றுவன. இதுவே பசுமைக்குடில் விளைவின் அடிப்படைக் காரணமாம். புவியின் நீராவி, காபனீரொட்சைட்டு, மீதேன், நைதரசன் ஒட்சைட்டுகள், ஓசோன் ஆகியன வளிமண்டலத்தில் உள்ள முக்கிய பசுமைக்குடில் வாயுக்களாம். அவை புவி வெப்பத்தை உயர்த்துகின்றன.
தொழிற் புரட்சியையடுத்துப் புதைபடிவ எரிபொருட்கள் அதிகரிக்கும் அளவில் எரிபடுவதால் வளிமண்டலத்திற் காபனீரொட்சைட்டின் அளவு துரிதமாக அதிகரித்துள்ளது. புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணம் அதுவே.
புவி வெப்பமடைதலை ஒரு பிரச்சினையாகக் கருதி அதைக் கையாளும் முதலாவது சர்வதேச முயற்சியாக 1992இல் பிரேசிலின் ரியோ டி ஜெனேரோவில் புவி உச்சி மாநாடு நடத்தப்பட்டது. அதன் போது 'ஐ.நா. பருவநிலை மாற்றச் சாசனக் கட்டமைப்பு' (United Nations Framework Convention on Climate Change - UNFCCC) நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து 1997இல் யப்பானின் கியோட்டோ நகரில் நடந்த கூட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க 'கியோட்டோ உடன்படிக்கை' எட்டப்பட்டது. அதன்போதே, அதிகளவு காபனீரொட்சைட்டை உமிழும் நாடுகள் 2008-2012 காலத்துள் தமது காபனீரொட்சைட்டு உமிழ்வை 1990ஆம் ஆண்டில் இருந்த அளவுக்கோ அதினும் 6-8சதவீதம் கீழாகவோ குறைக்கவேண்டும் எனத் திட்டமியற்றப்பட்டது. அமெரிக்கா அதை ஏற்கவில்லை. அதனால், அது காலப்போக்கிற் செயலற்ற உடன்படிக்கையாகியது.
இன்றுவரை, புவி வெப்பமடைதலையும் அதன் விளைவான பருவநிலை மாற்றங்களையும் கட்டுப்படுத்துதல் மூலம் புவியை மனிதர் வாழ்வதற்கு உகந்த கோளாகத் தக்கவைக்க எடுத்த முயற்சிகளிற் 'கியோட்டோ உடன்படிக்கை' முன்னோடியானது. அவ்வுடன்படிக்கை விருத்தியடைந்த நாடுகளின் புதைபடிவ எரிபொருட் பாவனையைக் குறைப்பதன் மூலம் காபனீரொட்சைட்டு உமிழ்வைக் குறைக்கக் கோரியது. இது மனித குலத்தின் இருப்புக்கு அவசியமானது என்று வலியுறுத்தப்பட்டது. ஆனால், இன்றுவரை இவ்விடயம் தொடர்பில் உடன்பாடு எட்டப்படவில்லை.
இம்முறை மாநாடும் உலகில் உள்ள அனைத்து நாடுகளையும் கட்டுப்படுத்தத்தக்க ஓர் உடன்படிக்கையை எட்டுவதற்காகக் கூட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இவ்வாண்டுதான் வரலாற்றில் வெப்பமான ஆண்டாகப் பதிவாகியுள்ள நிலையில் பருவநிலை மாற்றங்களின் விளைவுகளை மிக மோசமாக நாம் உணர்கிறோம்.
எப்போது புவிக்கோளத்தின் வெப்பநிலை 2 பாகை செல்சியஸ்க்கு மேல் அதிகரிக்கிறதோ அதன்பின் மனிதர் வாழ்வதற்குத் தகுதியற்றதாகப் பூமி மாறிவிடும்.
கடந்த இருபது ஆண்டுகளில் 1 பாகை செல்சியஸ்க்கு மேல் புவிவெப்பநிலை அதிகரித்துவிட்டது. ஆனாலும் நாடுகளும் உலகத் தலைவர்களும் இதைக் கட்டுப்படுத்த எதையும் செய்யவில்லை. மனித குல இருப்புக்கும் எதிர்காலத்துக்குமான குறைந்தபட்ச உடன்படிக்கையைக் கூட கடந்த இருபது வருடங்களாக எட்ட முடியவில்லை என்பது அதிர்ச்சியளிக்கக் கூடியது.
இன்று உலக அரசியலின் சர்வதேச வர்த்தகத்தின் முக்கியமான மையப்புள்ளி புதைபடிவ எரிபொருட்களாகக் கருதப்படுகின்ற பெற்றோலியம் மற்றும் இயற்கை வாயுக்கள். அமெரிக்காவும் மேற்குலகும் இவ்வளத்தைப் பெறுவதற்காகத் தொடர்ந்து போர்களில் ஈடுபட்டு வந்துள்ளன.
இவையே வர்த்தகத்துக்கும் தொழிற்றுறை வளர்ச்சிக்கும் பிரதானமானதாக இருக்கின்றது. மாற்று எரிபொருட்கள் பெரியளவில் வெற்றியளிக்காத நிலையிலும் அதற்கான முயற்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படாத நிலையிலும் புதைபடிவ எரிபொருட்கள் உலகின் அதிகாரத்துக்கான தவிர்க்கவியலாத குறியீடாகி விட்டன.
தற்போதைய நிலைமையைக் கருத்தில் கொண்டு புதைபடிவ எரிபொருட்களின் பாவனையை நாடுகள் குறைத்துக் கொண்டால் எண்ணெய் விற்பனை செய்யும் நாடுகளும் குறிப்பாக எண்ணெய்க் கம்பெனிகளும் சிக்கலில் மாட்டிக் கொள்ளும். இதனாற் புதைபடிவ எரிபொருட்களின் பாவனையைக் குறைக்கப் பலமுள்ள நாடுகள் உடன்படா. ஆனால், புவியின் மீது தாமும் அக்கறை கொண்டுள்ளதாகக் காட்ட பல்வேறு மோசடியான விடயங்களை அரங்கேற்றுகின்றன.
கியோட்டோ உடன்படிக்கையை நடைமுறைப்படுத்தும் போர்வையிற் காபன் உமிழ்வை வர்த்தகமாக்கினர். அது நுஅளைளழைn வுசயனiபெ எனப்படும். அதன்படி, பல்தேசியக் கம்பெனிகளும் நிறுவனங்களும், சட்டரீதியாக, வரையற்றுக் காபனீரொட்சைட்டை உமிழ்ந்தன. உருவாக்கிய புதிய முறைப்படி, காபன் உமிழ்வு வர்த்தகத்தில் ஒவ்வொரு நாடும், காபனீரொட்சைட்டை உமிழும் அதன் எல்லைக்குட்பட்ட நிறுவனங்கட்கு அவை வருடாந்தம் உமிழக்கூடிய காபனீரொட்சைட்டைத் தீர்மானிக்கும். அதினுங் குறைவாக அவை உமிழுமாயின் அக் குறைபாட்டுக்கமைய அவை மதிப்புப் புள்ளிகளைப் (credits)பெறும். அப் புள்ளிகளைப் பயன்படுத்தி அடுத்த ஆண்டில் அவை தமக்கு விதித்த அளவினும் மேலாகக் காபனீரொட்சைட்டை உமிழலாம். இந்தத் திட்டத்திற் கவனிக்க வேண்டிய மூன்று விடயங்கள் உள்ளன.
இம்முறை குறைவாக உமிழ்ந்து எஞ்சிய தொகையை அடுத்த ஆண்டு பயன்படுத்துவதாயின் மொத்தக் காபனீரொட்சைட்டு உமிழ்வு குறையாது.
சேமித்த புள்ளிகளை வேறு நிறுவனங்களுக்கு விற்றுப் பணம் சம்பாதிக்கலாம். தனக்கு விதித்ததினும் மேலாகக் காபனீரொட்சைட்டை உமிழ விரும்பும் ஒரு நிறுவனம் பிற நிறுவனங்களிடம் புள்ளிகளை வாங்கி மேலதிகமாகக் காபனீரொட்சைட்டை உமிழலாம். சூழலைப் பாதுகாக்கக்கூடிய செயற்றிட்டங்களை முன்னெடுப்பதன் மூலமும் நிறுவனங்கள் மேலதிக புள்ளிகளைப் பெறலாம். உதாரணமாக, மர நடுகை: மரங்கள் குறிப்பிட்டளவு காபனீரொட்சைட்டை உறிஞ்சுகின்றன. அவ்வடிப்படையில் நடுகை அளவிற்கமையப் புள்ளிகள் வழங்கப்படும். அப் புள்ளிகளைக் கொண்டு மேலுங் காபனீரொட்சைட்டை உமிழலாம்.
அதனாலேயே பல்தேசியக் கம்பெனிகள் மூன்றாமுலக நாடுகளில் மரங்களை நட்டுப் பாதுகாக்கின்றன. அதைவிடப், பருவநிலை மாற்றம் மேற்குலகில் அறஞ்சார் பிரச்சினையாக உருப்பெற்றுள்ளது. ஒவ்வொருவரும் இந்த உலகத்தைக் காக்கத் தாமும் பங்களிக்க வேண்டும் என எண்ண முற்படுகிறார்கள். எனவே, இந்த நிறுவனங்கள் இன்னொரு வியாபாரத்திலும் இறங்குகின்றன. தாங்கள் நடும் மரங்கட்குத் தனிமனித அனுசரணையாளர்களைப் பிடிக்கிறார்கள். அதன் மூலம் இரட்டை இலாபம் பார்க்கிறார்கள்.
இது இவ்வாறிருக்க, 21ஆம் நூற்றாண்டின் போர்கள் பருவநிலை மாற்றங்களின் பயனான போர்களாக (Climate Wars) அமையும்; என்ற கருத்தும் ஊக்குவிக்கப்படுகிறது. அதன் அடிப்படையாக அமைவோர் காலநிலை மாற்றங்களால் இடம்பெயரும் அகதிகளே என ஆய்வுகள் சொல்கின்றன. அவர்கள் சூழலியல் அகதிகள்(Environmental Refugees)அல்லது பருவநிலை அகதிகள் (Climate Refugees) எனப்படுகிறார்கள். இன்று உலகின் பல்வேறு பகுதிகளில் அதிகரித்துள்ள அகதிகள் நெருக்கடியுடன் கூடிய உள்நாட்டு மோதல்களின் உருவாக்கத்துக்கு பருவநிலை மாற்றங்கள் பங்களித்துள்ளன. அதைப் பிறிதொரு சந்தர்ப்பத்திற் பார்க்கலாம்.
மேற்குறித்த பின்னணியிலேயே, பல்தேசியக் கம்பெனிகளின் அனுசரணையுடன் பருவநிலை மாநாடு இம்முறையும் நடைபெறுகிறது. எக் கம்பெனிகளை மூடினாற் புதைபடிவ எரிபொருட் பாவனை குறையுமோ அவையே மாநாட்டுக்கு அனுசரணை வழங்குவது முரண்நகையாம்.
மாநாடானது, புவிக்கோளத்தின் மீதான கரிசனையுடையோராய்ப் பாவனை காட்ட எல்லோருக்கும் கிடைத்துள்ள அரங்கு. அரங்கு அழகாய்த் தெரியலாம். ஆனால், ஆட்டம் ஆபத்தானது.
32 minute ago
41 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
41 minute ago
48 minute ago