Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஏப்ரல் 30, புதன்கிழமை
மொஹமட் பாதுஷா / 2020 மார்ச் 13 , மு.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாடாளுமன்றப் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத்தாக்கல், நேற்று ஆரம்பமாகி இருக்கின்றது. இருப்பினும் தனித்தும் கூட்டாகவும் போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகின்ற முஸ்லிம் கட்சிகள், அரசியல் அணி சார்பாக யார், யாரை வேட்பாளராகக் களமிறக்குவது, எவ்வாறான தந்திரோபாயங்களைக் கையாள்வது தொடர்பில், இன்னும் இறுதி முடிவுகள் எட்டப்படவில்லை என்றே தெரிகின்றது.
எந்தப் பக்கத்தில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கும், இந்தத் தேர்தலானது, மிகவும் சவாலான ஒரு தேர்தலாக அமையும் என எதிர்பார்க்கலாம்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில், பெரும்பாலான முஸ்லிம்கள் பொதுஜன பெரமுனவை ஆதரிக்காத நிலையில், அக்கட்சியின் வேட்பாளர் வெற்றிபெற்று, ஜனாதிபதியாகத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர், இந்தப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
பிரதான முஸ்லிம் கட்சிகள், சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரிக்கும் நிலைப்பாட்டை எடுத்திருப்பதுடன், இதர முஸ்லிம் கட்சிகள், மொட்டு அணிக்கு ஆதரவளிக்கின்றன.
எனவே, அதிக எம்.பிக்களைப் பெறும் முஸ்லிம் அணி, எதிர்க்கட்சியில் அமர வேண்டிய நிலையும், ஆளுந்தரப்பில் குறைந்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களே அங்கம் வகிக்கக் கூடிய வாய்ப்பையும், தற்போதைய சூழலில், இத்தேர்தல் முடிவுகள் கொண்டு வரலாம் என அனுமானிக்க முடிகின்றது.
இதற்கு மேலாக, முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கடந்தகால செயற்பாடுகள், மக்களின் விரக்தி மனநிலை, தரமற்ற புதிய வேட்பாளர்கள், பல கட்சிகளுக்கு அளிக்கப்படுவதால் சிதறும் வாக்குகள் ஆகியவற்றின் காரணமாக, பல வேட்பாளர்கள் தோல்வியுற நேர்வதால், அடுத்த நாடாளுமன்றத்தில் முஸ்லிம் எம்.பிக்களின் மொத்த எண்ணிக்கை குறைவடைவதற்கான சாத்தியங்களும் இல்லாமலில்லை.
ஒருவேளை, எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும் சமூக சிந்தனை, முஸ்லிம் அரசியல் வழித்தட அனுபம் குறைவான திடீர் எம்.பிக்களும் முன்னரைவிட அதிகரிக்கச் சாத்தியம் இருக்கின்றது.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்காமலேயே, நாட்டை ஆளும் பொதுஜன பெரமுன, தனது அதிகாரத்தை ஸ்திரப்படுத்துவதற்கு, இத்தேர்தலைப் பயன்படுத்தும்; சுதந்திரக் கட்சியானது, கிடைப்பதை சுருட்டிக் கொள்ளும் நிலை உருவாகும்.
ஐக்கிய தேசிய கட்சி, தனித்துப் போட்டியிட்டால், அதன் ஊடாகத் தனது தன்மானத்தைக் காத்துக் கொள்ள, ரணில் விக்கிரமசிங்க முயற்சிப்பார். அதேபோன்று, சஜித் தலைமையிலான அணிக்கு, இது, அரசியலில் ஒருவகையில் ‘வாழ்வா சாவா’ போராட்டம் போன்றதுதான்.
எனவே, எந்தப் பாடுபட்டாவது அதிகாரத்தைப் பெற வேண்டும்; அல்லது, குறைந்த தோல்வியை உறுதி செய்ய வேண்டுமெனப் பெரும்பான்மை இனக் கட்சிகள் முனைப்புடன் இருக்கின்றன. இதற்காக, சிறிய பெரிய முஸ்லிம் கட்சிகளையும் தனிப்பட்ட முஸ்லிம் அரசியல்வாதிகளையும் கறிவேப்பிலையாகவே பெரும்பான்மையினக் கட்சிகள் பயன்படுத்தப் போகின்றன என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதைத் தமிழ்த் தேசிய அரசியல், ஓரளவுக்கு விளங்கிக் கொண்டுள்ளதாகத் தெரிகின்றது.
முஸ்லிம் அரசியலை இட்டு நிரப்பியுள்ள முஸ்லிம் கட்சிகள், அரசியல் அணிகள், மாற்று முஸ்லிம் கட்சியை விட, அதிக எம்.பிக்களை அல்லது அதிகாரத்தைப் பெறுவதற்கே முன்னுரிமை அளிக்கும் என்பது யாவரும் அறிந்த விடயமாகும்.
அதேநேரம், கடந்த ஆட்சிக் காலத்தில் அதிகாரம் இழந்திருந்த முஸ்லிம் அணிகள், மீண்டும் அதிகாரத்தைப் பெறுவதற்கும், ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் புறமொதுக்கப்பட்ட முஸ்லிம் கட்சிகள், தமக்கு விரும்பிய ஆட்சியை நிறுவுவதற்கும் கிடைத்திருக்கின்ற ஒரு வாய்ப்பாக, ஏப்ரல் 25 தேர்தலைப் பார்க்கின்றன.
எனவே, இந்தப் பந்தயக் களத்தில், பலமான குதிரைகளையே களமிறக்க வேண்டியுள்ளது. முகஸ்துதிக்காகவும் முன்னாள் எம்.பி என்பதற்காகவும் பொய்யான எதிர்வுகூறல்களை நம்பியும் வேட்பாளர்களைக் களமிறக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது.
குறிப்பாக, பொதுஜன பெரமுன- சுதந்திரக் கட்சிக் கூட்டணி, ஐக்கிய மக்கள் சக்தி, மக்கள் விடுதலை முன்னணி, சிலவேளை ஐக்கிய தேசிய கட்சி ஆகியவை முஸ்லிம் பகுதிகளில் போட்டியிடும். இதற்கு மேலதிகமாக, மேலும் பல முஸ்லிம் கட்சிகள், சுயேட்சைக் குழுக்கள் ஆகியனவும் வேட்புமனுக்களைத் தாக்கல் செய்யவுள்ளன.
எனவே, இருக்கின்ற வாக்குகள், பல துண்டங்களாகப் பிளவுபடவுள்ள சூழலில், அதில் பெரிய பங்கை எடுக்கப் போகின்ற வேட்பாளரைத் தீர்மானிப்பதிலேயே, முஸ்லிம் அணிகளின் வெற்றி தங்கியுள்ளது.
முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசங்களில், இவ்வாறான நிலைமையென்றால், மூன்றில் இரண்டு பங்கான முஸ்லிம்கள் செறிவற்றதாக வாழும் (வடக்கு, கிழக்குக்கு வெளியில்) தென்னிலங்கையில், சிங்களம், தமிழ் மக்களின் ஆசிர்வாதத்தையும் பெற்ற, முஸ்லிம் வேட்பாளரை நிறுத்த வேண்டிய நிலை காணப்படுகின்றது.
தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே, பல முஸ்லிம் அரசியல்வாதிகள், நாடாளுமன்ற ஆசனக் கனவு காணத் தொடங்கி விட்டார்கள். சில இடங்களில், அரசியல் பற்றிய முன்னனுபவம் எதுவுமற்ற சிலரும், இந்தப் பந்தயத்தில் வெற்றிவாகை சூடுவோம் என்று நம்புகின்றார்கள்; சொல்கின்றார்கள். நாடாளுமன்ற ஆசன ஆசை உள்ளவர்கள், பெரும்பாலும் கூறுகின்ற காரணம், “நமது பிரதேசத்துக்கு எம்.பி வேண்டும்” என்பதாகவே இருக்கின்றது.
இதேவேளை, முன்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்தவர்கள், தாம், தமது மக்களுக்குச் சேவை செய்திருக்கின்றோமா, மக்கள் தமக்கு மீண்டும் வாக்களிப்பார்களா? நாம் எதைச் சொல்லிப் பிரசாரம் செய்வது என்பது, அவர்களுக்குத் தெரியவில்லை. எனவே, அவர்கள் கற்பிதங்கள், பொய்கள், பகட்டுப் பிரசாரங்களைத் தயார்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள் எனலாம்.
எனவே, தகுதியுள்ளவர்கள், தகுதியற்றவர்கள் என, எல்லா இரகமானவர்களும் இந்தத் தேர்தலில் போட்டியிடப் பேராசைப்படுவதால், யாரை வேட்பாளராக நியமிப்பது என்ற சிக்கல், முஸ்லிம் கட்சிகளுக்கு ஏற்பட்டிருக்கின்றது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் அம்பாறை உள்ளிட்ட பல மாவட்டங்களில், இந்நிலைமையை அவதானிக்க முடிகின்றது.
இவ்வாறு, தமக்குள்ளேயே போட்டிபோட்டுக் கொள்ளும் வேட்பாளர்களால், கட்சித் தலைவர்கள் பெரும் தர்மசங்கடத்துக்குள் உள்ளாகியிருப்பதாக அறிய முடிகின்றது.
ஒரு குறிப்பிட்ட மாவட்டத்தில், அதிகப்படியான அரசியல்வாதிகள் தங்களையும் வேட்பாளராக நிறுத்துமாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் போது, அதில் ஒருவரைக் கட்சித் தலைவர் (தனது சொந்த நலனுக்காகவோ, களநிலைமையைப் பொறுத்தோ) தெரிவு செய்யும் போது, மற்றையவரைக் கட்சி இழக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன. இங்கு, மற்றையவர் என்பது, ஓர் ஊராகக் கூட இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.
இது பொதுவாக, அரசியல் அணிகளின் தலைவர்களுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமாக, மூன்று, நான்கு பேரை நிறுத்தி, மாறி மாறி வாக்குப்போடும் சூத்திரம் இம்முறை பலிக்காது என்பதை, இப்போதே அனுமானிக்கக் கூடியதாகவும் உள்ளது.
இவற்றுக்கெல்லாம் மேலாக, அந்தக் கட்சி ஆதரிக்கும் குறிப்பிட்ட வேட்பாளரை, பெரும்பான்மைக் கட்சியின் மேலிடம், அங்கிகரிக்க வேண்டிய ஒரு தேவைப்பாடும், சில இடங்களில் காணப்படுகின்றது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் 196 பேரே மக்களால் எம்.பிக்களாகத் தெரிவுசெய்யப்பட போகின்றனர். மேலும், 29 பேருக்கு தேசியப் பட்டியல் நியமன எம்.பி பதவி கிடைக்கும் என்ற யதார்த்தத்தின் படி, எல்லாத் தேர்தல்களையும் போல, இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அரைவாசிக்கு அதிகமான வேட்பாளர்கள் வெற்றிக் கனியைச் சுவைக்கப் போவதில்லை என்பதே நிதர்சனம்.
எனவே, கொரோனா வைரஸ் பதற்றங்களை எல்லாம் தாண்டி, ஏப்ரல் 25 இல் நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்ற தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியாது.
எனவே, ஒவ்வொருவருக்கும் ‘தான் பெரிய அரசியல்வாதியாக வரவேண்டும்; நாடாளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற வேண்டும்’ என்று ஆசைப்படுவதில் தவறில்லை.
ஆனால், இத்தனை போட்டிகரமான ஒரு தேர்தல் களத்தில், யாரை வேட்பாளராக நியமிக்கலாம் என்ற சிந்தனையும் யாரையாவது போட்டால் முஸ்லிம்களின் வாக்குகள் வீணாகப் பிளவுபட்டு உபயோகமற்றதாகி விடுமோ என்ற சிந்தனையும் முஸ்லிம் அரசியல் தலைமைகளை ஆட்கொண்டுள்ளது எனலாம்.
இம்முறை தேர்தலில், முஸ்லிம் கட்சிகளுக்கு உள்ளேயே, பல மாவட்டங்களின் வேட்பாளர் நியமனத்தில் இழுபறிகள், நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன.
யாருக்கு வேட்பாளர் பட்டியலில் இடம் கொடுப்பது, யாரை வெட்டிக் கழிப்பது? என்ற குழப்பமும், அதனால் என்ன பாதிப்பு ஏற்படுமோ என்ற பயமும் தீர்ந்தபாடில்லை.
அதன் காரணமாகவேதான், முஸ்லிம் கூட்டமைப்பு, முஸ்லிம் கட்சிகள் ஒன்றிணைந்து போட்டியிடுதல் என்ற யோசனைகள் முன்வைக்கப்படுகின்றன. மாறாக, அது நூறு சதவீதம் சமூக நோக்குக் கொண்டதல்லவே.
உண்மையில், வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட பின்னர், எல்லா மாவட்டங்களிலும் ஒவ்வொரு கட்சி வேட்பாளர்களுக்கு இடையிலும் ஒரு பனிப்போர் ஆரம்பிக்கும்; இது வழக்கமானது.
ஆனால், அந்த வழக்கத்துக்குச் சற்று வித்தியாசமாக இம்முறை, வேட்பாளர் நியமனத்திலேயே பெரும் தர்மசங்கடங்கள் ஏற்பட்டுள்ளன.
குறிப்பிட்ட, சில பிரதேசங்களில், குறிப்பிட்ட முஸ்லிம் கட்சி, அணி சார்பாக ஒன்றுக்கு மேற்பட்ட அரசியல்வாதிகள் முன்வருகின்றமையும், சில ஊர்களில் வேட்பாளர்களை நியமிக்க வேண்டுமென அங்குள்ள கட்சி முக்கியஸ்தர்கள் மக்களை அனுப்பி அழுத்தம் கொடுக்கின்றமையும் கண்கூடாகக் காணமுடிகிறது. இரு முஸ்லிம் அணிகள், ஒரு மாவட்டத்தில் இணைந்து போட்டியிட்டால், சிக்கல் இன்னும் அதிகரிக்கும்.
எனவே, இந்தச் சிக்கலில் இருந்து எவ்வழியிலேனும் வெளியில் வந்தேயாக வேண்டிய நிர்ப்பந்தம், முஸ்லிம் தலைவர்களுக்கு ஏற்பட்டிருக்கின்றது.
தமது அணி சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளர்களின் தரம், போட்டித் திறன் பற்றிக் கூடிய கவனம் செலுத்த வேண்டும்.
கட்சித் தலைவர்கள், தமது சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு அப்பால், முஸ்லிம் சமூகத்தின் நலனுக்காகக் குரல் கொடுக்கக் கூடிய நபர்களையே வேட்பாளர்களாகப் பிரேரிக்க வேண்டும்.
சமூக நலன் அற்றவர்கள், பணத்துக்குப் பின்னால் அலைபவர்கள், பெருந்தேசியத்தின் ஊது குழலாக இருப்பவர்கள், மது, மாதுப் பிரியர்கள், போதை வியாபாரத்துக்குத் துணை புரிகின்றவர்கள், அரசியலை வைத்து வயிறு வளர்ப்பவர்கள், தொழில் வழங்குவதற்காகவும் வேறு மக்கள் சேவைக்காகவும் தமது தரகர்கள் ஊடாகப் பணம் வசூலிப்பவர்கள், அதிகாரம் இருந்த காலத்தில் மக்களை விட்டுத் தூரமாக இருந்தவர்கள், சேவை, உரிமை, அபிவிருத்தி என்று சொல்லிச் சொல்லியே மக்களை ஏமாற்றியவர்கள், வேறு உள்நோக்கத்தோடு எந்த அரசியல் அறிவுமின்றி இத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் போன்ற பேர்வழிகளுக்கு வேட்பாளர் பட்டியலில் இடம்கொடுக்கக் கூடாது.
இவ்வாறான முன்நிபந்தனையின் அடிப்படையில், வேட்பாளர்களைத் தேடினால், சில பெரிய தலைகளுக்கே இடம்கிடைக்காமல் போனாலும் போகலாம் என்பது வேறு கதை!
கொரோனா ஏற்படுத்தும் சமூகப் பிரச்சினைகள்
உலகுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறிக் கொண்டிருக்கின்ற ‘கொவிட்-19’ ரக கொரோனா வைரஸ் தொற்றை உலக சுகாதார ஸ்தாபனம் ‘பெண்டமிக்’ (உலகளவில் பரவும்) வகையைச் சார்ந்தது என அறிவித்திருக்கின்றது.
இந்தத் தொற்றுநோயின் கட்டுக்கடங்காத பரவலின் தொடர் விளைவாக, சுகாதார ரீதியாக மட்டுமன்றி பொருளாதார, கலாசார ரீதியாகவும் சமூக எதிர்விளைவுகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
உலகின் எல்லாப் பாகங்களிலும் வாழ்கின்ற பில்லியன் கணக்கான மக்கள், இன்று ஒருவித அச்சம் கலந்த மன அழுத்தத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
கடந்த இரு தசாப்தங்களுக்குள் பரவிய தொற்றுநோய்களில் இருந்தும் சற்று தீவிரமானதாக இது பார்க்கப்படுகின்றது எனலாம்.
சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ், உலகின் பல நாடுகளில் வியாபித்திருக்கின்றது. இதுவரை 4,500 இற்கு மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்திருக்கின்றனர். ஐரோப்பா, அரபு நாடுகள், ஆசிய நாடுகள் எனப் பல பிராந்தியங்களில் பல்லாயிரக்கணக்கானோர் இதற்காகச் சிகிச்சை பெற்று வருகின்ற அதேநேரத்தில், இலட்சக்கணக்கான உலக மக்கள், சந்தேகத்தின் பெயரில் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட சில நாடுகள், தமது விமான நிலையங்கள், பாடசாலைகள், கடைத் தொகுதிகளை மறு அறிவித்தல் வரை மூடியிருக்கின்றன. பொது இடங்களில் கூடுவதும் கதைப்பதும் அச்சத்துக்கு உரிய காரியமாக மாறியிருக்கின்றது.
முக மறைப்பான் (மாஸ்க்) போன்ற மருத்துவப் பொருள்களுக்கு மட்டுமன்றி, வெளிநாடுகளில் அன்றாட, அத்தியாவசியப் பாவனைப் பொருள்களுக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொரோனா பற்றி, பல்வேறு அபிப்பிராயங்கள் உள்ளன. அதாவது, இது ஒரு,
0 தொற்றுநோய்
0 மனிதனால் உருவாக்கப்பட்ட வைரஸ்
0 உயிரியல் யுத்தத்துக்கான கருவி
0 ஒரு புதிய மருத்துவ வியாபாரம்
0 மீள் பெயரிடப்பட்ட பழைய வைரஸ்....
என்ற பல்வேறுபட்ட கருத்துகள் இருக்கின்றன.
ஆனால், இவற்றை எல்லாம் ஒருபுறம் வைத்துவிட்டு, இதைக் கட்டுப்படுத்துவதற்கு உலகமே இன்று முழுமூச்சாய் இயங்கிக் கொண்டிருக்கின்றது எனலாம்.
இலங்கையில், கொரோனா தொற்றுக்குள்ளான சுற்றுலா வழிகாட்டி ஒருவர், அடையாளம் காணப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றார். பிந்திக் கிடைத்த தகவல்களின் படி நேற்றைய தினமும் இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
எனவே, இலங்கையிலும் கொரோனா தொற்றுக்கான ஆபத்துகள் அதிகரித்து வருவதாகவே கருத வேண்டியுள்ளது.
குறிப்பிட்ட சில நாடுகளுக்கான உள்வரும், வெளிச்செல்லும் விமான சேவைகளை, இலங்கை கட்டுப்படுத்தியுள்ள போதிலும், இன்னும் வைரஸ் பாதிக்கப்பட்ட வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் கூட, நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதை அரசாங்கம் கட்டுப்படுத்த வேண்டும் என்ற கருத்தும் நிலவுகின்றது.
அதுவும், நாடு திரும்பும் இலங்கையரை நாட்டுக்குள் அனுமதித்து, அவர்களை ஒரு தடுப்புமுகாமில் வைத்து, தனிமைப்படுத்தி, அவதானிப்பது அல்லது, சிகிச்சை அளிப்பது வேறு விடயம். ஆனால், வெளிநாட்டவர்களையும் அழைத்து வந்து சிகிச்சை அளிப்பது விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
அத்துடன், பொலன்னறுவை, மட்டக்களப்பு மாவட்டங்களில் கொரோனா தடுப்பு மத்திய நிலையங்களை நிறுவியமை, பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
வெளிநாடுகளில் இருந்து வரும், நோய்த்தொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படும் நபர்களை, கந்தக்காடு தடுப்பு முகாம், வாழைச்சேனையில் இருந்து சில கிலோமீற்றர் தொலைவில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள தனியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் வைத்து, தனிமைப்படுத்தி கண்காணிக்கும் அல்லது, சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
ஏற்கெனவே, தென்னிலங்கையில் கொரோனா தடுப்பு மய்யங்களை அமைக்க, அங்குள்ள மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததையடுத்து அதை அரசாங்கம் கைவிட்டது.
இப்போது, கிழக்கு மாகாணத்துக்குக் கொண்டு வந்திருப்பதும், அதுவும் பெரும் செலவில் கட்டப்பட்ட புத்தம்புதிய பல்கலைக்கழகக் கட்டடத்தை, கொரோனோ நோய் கண்காணிப்பு மய்யமாகப் பயன்படுத்துவதையும் பிரதேச மக்கள் எதிர்த்து வருகின்றனர்.
மட்டக்களப்பு, அதையண்டிய தமிழ், முஸ்லிம் பிரதேசங்களில் நோய் பரவுவதற்கான வாய்ப்புகள் இதன்மூலம் அதிகரித்துள்ளதாக மக்களும் அரசியல்வாதிகளும் சுட்டிக்காட்டுகின்றனர். இதில் நியாயங்கள் உள்ளன.
ஆனால், நோய் தீவிரமடைந்து, எம் ஒவ்வொருவரையும் நெருங்கி வரும் போல்த் தெரிவதால், இவற்றையெல்லாம் கடந்து, ‘ஒரு தேசம்’ என்ற விதத்தில் பணியாற்ற வேண்டிய பொறுப்பு மக்களுக்கும், காத்திரமாகச் செயற்பட வேண்டிய கடமை, அரசாங்கத்துக்கும் ஏற்பட்டிருக்கின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
57 minute ago
2 hours ago
2 hours ago