Super User / 2011 ஜூலை 04 , பி.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
அரசியல் தீர்வு மற்றும் அதிகார பகிர்வு வழங்குவதற்கான சட்டமூலத்தை வரைவதற்கு ஒரு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை நியமிப்பதுபற்றி அரசாங்கம் ஆலோசித்து வருவது பல விதமான ஊகங்களுக்கு இடமளித்துள்ளது.
இதுவரை காலமும் அரசாங்கம் பல சந்தர்ப்பங்களில் சட்டமூலத்தை வரைவதிலேயே காலத்தை போக்கியுள்ளது. நாடாளுமன்றத்தின் தெரிவுக் குழுக்கள் இவ்வாறான சட்டமூலங்களை பல கோணத்திலும் ஆராய்ந்துள்ளன. முழு நாடாளுமன்றமும், சில சமயம் நீதிமன்றங்களும் இவைப் பற்றி கருத்துக் கூறியுள்ளன.
தயாரிக்கப்பட்டதாக கூறப்படும் ஒரு திட்டத்தின்படி, அது தேசிய பிரச்சினைக்கு சகலரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு தீர்வை எட்டுவதை நோக்கமாக கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆளும் தரப்பிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், அதனால் இருபக்கமாகவும் செயற்பட முடியும். யாப்பை திருத்துவது உட்பட தான் விரும்பியதை நாடாளுமன்றத்துக்கூடாக நிறைவேற்றமுடியும். இரண்டாவதாக 'ஜனநாயகத்தை'' செயற்பட விடலாம். அதாவது கூட்டமைப்பில் உள்ள சிறுகட்சிகளையும் அழுத்தக் குழுக்களையும் தமது விருப்பம்போல நடக்க அனுமதிக்கலாம்.
எப்படியிருந்த போதிலும், அரசாங்கம் முழு நாட்டு மக்களையும், சிங்கள பெரும்பான்மை சமுதாயத்தை தன் வழிக்கு இழுக்க வேண்டும். அதேசமயம் இலங்கைத் தமிழ் சிறுபான்மையினரின் நியாயமான அபிலாஷைகளை திருப்தி செய்யக்கூடிய ஒரு நீதியான பொதியை உறுதி செய்யும் பொறுப்பிலிருந்து அரசாஙகம் விலக முடியாது.
எல்.ரீ.ரீ.க்கு எதிரான யுத்தத்தை ஜனாதிபதி ராஜபக்ஷ வென்றுள்ள சாதகமான நிலையில் சமாதானத்தையும் அதேபோல கொண்டு வரக்கூடிய ஆற்றலும் அவருக்கு உண்டு என பொது அபிப்பிராயம் காணப்படுகிறது. முழு நாட்டினதும் விருப்பப்படியே அவர் யுத்தத்தை வென்றார். நிரந்தர சமாதானத்தை அடைவதற்கு அவர் நாட்டின் பல வகைப்பட்ட சமுதயாங்களையும் தன்னோடு அணைத்து செல்ல வேண்டும். முதலில் அவருக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஏற்பும், தமிழ் புலம்பெயர்ந்தோரின் உறுதிப்படுத்தலும் அவசியம். அப்போதுதான் ஒரு அரசியல் தீர்வு வெற்றிபெறும்.
இந்த வகையில் பரஸ்பர நம்பிக்கையீனம் இருப்பது தெளிவாக தெரிகின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதை தவிரக்கின்றார் எனவும் அவர் காலத்தை இழுத்தடிக்கின்றார் எனவும் உலகம் நம்புகின்றது. இதையும்விட கூடுதலாக தமிழ் மக்களும் தமிழ் அரசாங்கடும் நம்புகின்றன. ஜனாதிபதி ராஜபக்ஷ இந்த தருணத்தில், தமிழர்களுக்கு அதிகார பகிர்வையும் சமாதானத்துக்கான செய்தியையும் வழங்க முடியாது போயின் வேறு எந்த ஜனாதிபதியாலும் இனிவரும் பல தசாப்தங்களுக்கு இதை செய்ய முடியாது.
இது தமிழ் அரசியல் தலைமைக்கும் குறிப்பாக தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் உண்மையாகும். யுத்தத்திற்கு முன்னரான எதிர்பார்ப்புகள், இலக்குகளிலும் பார்க்க குறைந்த – அவ்வப்போது கிடைக்கும் சிறுசிறு அளவிலானதும் சமச்சீர் அற்றதுமான இணக்கப்பாடுகளை ஏற்றுக்கொள்வதும் விரும்பக் கூடியதே என்பதை தமிழ் சமுதாயத்தை ஏற்றுக்கொள்ள செய்ய தற்போதைய தமிழ் தலைமையால் இதை செய்ய முடியாது போகுமாயின் வேறு எந்த தமிழ் தலைமையாலும் இதை செய்ய முடியாது போகும்.
இப்படித்தான் இவை இருக்குமென்றும், அவை ஏன் அப்படி நடக்க வேண்டுமென்றும் கருதுகோள் ரீதியாக கூறப்படுபவற்றில் தவிர்க்கக்கூடியவை எவை என அரசாங்கம் தெரிந்திருக்க வேண்டும்.
இருபகுதியினரும் கணிசமான பரஸ்பர நம்பிக்கையீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். எல்.ரீ.ரீ.ஈ.இனால் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டிருந்த 3 லட்சம் தமிழ் மக்களை இராணுவம் விடுவித்ததையிட்டு ஆறுதல் அடைந்த தமிழ் சமுதாயத்தின் ஒரு பகுதி கூட இப்போது அரசாங்கத்தின் மீது யுத்த குற்றங்கள், மனிதப்படுகொலை என குற்றஞ் சாட்டிக் கொண்டுள்ளது.
அந்தந்தக் காலத்து அரசியல் தலைவர்கள், அரசாங்கங்களை தவிரத்துப் பார்த்தால் புலிகள் ஆதிக்கம் பெற்றிருந்த காலத்தில் இவர்களுடன் கூட்டாக இயங்கியதாக சிலரால் பார்க்கப்படும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை அரசால் பிரச்சினையாகவே நோக்கப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பு யுத்தத்தின் பின்னரான நிலைமைப்பற்றி நேர்மையாக செய்யும் விமர்சனங்களை கூட சிங்கள சமுதாயத்தின் ஒரு பகுதியினர் சந்தேகத்துடனனேயே நோக்குகின்றனர். தனிநாட்டுக்கான கோரிக்கையை தமது வருங்கால சந்ததியினர் மீட்டெடுப்பதற்கான கால அவகாசத்தை பெறுவதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நோக்கமென அவர்கள் கருதுகின்றனர்.
இந்த பின்னணியில்தான் அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதிகாரப் பகிர்வுக்கான உத்தியோக பூர்வ பேச்சு வார்த்தையை இவ்வருடம் ஜனவரி மாதத்தில் ஆரம்பித்தனர். ஆறுமாதம் கடந்த நிலையிலும், நாடாளுமன்ற தெரிவுக்குழு அதிகாரப்பகிர்வுக்கான முன்மொழிவுகளை தயாரிப்பது பற்றி இப்போது பேசப்படுகின்றது. அரசாங்கமும் தமிழ் தேசிய கூட்டமைப்பும் அடிப்படை விடயங்களில் ஒருமைப்பாட்டுக்கு வந்து விட்டனரா, அதிகார பகிர்வு தொடர்பில் சட்டங்களை வரையும் கட்டம் வந்து விட்டதா என்பன பற்றி எதுவும் தெரியவில்லை.
அரசாங்கம் இழுத்தடிப்புச் செய்கின்றது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கூறியுள்ளது. பொலிஸ் மற்றும் நிலம் தொடர்பான அதிகாரங்கள் போன்று அடிப்படை அதிகாரப் பகிர்வு விடயங்களில் அரசாங்கம் முரண்பாடான சமிக்ஞைகளை தொடர்ச்சியாக காட்டி வருகின்றது. முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள் ஏற்கப்பட்டிருந்தால் அவை அனைத்தையம் அடக்கியவையாக இருந்தனவா அல்லது குறித்த ஒரு சிறு பிரச்சினைக்கு மட்டும் உரியதாக இருந்ததா என்பதுவும் தெளிவாக இல்லை.
முக்கிய பிரச்சினைகளில் முரண்பாடான நிலைப்பாடுகள் பல தரப்பினரிடமும் காணப்படுவதற்கு அப்பால், தற்போதைய யாப்பும் பிரச்சினையை தோற்றுவிப்பதாகவே உள்ளது. அரசியலமைப்பில் கூறப்பட்ட அதிகாரப் பகிர்வை அமுலாக்குவதிலும் இழுத்தடிப்பு காணப்படுகிறது. மாகாண சபைகளுக்கும் மத்திய அரசுக்கும் பொதுவான அதிகாரங்களை கொண்ட பொதுப் பட்டியலும் குழப்பத்துக்கு காரணமாக உள்ளது. இதைப் பார்க்கும்போது தற்போதைய அரசியல் ஸ்தம்பித நிலைக்கு அரசியலமைப்பு காரணமாக அல்லது அதை நடைமுறைப்படுத்தும் முறை, காரணமா என்பதை தெளிவாக கூறுமுடியாது உள்ளது.
கடந்த சில வாரங்களாக, ஆளும் கட்சியான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும், எதிர்க்கட்சியான ஐ.தே.கவும் அதிகாரப் பகிர்வு தொடர்பில் எதிர்தரப்பு தமது கருத்தை சரியாக கூறவில்லை என்றும் இதனால் தாம் எதுவும் செய்ய முடியாது உள்ளதாகவும் ஒன்றையொன்று குற்றஞ் சாட்டி வருகின்றன.
அரசாங்கத்தின் பங்காளியான வலது சாரி ஜாதிக ஹெல உறுமய அதிகாரப் பகிர்வு தொடர்பிலும், த.தே.கூ தொடர்பிலும் இறுக்கமான கருத்துக்களை கொண்டுள்ளது. இடது சாரியாக இருந்தும் சிங்கள தேசியவாத கட்சியாக வித்தியாசமாக இயங்கும் கட்சியாக ஜே.வி.பி. உள்ளது.
இப்போது அதன் நாடாளுமன்ற பலம் மிகவும் குறைந்துள்ள நிலையில் நாடாளுமன்ற தெரிவுக் குழுவின் போக்கின் மீது செல்வாக்கு செலுத்த முடியாது. ஆனால், இக்கட்சி வேறு பிரச்சினைகளில் அரசாங்கத்தை தாக்குவதில் நாடளாவிய ரீதியில் தனது சக்தியை வெளிப்படுத்தி வருகின்றது. ஜே.வி.பி. இரண்டு கிளர்ச்சிகளுக்கு காரணமாக இருந்தது என்பது எந்த ஒரு ஆட்சியையும் யோசிக்க வைக்கும் விடயமாக உள்ளது. யுத்தம் முடிந்தபின் ஜே.வி.பி. தமிழர் பிரச்சிணையில் அனுதாபத்துடன் நடந்து கொள்கின்றது. இது எவ்வளவு தூரம் நடைமுறையில் பலன் தரவல்லதாக இருக்குமென்பது தெளிவில்லாமலேயே உள்ளது.
தமிழ் பேசும் மக்கள் பக்கத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நிலைப்பாடும் கவனிக்கப்பட வேண்டும். யுத்தம் முடிந்த காலத்திலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்புடன் தன்னால் ஒரு ஏற்பாட்டை செய்து கொள்ள முடியும் என்பது போல அது நடந்து வந்தது. ஆனால், முன்னர் ஒஸ்லோ பேச்சுவார்த்தையின் போது கோரியது போலவே இப்போது தன்னையும் பேச்சுவார்த்தையில் மூன்றாம் தரப்பாக சேர்க்க வேண்டுமென கோரியுள்ளது. இந்த கட்சி யுத்தக் குற்றம் மற்றும் பொருளாதார தடை ஆகியவை தொர்பில் தமிழ் நாடு சட்டசபையை கண்டித்ததன் மூலம் தன் தேசப்பற்றை முன்னெப்போதும் இல்லாத வகையில் வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கை தமிழ் மக்களுக்கும் மலைநாட்டு தமிழருக்குமிடையில் காணப்படும் வித்தியாசங்களைப் பற்றி பேசாதிருப்பது நல்லது. இலங்கைத் தமிழர்களுக்குள்ளும், விரிந்த அளவில் தமிழ் பேசும் மக்களுக்குள்ளும் ஒற்றுமையை உருவாக்கம் என எதிர்பார்க்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு இந்த பொறுப்பை நிறைவேற்றவில்ல என்றே கூறலாம். இவர்களுக்கு இடையே காணப்படும் உட்பூசல்களும் வெளியே வரத் தொடங்கியுள்ளன.
இந்த சிக்கலிலிருந்து விடுபடுவதற்கான பொறுப்பு அரசாங்கம் மற்றும் த.தே.கூ. அல்லது தமிழ் கட்சிகள் என்பதற்கு அப்பாலும் விரிந்து மேலும் பங்குதாரர்களை உள்ளடக்க வேண்டுமாயின் ஒருவரை மற்றவர் நம்பச் செய்யவும் ஏனையோரை நம்பச் செய்யவும் வைக்கும் ஆரம்பப் பொறுப்பு அரசாங்கத்திடம் மட்டுமன்றி த.தே.கூட்டமைப்பிடமும் உள்ளது என்பதை விளக்கிக்கொள்ள வேண்டும். இவர்களில் எவரும் மற்றவர் மீது பழிபோடும் விளையாட்டை தொடர்ந்து கொண்டு தமது நிலைமையில் முன்னேற்றம் வரும் என எதிர்பார்க்க முடியாது.
31 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026