Super User / 2011 ஜூலை 14 , பி.ப. 08:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-கே.சஞ்சயன்
ஐ.நா. பொதுச்செயலர் பான் கீ மூனை கடந்த 5 ஆம் திகதி சந்தித்துப் பேசி விட்டுத் திரும்பியுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, சில அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
சர்வதேச அழுத்தங்களில் இருந்து இலங்கை அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்கு உதவத் தயார் என்பது அதில் ஒன்று.
இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வுக்காக அமைக்கப்படும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறத் தயார் என்பது இன்னொன்று.
இந்த இரண்டு அறிவிப்புகளும் முக்கியமானவை. ஏனென்றால் இதுவரை இந்த விடயங்களில் அரசாங்கத்தைக் குறை கூறி வந்த ஐதேக, இப்போது தலைகீழாக மாறி நிற்கிறது..jpg)
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் இடம்பெறவதில்லை என்று ஐதேக ஏற்கனவே முடிவு செய்திருந்தது. அதுபற்றி செய்தியாளர்களிடம் மங்கள சமரவீர முறைப்படியாக அறிவித்திருந்தார்.
அதுபோலவே போர்க்குற்றச்சாட்களுக்குப் பதிலளிக்கும் விடயத்திலும் அதை எதிர்கொள்வதிலும் அரசாங்கம் சரியாகச் செயற்படவில்லை என்று ஐதேக கடுமையாகச் சாடி வந்தது.
இதன் காரணமாக சர்வதேச அரங்கில் இலங்கை ஓரம் கட்டப்படக் கூடிய நிலை உருவாகும் என்றும் ஐதேக தலைவர்கள் எச்சரித்து வந்தனர்.
ஆனால், ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்கப் பயணம் புதிய திருப்பம் ஒன்றை உருவாகியுள்ளது.
அமெரிக்காவில் பல்வேறு அரசியல் பிரமுகர்களையும் சந்தித்த ரணில் விக்கிரமசிங்க கடைசியாக கடந்த 5ஆம் திகதி ஐ.நா பொதுச்செயலரை சந்தித்து விட்டுக் கொழும்பு திரும்பியிருந்தார். அதன் பின்னர் தான் அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பது பற்றிய கருத்துகளை வெளியிட்டுள்ளார்.
அவர் இப்படிக் கூறினாலும் அவரது கட்சியின் ஏனைய தலைவர்கள் இந்த விடயங்களில் எவ்வளவுக்கு உடன்படுவார்கள் என்பதில் சந்தேகங்கள் இருக்கவே செய்கின்றன.
ஆனாலும் ரணில் விக்கிரமசிங்க அவர்களை சமாளித்துக் கொள்வதில் வல்லவர் என்பதில் சந்தேகம் இல்லை.
ரணில் விக்கிரமசிங்கவை ஒரு அதிஷ்டம் நிறைந்த மனிதர் என்று கூறினால் உண்மையிலேயே அது மிகையாக கருத்தாக இருக்க முடியாது.
தொடர்ச்சியாகத் தேர்தல்கள் பலவற்றில் ஐதேக தோல்வி கண்ட போதும், அவரது தலைமைக்கு எதிராக பல புயல்கள் வீசிய போதும் அவர் மட்டும் அசையவில்லை.
ஆர்.பிரேமதாசவின் மரணத்துக்குப் பின்னர், டி.பி.விஜேதுங்கவிடம் இருந்து கிடைத்த தலைமைத்துவப் பதவியை அவர் கடந்த 17 ஆண்டுகளாக காப்பாற்றி வருவது உண்மையிலேயே சாதனை தான்.
இந்தக் காலப்பகுதியில் ஐதேக- 2001 கடைசியில் இருந்து 2004 வரை மட்டுமே ஆட்சியில் இருந்துள்ளது.
அப்போதும் உண்மையான அதிகாரம் அவரது கையில் இருக்கவில்லை. சந்திரிகா குமாரதுங்கவின் நிறைவேற்று அதிகாரத்தின் கீழ் கிட்டத்தட்ட பல்லுப் பிடுங்கிய பாம்பாகத் தான் அவர் பிரதமர் பதவியை வகித்தார்.
அதிகாரத்தில் இல்லாத போது- தேர்தல்களில் அடுத்தடுத்த தோல்விகளையே சந்திக்கின்ற போது தலைமைக்கு எதிராக கட்சிகளில் குழப்பங்களும், கிளர்ச்சிகளும் உருவாகுவது வழமையே.
அப்படியான சிக்கல்களை இன்று வரை வெற்றிகரமாகச் சமாளித்து கட்சியின் தலைமைப் பதவியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.
இப்போது அவருக்கு எந்தத் தேர்தலும் வரப்போதில்லை. எனவே அடுத்து வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலுக்கு இடையில் தனது பெயரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதே அவரது இலக்காக உள்ளது.
அரசாங்கம் அவரை கிட்டதட்ட ஒரு துரோகி என்ற வகையில் தான் பிரசாரங்களை செய்து வந்துள்ளது. அந்தப் பிரசாரங்கள் பொய்யானவை என்று நிரூபிப்பதும் இப்போது அவர் முன் உள்ள முக்கியமானதொரு சவால்.
அதேவேளை, அமெரிக்கப் பயணத்தின் போது ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தின் பக்கம் உள்ள சில நியாயங்களை எடுத்துக் கூறியுள்ளதாகவும் தெரிகிறது. குறிப்பாக ஐ.நா பொதுச்செயலருடனான சந்திப்பின் போது இலங்கை அரசுக்காக ரணில் காலஅவகாசம் கோரியுள்ளார்.
இதன் பின்னர் தான் ஐ.நா நிபுணர்குழுவின் அறிக்கையின் பரிந்துரைகளை உதாசீனம் செய்தால் சர்வதேச தலையீடுகளை தடுக்க முடியாது போகும் என்று கூறியிருந்தார். இந்தக் கருத்தை பான் கீ மூனே ரணில் விக்கிரமசிங்கவுக்குக் கூறியிருந்தார்.
இலங்கை அரசுக்கும் ஐ.நா பொதுசெயலருக்கும் இடையிலான ஒரு பாலமாகவே ரணில் செயற்பட்டுள்ளார். நிபுணர் குழு அறிக்கை விவகாரத்தால் ஐ.நா பொதுச்செயலருக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் ஒரு இடைவெளி இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த இடைவெளியை நிரப்பும் முயற்சியில் தான் ரணில் விக்கிரமசிங்க ஈடுபட முனைந்துள்ளார். இது எந்தளவுக்கு பயன் கொடுக்கும் என்பதை இப்போதே கணிப்பிட முடியாது.
ஆனால், இந்தச் சந்திப்பின் பின்னர் தான் சர்வதேச நெருக்கடிகளில் இருந்து அரசாங்கத்தை விடுவிப்பதற்கு உதவத் தயார் என்றும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில இடம்பெறத் தயார் என்றும் அவர் கூறியுள்ளார்.
இது அரசாங்கத்தை காப்பாற்றுவதற்கான முயற்சியாகவும் இருக்கலாம். அல்லது எதிர்க்கட்சியின் மீது பழி விழுந்து விடாமல் காப்பாற்றிக் கொள்ளும் இராஜதந்திரமாகவும் இருக்கலாம்.
தெரிவுக்குழுவை அமைத்து அரசியல் தீர்வு காண முனைகிறோம், ஆனால் எதிர்க்கட்சிகள் தான் ஒத்துழைக்கவில்லை என்று அரசாங்கம் சுலபமாகக் கூறித் தப்பி விடும். அப்படித் தப்பி கொள்ள இடமளிக்காத வகையில் கூட, ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு கூறியிருக்கலாம். அரசாங்கம் கூட தெரிவுக்குழுவை இதேநோக்கில் தான் அமைக்க முனைகிறது. ரணில் விக்கரமசிங்கவுக்கு இப்போது தேவைப்படுவது நல்லபிள்ளை என்ற பெயர் தான்.
ஐ.நா பொதுச்செயலருடனான சந்திப்பின் போது, ரணிலுக்கு சில செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. போர்க்குற்ற விவகாரங்களை ஐ.நாவோ மேற்கு நாடுகளோ கைவிட்டு விடப் போவதில்லை என்பது அதில் முக்கியமானது. இதை தாம் மறந்து விடுவோம் என்று கருதக் கூடாது என்று அங்கு கூறப்பட்டுள்ளது.
அதுமட்டுமன்றி, பொருளாதாரத் தடைவிதிக்கப்படுவது பற்றிய கருத்துகளும் பரிமாறப்பட்டுள்ளன. மேற்குநாடுகளின் பொருளாதாரத் தடைகளை தாங்கிக் கொள்ள இலங்கையால் முடியாது என்றும் அதன் விளைவை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மட்டும் அனுபவிக்கப் போவதில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.
நெருப்பில்லாமல் புகை வராது- இந்த விவகாரம் பற்றி அமெரிக்காவில் பேசப்பட்டதால் தான், அதை கொழும்பில் வெளிப்படுத்தியுள்ளார் ரணில். அவருக்கு உள்ளூர பொருளாதாரத் தடை பற்றிய அச்சம் உருவாகியிருக்கிறது என்பதை உணர முடிகிறது.
ஐ.நா மூலம் தடைகள் வராது போனாலும் மேற்குலக நாடுகள் முடிவு செய்தால் இலங்கையின் பொருளாதாரம் படுத்துவிடும். இந்த ஆபத்தை ரணில் விக்கிரமசிங்க உணர்ந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் தான் அவர் அரசாங்கத்துக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாகக் கூறியுள்ளார்.
அரசுக்கு ஆதரவு வழங்குதல், தெரிவுக்குழுவில் இடம்பெறுதல் எல்லாமே ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் நகர்வுகளாகவே தெரிகின்றன. இதனூடாகத் தனது அரசியல் இமேஜை உயர்த்திக் கொள்ளலாம் என்று அவர் கருதலாம்.
ஆனால் அதற்கு ஒரு போதும் அரசாங்கம் இடமளிக்கப் போவதில்லை. ஏனென்றால், ரணிலின் இமேஜ் உயரும் போது அது அரசாங்கத்தின் இமேஜை உடைத்து விடக் கூடும். என்னதான் அரசாங்கம் தெரிவுக்குழுவுக்கு ரணில் ஆதரவு அளிக்க முனைந்தாலும் அந்த விவகாரம் ஏற்கனவே கிடப்பில் போடப்பட்டு விட்டது. இந்தவிவகாரம் நாடாளுமன்றத்துக்கு அறிவிக்கப்பட்ட திகதியில் வரவில்லை.
அத்துடன் ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு உதவத் தயார் என்று அறிவித்த பின்னர் கூட அதை நாடாளுமன்றத்துக்கு கொண்டு வரும் முயற்சிகள் எடுக்கப்படவில்லை.
ரணிலும் சரி அரசாங்கமும் சரி பந்தை தமது கையில் இருந்து எறிந்து விடுவதில் தான் குறியாக உள்ளனரே தவிர, அதைக் கையில் எடுத்து பொறுப்புடன் விளையாடும் எண்ணம் இருப்பதாகவே தெரியவில்லை.
31 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026
sivagumar Friday, 15 July 2011 04:06 PM
இவரால் தமிழருக்கு என்ன இலாபம். இனியாவது மனிதராக வாழ்வார்களா ?இருதலைக் கொள்ளியட்டம் பான் கீ மூன் ரணிலையும் பயன்படுத்துகிராரோ?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026