2025 ஜூலை 09, புதன்கிழமை

‘அரசியல் மாற்றம் ஒரு சதித்திட்டமாகும்’

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது தனிமனிதத் தேவைக்காக நாட்டின் ஜனநாயகத்தையே கேள்விக்குறியாக்கியுள்ளார் எனத் தெரிவித்துள்ள ஜே.வி.பியின் தலைவரும் முன்னாள் எம்.பியுமான அநுரகுமார திஸாநாயக்க, நாட்டில் ஏற்படுத்தப்பட்ட அரசியல் மாற்றம் ஒரு சதித்திட்டமாகும் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார். 

பத்தரமுல்லையில் உள்ள ஜே.வி.பியின் தலைமையகத்தில் நேற்று (11) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரு நாட்டில் ஆட்சி மாற்றம் இடம்பெற வேண்டுமாக இருந்தால் தேர்தல் அல்லது நாடாளுமன்றத்தின் மூலமாகவே இடம்பெற வேண்டும் என்று தெரிவித்துள்ள அவர், தற்போது எமது நாட்டில் இடம்பெற்றுள்ள அரசியல் மாற்றங்கள் ஒரு சத்திட்டமாகும் என்றார்.  

இந்தச் சதித்திட்டத்தின் தொடர்ச்சியாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற அமர்வை ஒத்திவைத்தார். நாடாளுமன்றத்தில் தமது பெரும்பான்மையை அதிகரித்துக்கொள்வதற்காக, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விலைபேசப்பட்டனர் என்று தெரிவித்த அநுரகுமார திஸநாயக்க, கட்சித்தாவியவர்களுக்கு அமைச்சுகள், இராஜாங்க அமைச்சு மற்றும் பிரதியமைச்சு பதவிகளும் வழங்கப்பட்டன என்றார்.  

தம்மிடம் பெரும்பான்மை இல்லாத போதும், பெரும்பான்மை இருப்பதாகவே மைத்திரி மற்றும் மஹிந்த தரப்பினர் காண்பிக்க முயற்சித்தனர். எனினும், இறுதியில் அதனை அவர்களால் நிரூபிக்க முடியாமல் போனது என்றும் தெரிவித்த அவர், சதித்திட்டத்தின் ஊடாகவும் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு முயற்சித்தனர்.  

இவ்வாறான அரசியல் நெருக்கடி நிலைமையின் போது, நாடாளுமன்றம் மீண்டும் கூடப்படும் அன்றையதினம், பெரும்பான்மை யாருக்கு இருக்கின்றது என்பது காண்பிக்கப்பட
வேண்டுமென, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்திருந்தார். இந்நிலையில், தங்களுடைய சதித்திட்டம் அன்றையதினம் தோல்வியடையும் என்று புரிந்துகொண்ட மைத்திரி-மஹிந்த அணி, கடந்த வெள்ளிக்கிழமை, நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டது என்றார். 

ஜனநாயகத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு, சதித்திட்டத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட இந்த அரசாங்கத்தை ​தோற்கடிப்பதற்கும் மக்கள் ஆட்சியை நாட்டில் நிலைநாட்டுவதற்கும் ஜே.வி.பி எப்போதுமே தயாராக இருக்கின்றது என்று தெரிவித்த அவர், அதற்கு தயாராகுமாறு, நாட்டுமக்களிடமும் கோரிக்கைவிடுத்தார்.     


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .