2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

அறுகம்பையில் என்ன நடக்கின்றது?

R.Tharaniya   / 2025 ஜூலை 08 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹமட் பாதுஷா

இந்த உலகத்தின் அடிநாதமே நிலம் என்றுதான் சொல்ல வேண்டும். வரலாறு நெடுகிலும் நிலத்திற்காக போர்கள், போராட்டங்கள், படையெடுப்புக்கள் நடந்திருக்கின்றன.

இன்றும் நடக்;கின்றன. காலனித்துவ காலம் முடிவடைந்த பின்னரும் கூட, 
நில ஆக்கிரமிப்பு என்பது ஏதோ ஒருவகையில் இடம்பெற்றுக் 
கொண்டுதான் இருக்கின்றது. 

இலங்கையில் சிறுபான்மைச் சமூகங்களின் நிலங்களை பல்வேறு வழிகளிலும் சூறையாடுவதற்கான திட்டங்கள் காலகாலமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

வடக்கில் 5,940 ஏக்கர் காணிகளை கையகப்படுத்தும் நோக்கில் அதன் உரிமைத்துவத்தை உறுதிப்படுத்துமாறு அரசாங்கம் வெளியிட்ட வர்த்தமானி இப்போது மீளப் பெறப்பட்டுள்ளமை இங்கு நினைவு கொள்ளத்தக்கது. 

உள்நாட்டுச் சக்திகளால் அதாவது, அரச இயந்திரத்தினால், பிற சமூகங்களால், கம்பனிகளால், பண முதலைகளினால் காணிகள் கபளீகரம் செய்யப்படுவதற்குப் புறம்பாக வெளிநாட்டுச் சக்திகளும் வெவ்வேறு மறைமுக திட்டங்களின் ஊடாக இலங்கையில் காலூன்ற முனைகின்றன. 

இவற்றுள் மூன்று வகையான முயற்சிகள் உள்ளன எனலாம். ஒன்று, இலங்கையில் வளங்களைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்வது. இரண்டாவது, பாதுகாப்பு மற்றும் அரசியல் நலன்களுக்காகக் காலூன்றுவது. மூன்றாவது, 
நில ஆக்கிரமிப்பு நோக்கில் வசிப்பது என்பவையாகும். 

இந்த மூன்றாவது வரிசையில்தான் இலங்கையில் இஸ்‌ரேல் அல்லது சினோனிஸ்டுகளின் ஆதிக்கம் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகக் கருதப்படுகின்றது.

கொழும்பு, புறநகர்ப் பகுதிகள் மற்றும் பொத்துவில் அறுகம்பேயிலும் இந்த நிலைமை தீவிரமடைந்துள்ளதாகத் தெரிகின்றது. 

தென்னிலங்கையில் பல யூத கட்டிடங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அதற்கு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பாராளுமன்றத்திலேயே பல தடைவை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால், அரசாங்கம் தெளிவான விளக்கத்தை கொடுக்கவில்லை. ‘தேடிப் பார்க்கின்றோம்’, ‘பின்னர் சபைக்கு அறிவிப்போம்’ என்றுதான் கூறினார்கள். 
இலங்கை தற்போது சுற்றுலாத்துறையில் பெரிதும் தங்கியுள்ளது.

இஸ்‌ரேலியர்கள் அதிகளவு வருகின்றனர். அவர்கள் அதிகம் விரும்பும் இடமாக அறுகம் குடாவும் உள்ளது. 

இங்கு பல உணவகங்களை இஸ்‌ரேலியர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் நடத்தி வருவதாகக் கூறப்படுகின்றது. அதுமட்டுமன்றி, 
‘சபாட் இல்லம்’ என்ற பெயரில் யூத மத்திய நிலையம் ஒன்று உள்ளதாகவும் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தது. 

எனவே, இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தால் சுற்றுலாத் துறைக்குப் பாதிப்பு வரும் என்ற தோரணையில்தான் அரசாங்கம் கருத்து வெளியிடுகின்றது. ஆனால், இதனால் நீண்டகாலத்தில் ஏற்படப் போகும் பாதிப்பு பற்றி முன்னுணர்ந்ததாக தெரியவில்லை. 

நில ஆக்கிரமிப்பு விடயத்தில் யூதர்கள் கைதேர்ந்தவர்கள். நாடற்றவர்களாக இருந்த தமக்குக் குடியேற இடங்கொடுத்த பலஸ்தீன மக்களைக் கொன்றுவிட்டு அந்த நிலத்தை முழுமையாகக் கையகப்படுத்த இஸ்ரேலும் அதன் கூட்டாளியான அமெரிக்காவும் ஆடுகின்ற நாடகங்களும் நடத்துகின்ற அக்கிரமங்களும் உலகுக்கே தெரியும். 

இந்தப் பின்னணியில், இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து சுற்றுலா விசாவில் வருபவர்கள் வேறு காரியங்களில் ஈடுபடுவது சட்டப்படி குற்றமாகக் கருதப்படுகின்ற நமது நாட்டில் யூதர்களுக்கு மட்டும் இந்தளவுக்கு இடம் வழங்கப்படுவதன் மர்மம் என்ன?

அறுகம்பையில் இஸ்‌ரேலிய பின்னணியுடனான உணவகங்கள் உள்ளதாகக் கூறப்படுகின்றது. அதுமட்டுமன்றி, அங்குள்ள சபாட் யூத தலமும் உள்ளது. இதனை மையமாக வைத்து ஈரான் தாக்கலாம் என்ற செய்தியும் அண்மையில் வெளியாகி பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. 

இந்நிலையில், அங்கு இப்போது இராணுவ காலவரண்கள் நிறுவப்பட்டுள்ளன. 
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்தில் யூதர்களின் ஆக்கிரமிப்பிற்கு இடமளிப்பதும், அங்கு நீண்ட காலமாகக் காலூன்ற முனைபவர்களை (சுற்றுலாப் பயணிகளை அல்ல) அங்கிருந்து அகற்ற முயற்சிக்காமல், அவர்களது பாதுகாப்புக்காக இத்தனை ஏற்பாடுகளைச் செய்வதும் ஏன் என்ற கேள்வி அங்குள்ள சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களிடையே உள்ளது. 

அறுகம்பையில் தாக்குதல் நடத்தப்படப் போவதாக சர்ச்சைகள் வெடித்த பிறகு சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் சூத்திரதாரிகளா அவர்களது திட்டம் என்ன என்பதை சட்டத்தை நடைமுறைப்படுத்துவோரே கண்டறிய வேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்படவும் வேண்டும். 

அது வேறு விடயம். ஆனால், அமெரிக்க ஜனாதிபதிக்கு எதிரான தாக்குதல் முயற்சியுடன், அறுகம்பை விவகாரத்துடன் தொடர்புபட்ட சந்தேகநர் ஒருவரது பெயர் சம்பந்தப்படுத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர் ஒருவர் கூறியுள்ளார். 
இது உண்மையென்றால் இது பாரதூரமான விடயமாகும். 

இதேவேளை, பொத்துவில், அறுகம்பை பிரதேசத்தில் பல வழிகளிலும் மெல்ல மெல்ல யூதர்கள் குடியேற்றப்பட்டு லகுகலை முதல் பாணமை வரையான நிலப்பரப்பை யூதர்கள் பெரும்பான்மையாக வாழும் பிராந்தியமாக மாற்றியமைக்கப்படுவதற்கான சாத்தியமிருப்பதான சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்டீன் கூறுகின்றார். 

இது முக்கியமான விடயமாகும். இதனை வெறுமனே ஒரு சமூகத்துடன் அல்லது சிறிய நிலப்பரப்புடன் தொடர்புபட்ட விவகாரமாக அரசாங்கம் பார்க்கக் கூடாது. 
ஏனெனில், யூதர்களின் ஆக்கிரமிப்பு உத்திகள் மற்றும் நகர்வுகளால் உலகத்தில் ஏற்பட்ட இழப்புக்கள் பற்றி அரச இயந்திரம் அறியாதிருக்க முடியாது. அத்துடன், வீதியால் போகின்ற ஓணானை ஏன் நாம் ஆடைக்குள் பிடித்துப் போட வேண்டும்?

பொத்துவிலை ஏன் ஒரு ஆபத்தான பகுதியாக நாம் வைத்திருக்க வேண்டும்?
இந்த அச்சம் அநாவசியமானதாகக் கூட இருக்கலாம். இப்படியொரு நிலைமை வராமல் கூடப் போகலாம். ஆனால், யூதர்கள் இதனை உலகில் பல இடங்களில் செய்திருக்கின்றார்கள். நில விவகாரங்களில் மட்டுமன்றி அமெரிக்கா போன்ற நாடுகளில் தீர்மானமெடுக்கும் கதிரைகளைக் கூட அவர்கள் ஆட்கொண்டுள்ளார்கள் என்பதை உலகறியும்.

அதேபோன்று, அம்பாறை மாவட்டத்திலும் நில ஆக்கிரமிப்பு 
ஏலவே நடந்துள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து அம்பாறை ஒரு தனி மாவட்டமாகப் பிரிக்கப்பட்ட போது, இப்பகுதியில் சிறுபான்மையினர் பெரும்பான்மையாக வாழ்ந்தனர். 

ஆனால், இப்போது முஸ்லிம் மக்களின் எண்ணிக்கைக்கும் சிங்களவர்களின் எண்ணிக்கைக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை. கல்லோயா திட்டம், தெஹியத்தக்கண்டிய பிரதேசத்தை உட்சேர்த்தது உள்ளடங்கலாகப் பல திட்டங்கள் ஊடாக திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் ஆட்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன.

இதனால் வெளி மாவட்டங்களைச் சேர்ந்த சிங்கள மக்கள் இங்கு வந்து நில உரிமை பெற்றார்கள் என்பதே வரலாறு. இன்று ஒட்டுமொத்த கிழக்கு மாகாணத்திலும் குறிப்பாக அம்பாறை மாவட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் காணிகள் தொடர்பான பிரச்சினைகள் முஸ்லிம்களுக்கு உள்ளன. சனத்தொகைக்கு ஏற்ப காணிகள் பிரித்தொதுக்கப்பட வேண்டும் என்ற நியதி இருந்த போதும் அது நடக்கவில்லை. 

ஆனால், அதற்கு மாறாக, லகுகல, மகாஓயா உள்ளடங்கலாகப் பல பிரதேசங்களில் சிங்கள மக்களின் எண்ணிக்கைக்கு அமையக் கொடுக்கப்பட வேண்டிய விகிதாசார அடிப்படையிலான காணிகளை விட, பன்மடங்கு காணிகள் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தொடர்ச்சியாக சிறுபான்மை சமூக ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர். 

இப்படி ஓருபுறம் சிங்கள குடியேற்றங்களாலும் அவர்களுக்கு அதிகமான காணிகனை வழங்குவதாலும் அம்பாறை மாவட்ட முஸ்லிம், தமிழ் மக்கள் மறைமுகமாக நில ஊடுருவலை எதிர்கொண்டுள்ள ஒரு சூழுலில், அறுகம்பையில் இஸ்ரேலியர்கள் நிலைகொள்வது எங்கு போய் முடியும் என்பதை சிந்திக்காமல் விட முடியாது. 

இது மிகவும் சீரியஸான விடயமாகும். இஸ்‌ரேலிய சுற்றுலாப் பயணிகள் வந்து போவதால் நாட்டு வருமானம் கிடைக்கின்றது என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆயினும், அவர்கள் இங்கே சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி கடைகளை நடத்துவதற்கும், சூட்சுமமான முறையில் கட்டிடங்களை, வழிபாட்டுத் தலங்களை நிறுவுவதற்கும் இடமளிக்க முடியாது. 

அறுகம்பையில் மட்டுமன்றி,நாட்டின் பல இடங்களிலும் நடக்கும் இவ்வகையான ஊடுருவலை பொறுப்புவாய்ந்த அரசாங்கமும் நாட்டு மக்களும் கண்டும்காணாது போல் இருப்பதும், எதிர்காலத்தில் பிரச்சினைகளை, நெருக்கடிகளை விலைகொடுத்து வாங்குவதற்கு முன்பணம் செலுத்துவதைப் போன்றதாகவே அமையும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .