2026 மார்ச் 22, ஞாயிற்றுக்கிழமை

ஈரான் ஜனாதிபதி - இந்திய பிரதமர் கலந்துரையாடல்

Freelancer   / 2026 மார்ச் 22 , மு.ப. 07:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நேற்று (21) முக்கிய ஆலோசனை நடத்தினார். அப்போது மேற்கு ஆசியாவில் அமைதி திரும்ப வேண்டும். தடையற்ற சரக்கு கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.

 போரின் எதிர்விளைவாக ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு கப்பல்கள் போக்குவரத்தை ஈரான் ராணுவம் முழுமையாக முடக்கியது. இதனால் ஆசிய நாடுகளுக்கான 85 சதவீத கச்சா எண்ணெய் போக்குவரத்து முடங்கி, எல்.பி.ஜி, எல்.என்.ஜி எரிவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தற்போதைய சூழலில் ரஷ்யா, சீனா, வடகொரியா உள்ளிட்ட நாடுகள் ஈரானுக்கு பகிரங்கமாக ஆதரவு அளித்து வருகின்றன. பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் நேரடியாக போரில் இறங்கவில்லை என்றாலும் அமெரிக்காவுக்கு மறைமுக ஆதரவு தருகின்றன.

இந்தச் சூழலில் நடுநிலையான உலகத் தலைவர்கள் இதில் தலையிட்டு சமரச பேச்சு நடத்தி போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகிறது.இது தொடர்பாக அமெரிக்க இராணுவத்தின் முன்னாள் அதிகாரி கேர்னல் டக்ளஸ் மெக்கிரிகோர் கூறும் போது,

போரை நிறுத்த இருதரப்பிலும் சமரசம் பேச இந்திய பிரதமரால் மட்டுமே முடியும்.இராணுவ, அரசியல்ரீதியாக உலகின் மிகப்பெரிய சக்தியாக இந்தியா உருவெடுத்திருக்கிறது. பிரதமர் மோடி அமைதி பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

ஐரோப்பிய, வளைகுடா நாடுகளின் தலைவர்களும் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.

இந்தச் சூழலில் கடந்த 18 ஆம் திகதி ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதி முகமது பின் ஜாயத் அல் நயான், குவைத் இளவரசர் ஷேக் சபா அல் காலித் ஆகியோருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் ஆலோசனை நடத்தினார்.

கடந்த 19 ஆம் திகதி பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரான், ஓமன் நாட்டின் சுல்தான் ஹைதம் பின் தாரிக், ஜோர்டான் மன்னர் இரண்டாம் அப்துல்லா, மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுடன் தொலைபேசி மூலம் பேச்சு நடத்தினார்.

இந்தப் பின்னணியில் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில்,

ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியனுடன் தொலைபேசியில் பேசினேன். அவருக்கு ரமலான் மற்றும் ஈரான் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தேன். இந்த பண்டிகை காலத்தில் மேற்கு ஆசியாவில் அமைதி, ஸ்திரத்தன்மை, ஒளிமயமான எதிர்காலம் அமைய இருவரும் விரும்புகிறோம்.

பிராந்தியத்தின் முக்கிய கட்டமைப்புகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களால் சர்வதேச விநியோக சங்கிலி அறுபட்டிருக்கிறது. இதனால் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்பட்டுள்ளது. தடையற்ற கடல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினேன்.ஈரானில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்புக்கு அந்த நாட்டு அரசுதொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்கிறது. அதற்காக நன்றி தெரிவித்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .