2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

குற்றவியல் நீதி ஆணைக்குழுவுக்கான அமைச்சரவை பத்திரம் இன்று

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 07 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சந்துன் ஏ ஜயசேகர

பாரியளவிலான நிதிக் குற்றங்கள், மோசடிகள், ஊழல்கள், நிதிகளைத் தவறாகப் பயன்படுத்துகின்றமைக்கு எதிராக தண்டனை நடவடிக்கைகளை எடுக்கின்ற அதிகாரங்களுடன், குற்றவியல் நீதி ஆணைக்குழுவை அரசியலமைப்புக்குள்ளானதாக மாற்றும் அமைச்சரவை பத்திரத்தை, விசேட பணிப்பொறுப்புகளுக்கான அமைச்சர் சரத் அமுனுகம அமைச்சரவையில் இன்று (07) சமர்ப்பிக்கவுள்ளார்.  

அமைச்சரவையால் ஏற்கெனவே அனுப்பப்பட்ட முன்மொழிவு வரைபை சட்டமா அதிபர் படித்துப் பார்த்ததாகவும், குற்றவியல் நீதி ஆணைக்குழுவை ஆரம்பிப்பதற்கு, நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை தேவையென்றும், அரசியலமைப்பாக்குவதற்கு, சர்வஜன வாக்கெடுப்பில் வெற்றிபெற வேண்டும் என்று ஆலோசனை வழங்கியதாக, அமைச்சர் அமுனுகம நேற்று (06) தெரிவித்துள்ளார்.  

“குற்றவியல் நீதி ஆணைக்குழு சட்டத்துக்காக சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுகளில், குற்றவியல் நீதி ஆணைக்குழுவால் விசாரணை மேற்கொண்ட பின்னர் குற்றவாளிகளாகக் கண்டுபிடிக்கப்பட்டோருக்கு தண்டனை வழங்கப்படுமென்றும், சட்டமா அதிபரால் வழங்கப்பட்ட ஆலோசனைகள் தொடர்பில் அரசாங்கம் திருப்தியடைந்துள்ளதாகவும் அவை அமைச்சரவைப் பத்திரத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும்” அமைச்சர் அமுனுகம கூறியுள்ளார்.  

எவ்வாறெனினும், முன்மொழிவு வரைபிலுள்ள உள்ளடக்கங்கள் அரசியலமைப்புக்குள் உள்ளது என உயர் நீதிமன்றம் தீர்மானித்தும் மூன்றிலிரண்டு பெரும்பான்மை மட்டுமே தேவைப்பட்டால், சர்வஜன வாக்கெடுப்புக்கு அரசாங்கம் செல்லாது என அமைச்சர் அமுனுகம தெரிவித்துள்ளார்.  

குற்றவியல் நீதி ஆணைக்குழுவை அமைப்பதற்கு பெரும்பாலான அமைச்சர்கள் ஆதரவளித்துள்ளதாக கூறப்படுவதோடு, 14 அமைச்சர்கள் ஏற்கெனவே தமது ஆதரவை அளித்துள்ளதோடு, இணை அமைச்சரவை பத்திரத்தில் கைச்சாத்திட்டுள்ளனர்.  

எவ்வாறெனினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவால் மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் விசாரணை செய்யப்பட்டு வருகின்ற நிலையில், குற்றவியல் நீதி ஆணைக்குழுவுக்குள் அது வராது கூறப்படுகின்றது.  

1971ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜே.வி‌.பி கிளர்ச்சியை விசாரணை செய்வதற்காக, முன்னாள் பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்கவின் அரசாங்கத்தால், 1972ஆம் ஆண்டு, இலங்கையில் முதன்முறையாக, குற்றவியல் நீதி ஆணைக்குழு அமைக்கப்பட்டிருந்தது. எவ்வாறெனினும், கடுமையான அழுத்தம் காரணமாக, குற்றவியல் நீதி ஆணைக்குழு சட்டத்தை, பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க விலக்கவேண்டியேற்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X