2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

தமிழகத்தில் 15 தொகுதிகளில் தேர்தல் ரத்தாக வாய்ப்பு? ரகசிய ரிப்போர்ட் பறந்தது

Editorial   / 2026 ஏப்ரல் 19 , பி.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


சென்னை: தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தேர்தல் ஆணையம், வருமான வரித்துறை மற்றும் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக வி.வி.ஐ.பி (VVIP) தொகுதிகளில் பணப்பட்டுவாடா குறித்த புகார்கள் அதிகரித்துள்ளதால், சுமார் 15 தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்ய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், பிரதான கட்சிகளான திமுக மற்றும் அதிமுக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. இதற்கிடையே, வாக்காளர்களுக்குப் பணம் கொடுக்கும் விவகாரமும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒரு வாக்குக்கு ₹1,000 முதல் ₹2,000 வரை வழங்கப்படுவதாகவும், நட்சத்திரத் தொகுதிகளில் இந்தத் தொகை ₹5,000 வரை அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, போடிநாயக்கனூர் போன்ற முக்கியத் தொகுதிகளில் ஒரு வாக்குக்கு ₹10,000 வரை பணப்புழக்கம் இருப்பதாகப் புகார்கள் எழுந்துள்ளன. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சியின் முக்கியப் புள்ளிகள் போட்டியிடும் தொகுதிகளில் இந்த 'வாக்கு விற்பனை' உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.

 முதற்கட்ட பணப்பட்டுவாடா ஏற்கனவே முடிந்துள்ள நிலையில், பலவீனமான பகுதிகள் எனக் கண்டறியப்பட்டுள்ள இடங்களில் இரண்டாம் கட்ட விநியோகத்திற்காகப் பிரதான கட்சிகள் திட்டமிட்டுள்ளன. வரும் 21-ம் தேதி இரவு இந்தப் பணத்தை விநியோகிக்க ரகசிய ஆலோசனைகள் நடைபெற்று வருவதாகத் தெரிகிறது. இதற்காகக் கட்சி சாரா புதிய குழுக்களை இரு தரப்பும் தயார் நிலையில் வைத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
இந்த விவகாரத்தைத் தேர்தல் பறக்கும் படையினரும், தொகுதிப் பார்வையாளர்களும் மிகத் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். ஏற்கனவே பணப்புழக்கம் அதிகமாக உள்ள தொகுதிகள் அடையாளம் காணப்பட்டு, அங்கு நடைபெறும் முறைகேடுகள் ஆவணப்படுத்தப்பட்டு வருகின்றன.

வாக்குப்பதிவுக்கு முந்தைய இரண்டு நாட்களில் நடைபெறும் பணப் பரிமாற்றங்களைக் கண்காணித்து, அதன் அறிக்கையை டெல்லியில் உள்ள தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பப் பறக்கும் படை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அதேபோல், வருமான வரித்துறையினரும் ரகசியமாகத் தகவல்களைச் சேகரித்து தேர்தல் ஆணையத்திற்குத் தெரிவித்து வருகின்றனர்.

சுமார் 15 முக்கியத் தொகுதிகள் தேர்தல் ஆணையத்தின் நேரடி கண்காணிப்பில் உள்ளதால், அங்கு தேர்தல் ரத்து செய்யப்படலாம் என்ற அச்சம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .