R.Maheshwary / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 02:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு முன்பாக, தேர்தல் முறைமை என்பது கட்டாயமாக மாற்றப்பட வேண்டும் என, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
மட்டக்களப்பில் நேற்று (31) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் இதனை தெரிவித்தார்.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் அமரர் தந்தை செல்வாவின் 123ஆவது ஜனன தின நிகழ்வுகள், மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா பூங்காவில் உள்ள அன்னாரது சிலையருகில் நேற்று (31) காலை நடைபெற்றது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தந்தை செல்வாவின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு, மலரஞ்சலி, மௌன அஞ்சலிகளும் செலுத்தப்பட்டன.
அதனை தொடர்ந்து கட்சித் தலைவரால் தந்தை செல்வாவின் ஜனன தின சிறப்புரை நிகழ்த்தப்பட்டது.
இதன்போது தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர், “பாராளுமன்றத்தில் அரசாங்கத்தின் தீர்மானத்தின் அடிப்படையில், மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல் சட்டத்தில் திருத்தங்களை செய்யவேண்டிய தேவையுள்ளது” என்றார்.
“என்ன திருத்தம் என்பது தொடர்பான பிரேரணையை, பாராளுமன்றத்தில் அரசாங்கம் முன்வைக்கின்ற போது, அது தொடர்பில் பாராளுமன்றத்தில் எமது கட்சியின் உறுப்பினர்கள் கருத்துத் தெரிவிப்பார்கள். அவ்வாறான பிரேரணையொன்று கொண்டுவரப்படும் போது, அது தமிழ் மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் இருக்கவேண்டும்.
“அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் தீர்மானம் முன்வைக்கப்பட்டால், அது தொடர்பில் கட்சி ஆராய்ந்து, அதற்கு ஏற்றாற்போல் தீர்மானம் எடுக்கும். தேர்தல் முறைமை என்பது கட்டாயமாக மாற்றப்பட வேண்டும். முதலாவதாக மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என்ற உறுதிப்பாடு இந்த அரசாங்கத்துக்கு இருக்க வேண்டும். ஐநா மனித உரிமைகள் பேரவையில்கூட அது சொல்லப்பட்டுள்ளது.
“தேர்தல் முறையில் பல பிழைகள் காணப்படுகின்றன. எல்லை நிர்ணயம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கின்றது. எதை அரசாங்கம் முன்வைக்கப் போகின்றது என்பதை அறிந்த பின்னர், அது தொடர்பில் ஆராய்ந்து எங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவோம்” என, அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .