2026 மார்ச் 31, செவ்வாய்க்கிழமை

நடமாடும் எரிபொருள் நிலையம் முற்றுகை: 1,235 லீட்டர் டீசல் பறிமுதல்

Editorial   / 2026 மார்ச் 30 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நீண்டகாலமாக சட்டவிரோதமான முறையில் நடத்தப்பட்டு வந்த நடமாடும் எரிபொருள் நிலையம் ஒன்றை கேகாலை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் வரக்காபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாஹேன பிரதேசத்தில் முற்றுகையிட்டுள்ளனர்.

கடந்த 28ஆம் திகதி சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்ட இந்தத் தேடுதல் நடவடிக்கையின் போது, 1,235 லீட்டர் டீசல், இறைக்கும் இயந்திரம்  பொருத்தப்பட்ட டீசல் தொட்டி மற்றும் ஒரு லொறி என்பன கைப்பற்றப்பட்டதுடன், சந்தேகநபர் ஒருவரும் கைது செய்யப்பட்டு வரக்காபொல பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தோலங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கேகாலை குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையிலேயே இந்த முற்றுகை நடத்தப்பட்டது.

கொழும்பு – கண்டி பிரதான வீதியை நோக்கியுள்ள சந்தேகநபருக்குச் சொந்தமான காணியில் நிறுத்தப்பட்டிருந்த சிறிய ரக லொறி ஒன்றை அதிகாரிகள் சோதனையிட்டனர். அந்த லொறியின் பின்புறத்தில் டீசல் விநியோகத்தை எளிதாக்கும் வகையில் மீற்றருடன் கூடிய இறைக்கும் இயந்திரம் பொருத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. அங்கிருந்த டீசல் தொட்டியிலிருந்து 1,235 லீட்டர் டீசலும் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில்,  (மார்ச் 30) வரக்காபொல நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். கேகாலை பிராந்திய பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஓஷான் ஹேவாவிதாரணவின் அறிவுறுத்தலின் பேரில், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அனுருத்த பண்டாரநாயக்கவின் மேற்பார்வையில், கேகாலை குற்றத்தடுப்பு பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் சமிந்த குணரத்ன உள்ளிட்ட குழுவினர் இந்த முற்றுகையை முன்னெடுத்திருந்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .