Editorial / 2026 ஏப்ரல் 27 , மு.ப. 10:03 - 0 - {{hitsCtrl.values.hits}}

2026ஆம் ஆண்டு தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், வரும் மே 4ஆம் திகதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கையை அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். தேர்தல் முடிவுகள் எப்படி அமையுமோ என்ற பதற்றம் ஒருபுறம் இருந்தாலும், "ஆட்சி நமதே" என்ற நம்பிக்கையில் முக்கிய அரசியல் கட்சிகள், பதவியேற்பு விழாவுக்கான சுப தேதிகளைத் தங்களுக்கு நெருக்கமான ஜோதிடர்கள் மூலம் கணித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகச் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு அமைதியாக முடிந்துவிட்டது. பல தரப்பினரும் இந்த முறை வாக்குப்பதிவு சதவீதம் மிக அதிகமாக இருந்ததாகக் கூறி, இதனை 'வரலாறு காணாத வாக்குப்பதிவு' எனப் பெருமையாகக் குறிப்பிட்டு வருகின்றனர்.
இந்த முறை நடைபெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 5 கோடி 73 லட்சம் வாக்காளர்களில் சுமார் 4 கோடி 82 லட்சம் பேர் வாக்களித்துள்ளனர். இதுவரை இல்லாத அளவிற்குச் சுமார் 85 சதவீதத்திற்கும் அதிகமாக வாக்குகள் பதிவாகியிருப்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் பக்கம் வெற்றி?
அதிகளவிலான வாக்குப்பதிவு நடந்துள்ளதால், முடிவுகள் யாருக்குச் சாதகமாக இருக்கும் என்ற கணிப்புகள் பலவாறாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தேர்தலில் முதல் முறையாக நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' (தவெக) களம் இறங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. அக்கட்சிக்கு இளைஞர்கள் மற்றும் புதிய வாக்காளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாகக் கூறப்படுகிறது. இதனால், புதிய கட்சியின் வருகை திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பெரும் கட்சிகளின் வாக்கு வங்கிக்குச் சாதகமா அல்லது பாதகமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
நம்பிக்கையில் திமுக
தேர்தல் முடிவுகள் குறித்து இரு தரப்பிலும் தீவிர ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இத்தேர்தலிலும் கூட்டணி பலம் தங்களுக்கே சாதகமாக இருப்பதாக திமுக தரப்பில் பலமான நம்பிக்கை நிலவுகிறது. கடந்த முறையைப் போல அதிக இடங்களைப் பெற முடியாவிட்டாலும், குறைந்தது 130-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற முடியும் என அவர்கள் கணக்கிட்டுள்ளனர். இதன் அடிப்படையில், தேர்தல் முடிவுகள் குறித்துப் பெரிதாகப் பதற்றம் கொள்ளாமல், ஆட்சி தொடரும் என்ற நம்பிக்கையில் பதவியேற்பு விழாவுக்கான திகதிகள் குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிகிறது.
அதிமுகவின் வியூகம்
மறுபுறம், அதிமுக தரப்பிலும் அதே அளவிலான நம்பிக்கை காணப்படுகிறது. இந்த முறை ஆளுங்கட்சிக்கு எதிரான அதிருப்தி அலை அதிகமாக இருப்பதாகவும், அதன் பலன் தங்களுக்குக் கிடைக்கும் எனவும் அவர்கள் கருதுகின்றனர். மேலும், தவெக தனியாகப் போட்டியிட்டதால், சிறுபான்மையினர், மீனவர்கள் மற்றும் தலித் மக்களின் வாக்குகள் திமுகவிற்கு முழுமையாகச் செல்லாமல் பிரிந்திருக்கும் என்பது அவர்களின் முக்கிய கணிப்பாக உள்ளது. இதன் காரணமாக, இம்முறை 150-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக அதிமுகவினர் நம்புகின்றனர்.
அமைச்சர் பதவிக்கான போட்டி
இரு பெரும் கட்சிகளிலும் உள்ள முக்கிய வேட்பாளர்கள், தங்களுக்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கட்சித் தலைமைக்கு நெருக்கமானவர்களைச் சந்தித்துப் காய்நகர்த்தி வருகின்றனர். அடுத்த அமைச்சரவைப் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்ற நோக்கில் பலர் தீவிரமாகச் செயல்பட்டு வருவது அரசியல் வட்டாரங்களில் தற்போதைய பேசுபொருளாக உள்ளது.
காத்திருக்கும் தவெக
இதற்கிடையில், புதிய கட்சியான தவெக தரப்பினரும் தாங்களே ஆட்சி அமைப்போம் என்ற அதீத நம்பிக்கையை வெளிப்படுத்தி வருகின்றனர். இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்களின் ஆதரவு தங்களுக்குப் பெருமளவில் கிடைத்துள்ளதாக அவர்கள் கூறி வருகின்றனர்.
மொத்தத்தில், இந்தத் தேர்தல் முடிவு குறித்து மாநிலம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. யார் ஆட்சி அமைப்பார்? யாருக்கு அமைச்சர் பதவி கிடைக்கும்? போன்ற கேள்விகளுக்கான பதில்கள் அனைத்தும் மே 4ஆம் திகதி வாக்கு எண்ணிக்கை முடிவின்போது தெரியவரும். அதுவரை பொறுமையே பெருமை!
31 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2026