2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நல் ‘வழிக்கு’ சக்தி திரட்டுவேன்

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுயாதீன நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்படவுள்ளதாக அறிவித்த வண. அத்துரலியே ரத்ன தேரர், ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையைப் பெறுவதற்காக, போர்க்குற்றங்கள் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர், சிறைப்படுத்தக்கூடாது என்றும் தெரிவித்தார்.

அரசாங்கத்தை நல்வழிப்படுத்துவதற்கு தேசிய சக்தியைக் கட்டியெழுப்புவேன் என்றும் சூளுரைத்துள்ளார்.

அரசியல்ரீதியாகச் சில காலங்களுக்கு அமைதியாக இருந்த அவர், நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இக்கருத்துகளை வெளிப்படுத்தினார். ஜி.எஸ்.பி பிளஸ் சலுகையைப் பெறுவதற்கான நிபந்தனைகளில் ஒன்றாக, கலப்பு நீதிமன்றத்தை, அரசாங்கம் குறிப்பிட்டிருப்பதாகத் தெரிவித்தார். “பயங்கரவாதத்தை ஒழித்த பாதுகாப்புப் பிரிவினரை, ஜி.எஸ்.பி சலுகையைப் பெறுவதற்காகச் சிறையிலடைக்க வேண்டுமா? எங்களுக்குத் தன்னம்பிக்கை எதுவும் இல்லையா? ஆனால் இன்று நாங்கள், கலப்பு நீதிமன்றமின்றி, இந்த வசதியைப் பெற்றுள்ளோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பாக இலங்கை மீதான ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்துக்கு, இலங்கை ஆதரவு தெரிவித்தமையை, அவர் விமர்சித்தார்.

“போர்க்குற்றங்கள் இடம்பெற்றுள்ளன எனவும் அவற்றை நாம் வெளிப்படையாக விசாரிக்க வேண்டுமெனவும், ஐ.நா தீர்மானம் தெரிவிக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார். அத்தோடு ஐ.நாவுக்கான ஐ.அமெரிக்க, இந்தியத் தூதுக்குழுக்களைத் தனக்குத் தெரியுமெனக் கூறிய தேரர், அவர்களிடமிருந்து அதிகளவிலான அழுத்தம் கிடைத்திருக்கவில்லை என்றும் குறிப்பிட்டார். அத்தோடு, எல்லா யுத்தங்களும் கோரமானவை எனவும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் சர்வதேச சமூகத்திடம், இலங்கை கூறியிருக்க வேண்டுமென, அவர் மேலும் குறிப்பிட்டார்.

“தேசிய நல்லிணக்கத்துக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்பதை, சர்வதேச சமூகத்திடம், இலங்கை அறிவிக்க வேண்டும். எந்தப் பிரஜையினதும் உரிமைகளை நாங்கள் தடுக்கவில்லை, அத்தோடு ஜனநாயக, நாகரிக நாடு என்ற அடிப்படையில், அனைத்து மக்களினதும் மனித உரிமைகளை நாம் மதிப்பதை உறுதி செய்வோம்” என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, அரசாங்கம் குறித்துக் கருத்துத் தெரிவித்த தோர், நிறைவேற்று அதிகாரத்தைக் குறைத்தல், புதிய தேர்தல் முறையை அறிமுகப்படுத்தல், தேசிய கொள்வனவு ஆணைக்குழுவையும் கணக்காய்வு அறிக்கையும் நிறுவுதல் உட்பட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு, அரசாங்கம் தவறிவிட்டது என்று குறிப்பிட்டார்.

அரசியலமைப்புச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்துவதற்கான ஆணை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கிடையாது என்று அவர் குறிப்பிட்டார். “நாட்டுக்குத் தடங்கலாக உள்ள தற்போதைய அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கு நாங்கள் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம். விரிவான தேசிய சபையொன்றை நாம் நிறுவுவோம். அது, “பிவிதுரு ஹெட்டக் உதேஷ ஜாதிக சபாவ”வின் விரிவுபடுத்திய ஒன்றாக இருக்கும். அது, அரசாங்கத்தை நல்வழிக்கு வழிகாட்டி, அதன் வாக்குறுதிகளை நிறைவேற்ற வைக்கும். அரசியல் போக்குகள் என்னவாக இருந்தாலும், அரசியல்வாதிகளையும் அறிஞர்களையும், இதில் எம்மோடு இணையுமாறு நாம் அழைக்கிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

அடுத்து இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில், குறித்த தேசிய சபை போட்டியிடாது எனத் தெரிவித்த அவர்,

எனினும் அடுத்த ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக, தேவைப்படுமாயின் முடிவொன்றை எடுக்குமெனத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சியில் இணையும் திட்டம் தனக்குக் கிடையாது என உறுதிப்படுத்திய அவர், எனினும் ஹம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவுக்குக் குத்தகைக்கு வழங்குவது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த போது, அது மோசமானதும் பாரியளவிலானதுமான குற்றம் என்று குறிப்பிட்டார்.

கடந்த சில மாதங்களில் பொலன்னறுவை, உடவளவ, ஏனைய கிராமப் புறங்களுக்குச் சென்ற தான், சேதனப் பயிர்களைப் பயிரிடுவதற்கான தனது பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .