2025 ஜூலை 09, புதன்கிழமை

புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2018 நவம்பர் 17 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, புத்தளம் மக்கள் இன்று காலை முதல் ரயில் பாதையை மறைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சர்வமத தலைவர்களின் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புத்தளம் வான் சந்தியில் இருந்து ஊர்வலமாக மணல்குன்று ஜிஹாத் பள்ளிக்கு அருகாமையில் உள்ள ரயில் கடவை வரை நடந்து சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள், பின்னர் ரயில் பாதையை மறைத்து மறியல் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இதனால், அருவக்காடு பகுதியில் இருந்து பாலாவி சீமெந்து தொழிற்சாலைக்கு சுண்ணாம்புக்கல்லை ஏற்றிச் செல்லும் ரயில் போக்குவரத்தும் தடைப்பட்டன.

கொழும்பு குப்பைகளை புத்தளத்தில் கொட்டும் அரசாங்கத்தின் திட்டங்களை உடனடியாக கைவிடுமாறு கோரி புத்தளத்தில் 50ஆவது நாளாக சுழற்சி முறையிலான சத்தியாக்கிரக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில், கொழும்பில் இருந்து புத்தளத்துக்கு கொண்டுவரப்படும் குப்பைகளை புத்தளம் இன்சீ சீமெந்து தொழிற்சாலைக்குச் சொந்தமான பாரிய குழிகளில் கொட்டுவதற்காக செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை உடனடியாக இரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஆண்கள், பெண்கள், வயோதிபர்கள் மற்றும் சிறுவர்கள் என பெரும் எண்ணிக்கையிலானோர் ரயில் பாதையில் அமர்ந்துகொண்டு தமது எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

கொழும்பு குப்பைகளை புத்தளம் - அருவக்காட்டு குழிகளில் கொட்டுவதற்கு பல மில்லியன் அமெரிக்க டொலருக்கு மக்களின் எதிர்காலத்தையும், சூழலையும் விற்க வேண்டாம் எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

இதன்போது, புத்தளம் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நானயக்கார, புத்தளம் தலைமையக பிரதான பொலிஸ் பரிசோதகர் அநுர குணவர்தன தலைமையிலான பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தந்தனர்.

அத்துடன், கலகம் தடுக்கும் பொலிஸ் குழு தயார் நிலையில் காணப்பட்டனர். அத்தோடு, புத்தளம் பொலிஸ் புலனாய்வு, விமானப்படை புலனாய்வு பிரிவு, இராணுவ புலனாய்வு பிரிவு, கடற்படை புலனாய்வு பிரிவு, பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவு, தேசிய புலனாய்வு பிரிவு ஆகியோரும் கலத்தில் குவிக்கப்பட்டனர்.


இதேவேளை, ரயில் பாதையை மறைத்து போராட்டம் நடத்தியவர்களுடன், சம்பவ இடத்துக்கு வருகை தந்த புத்தளம் உதவி பொலிஸ் அத்திட்சகர் நானயக்கார கலந்துரையாடினார். இதன்போது, பொலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கொழும்பு குப்பைகளை புத்தளம் அருவக்காட்டுப் பகுதியில் கொட்டுவதற்கு மில்லியன் கணக்கில் பணத்தை வாங்கிவிட்டு அனுமதி வழங்கிய இன்சீ (INSEE) சீமெந்து தொழிற்சாலை அலுவலக பிரதானிகள் இங்கு வருகை தந்து உத்தரவாதம் தரும் வரை இந்த இடத்தை விட்டு போகமாட்டோம் என போராட்டக்காரர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இதேவேளை, சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடினார்.

குப்பை பிரச்சினை தொடர்பில் தானும், முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனும் சந்தித்துப் பேசியதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், இந்தப் பிரச்சினை தொடர்பில் மக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே உயர்மட்ட கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்து தருவதாகவும் ௯றினார்.

இதேவேளை, மக்களின் விருப்பத்துக்கு மாறாக இந்த திட்டம் முன்னெடுக்க தான் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் இதன்போது ௯றினார்.

இதேவேளை, ஆர்ப்பாட்டக்காரர்களின் வேண்டுகோளையடுத்து, இன்சீ சீமெந்து தொழிற்சாலை அதிகாரிகள் சிலர் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர்.

எனினும், வருகை தந்த அதிகாரிகளின் கருத்துக்கள் தொடர்பில் தமக்கு பூரண திருப்த்தி இல்லை எனவும் உயர் அதிகாரிகளை அழைத்துக்கொண்டு வருமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த அதிகாரிகளிடம்  தெரிவித்து திருப்பி அனுப்பியதுடன், தமது போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .