R.Maheshwary / 2021 மார்ச் 29 , மு.ப. 04:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
அராஜகத்துக்கு அடிபணிய, தலைமைத்துவம் தயாரில்லை. அடிமைத்தனத்தோடு எவரும் விடயங்களைக் கையாளக் கூடாதெனத் தெரிவித்துள்ள ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், 'நான் மிகவும் பொறுமையோடு இருக்கின்றேன்' என்றார்.
'இளைஞர்களாகிய நீங்கள், கட்சித் தலைமையின் மீது நம்பிக்கை வைத்திருக்கின்ற வரையில்தான் நானும் இந்தக் கட்சியில் இருப்பேன். இந்த இயக்கத்தைக் காட்டிக் கொடுப்பதற்காக, நான் இந்தப் பதவிக்கு வரவில்லை' என்றார்.
'இந்தக் கட்சி, பலரை அலங்கரித்து இருக்கின்றது. ஆனால், சிலர் கட்சியை அலங்கரித்து இருக்கின்றார்கள். அதில் ஒருவர் தான் ரவூப் ஹக்கீம்' எனப் பெருந்தலைவர் அஷ்ரப் கூறியிருந்தார். எனக்கு நெருக்கடி வருகின்ற போதெல்லாம், தலைவரது இந்தக் கூற்றை நினைவுப்படுத்திக் கொள்வேன் என்றார்.
சம்மாந்துறையில் சனிக்கிழமை (27) இடம்பெற்ற ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அங்குள்ள இளைஞர் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில் கூறியதாவது,
இன்றைய ஆட்சியாளர்கள் நடந்து முடிந்த பல சம்பவங்களை வைத்து, எமது சமூகத்தை மிகப் பெரிய பிரச்சினைகளுக்குள்ளும் துன்புறுத்தல்களுக்குள்ளும் தள்ளியிருப்பதைக் கண்டுவருகின்றோம். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் இடம்பெறும் வரையில், இத்தாக்குதலை முன்னெடுத்த கும்பல் யாரென்பது எவருக்கும் தெரிந்திருக்கவில்லை.
ஆன்மீக தீவிர இயக்கமாக, ஒரு கும்பல் செயற்படுகின்றது என்று ஆங்காங்கே பேசப்பட்டு வந்த போதிலும், வெளியில் எதுவுமே பெரியளவில் தெரியவில்லை. அதனை விசாரிப்பதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்து, அதனது அறிக்கையை முன்னிறுத்தி, பாராளுமன்றத்தில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
உண்மை நிச்சயம் ஒரு நாள் வெளிக் கொண்டுவரப்படும். எமது சமூகத்தை வேண்டுமென்றே பழிவாங்குவதற்காகக் கட்டவிழ்க்கப்பட்ட நிகழ்வே இதுவாகும். எமது சமூகத்தையும் கத்தோலிக்க சமூகத்தையும் மோதவைக்கின்ற வேலையை எதற்காக செய்ய வேண்டும்? இதற்கு முன்னர் இந்நாட்டில் இடம்பெற்ற பயங்கரவாதச் சம்பவங்களும் அரசியல் நோக்கத்துக்காக முன்னெடுக்கப்பட்டவையேயாகும். முஸ்லிம் சமூகத்துக்குள் நுழைந்து அனைத்து விடயங்களிலும் கைவிட்டு பார்க்க ஏதுவாக இவ்விடயத்தை கையாண்டுள்ளார்கள்.
'கட்சி தலைவருடைய நம்பகத்தன்மையை இலக்குவைத்து இன்று கட்சிக்குள் இருந்தே நிறையப் பேர் தங்கள் பக்க நியாயங்களை முன்வைப்பது போல நேரடியாகத் தலைமையை மலினப்படுத்துவது மாதிரி பல விடயங்களைப் பேசி வருகின்றார்கள். ஆட்சியாளர்களை திருப்திப்படுத்துவதற்காக கதைப்பதற்கும் ஓர் அளவு இருக்கின்றது.
எங்களுடைய ஜனாஸாக்கள் எரிக்கப்படுகின்ற போது, இந்த ஆட்சியாளர்களின் அநியாயத்தைப் பற்றி, இந்தச் சமூகமே அங்கலாய்த்துக் கொண்டிருந்தபோது, அதற்கான தீர்வு இவ்விடயம் சர்வதேச மயப்படுத்தப்பட்டு, இஸ்லாமிய நாடுகள் தலையிட்டமையாலும், ஜெனீவாவில் இந்த அரசாங்கத்துக்கு நெருக்கடி வந்தததால் வேண்டா வெறுப்பாக ஜனாஸா விவகாரத்துக்கு அரசாங்கம் இடமளித்தது.
'ஆட்சியாளர்களின் போக்குகளை நான் நன்கறிந்தவன். கட்சியைக் கொண்டு சென்று நீதிமன்றத்தில் நிறுத்தியவர்களும் இருக்கின்றார்கள். ஆட்சியாளர்களுடன் முஸ்லிம் காங்கிரஸ் தேவையில்லாமல் முரண்பட்டதில்லை. ஆனால், அவர்களது எடுப்பார் கைப்பிள்ளையாக முஸ்லிம் காங்கிரஸ் ஒருபோதும் இருக்கமாட்டாது. இந்த நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேறுகின்ற இந்த அராஜகத்துக்கு ஒருபுறம் சர்வதேசத்தையும் மறுபுறத்தில் சிறுபான்மை சமூகங்களையும் வைத்துக் கொண்டு, இவற்றுக்கு முகம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். எனவேதான், அரசியலில் புதிய வியூகங்களை வகுப்பதற்கான சிந்தனையில் இருக்கின்றோம். எங்களுக்குள் மிக சில்லறைத் தனமான, அற்பத்தனமான கதைகளை விட்டுவிட்டு உள்ளச்சத்துடன் யதார்த்தத்தைப் புரிந்து செயற்படுவோம் என்றார்.
18 minute ago
32 minute ago
42 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
32 minute ago
42 minute ago
47 minute ago