Freelancer / 2026 ஏப்ரல் 09 , பி.ப. 10:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
'டிட்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களைப் பாதுகாப்பான இடங்களில் மீளக் குடியேற்றும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதால், அவற்றை இலகுபடுத்தும் நோக்கில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (09) அன்று நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு மற்றும் முப்படைகள் சட்டத்தின் ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:
"முப்படையினருக்காக விசேட நன்மைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. அவர்களுக்கான பயிற்சிச் செலவுகளைக் குறைக்கும் வகையில், ஓய்வுக்காலம் முடிவடைந்த பின்னரும் திறமையானவர்கள் மேலும் ஐந்து ஆண்டுகளுக்குத் தமது சேவையைத் தொடரக்கூடிய வகையில் சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலையை மேலும் நீடிக்க வேண்டிய அவசியம் காணப்படுகின்றது. கடந்த நவம்பர் 28ஆம் திகதி ஏற்பட்ட 'டிட்வா' சூறாவளி அனர்த்தத்தினால் 22 இலட்சம் மக்கள் பாதிக்கப்பட்டனர். அவர்களை மீளக் குடியேற்றி, இயல்பு நிலைக்குக் கொண்டு வரும் பணிகள் இன்னும் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நடவடிக்கைகளை அதிகாரிகளுக்கு வசதியான முறையிலும், தடையின்றியும் முன்னெடுக்கவே அவசரகாலச் சட்டம் நீடிக்கப்படுகிறது.
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கியிருக்கும் 29 பாதுகாப்பு முகாம்கள் தொடர்ந்தும் இயங்கி வருகின்றன. இது தொடர்பாகப் பலமான வேலைத்திட்டங்களை ஜனாதிபதி முன்வைத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவையான நிதி மற்றும் உதவிகள் வழங்கப்படுவதுடன், வீடமைப்புப் பணிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளன. மீண்டும் மண்சரிவு ஏற்படாத பாதுகாப்பான இடங்களில் மக்களைக் குடியேற்றுவதே எமது நிரந்தரத் தீர்வாகும். முழுமையாகச் சேதமடைந்த 5,866 வீடுகளுக்குப் பதிலாகப் பாதுகாப்பான நிலங்களை அடையாளம் கண்டு, நிதி உதவி வழங்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது.
தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் எரிபொருள், மின்சாரம் மற்றும் எரிவாயு விலை உயர்வு போன்ற நெருக்கடிகள் காணப்படுகின்றன. இருப்பினும், இத்தகைய இக்கட்டான காலப்பகுதியில் மக்களுக்காகச் செயல்படுத்த வேண்டிய திட்டங்களை ஜனாதிபதி முன்னெடுத்துள்ளார். இதற்காக 100 பில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களைப் பார்க்கும்போது, நிலமையின் தீவிரத்தை அவர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை என்றே தோன்றுகிறது. ஆனால், மக்களின் அரசாங்கம் என்ற ரீதியில் மக்களுக்கான பணிகளை நாம் தொடர்வோம்" என்றார்.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago