Freelancer / 2026 ஏப்ரல் 10 , மு.ப. 03:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், அன்று அரங்கேற்றப்பட்ட 'மலட்டுக் கொத்து' மற்றும் 'மலட்டுச் சத்திரசிகிச்சை' போன்ற இனவாத நாடகங்களின் புதியதொரு தொடரே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சாடினார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் என சரத் வீரசேகர தெரிவித்த கருத்துகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:
"பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா ஆகியோரை உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளாகச் சித்திரிக்க ஒரு தரப்பினர் முயற்சிக்கின்றனர். அன்று டாக்டர் ஷாபி உள்ளிட்ட குடும்பத்தினருக்கு 'மலட்டுச் சத்திரசிகிச்சை' என்ற பெயரில் இழைத்த துயரங்களையும் அவமானங்களையும் நாம் இலகுவாக மறந்துவிட முடியாது. இத்தகைய இனவாதச் செயல்களில் ஈடுபட்டவர்களே, இன்று தமது அரசியல் தேவைகளுக்காக முஜிபுர் ரஹ்மானைப் பிரதான சூத்திரதாரியாகப் பெயரிட்டுள்ளனர்.
2020ஆம் ஆண்டு மக்கள் ஆணையைப் பெற்று ஆட்சியை அமைத்தபோது, பொலிஸ் அமைச்சராகப் பதவி வகித்த சரத் வீரசேகர, முஜிபுர் ரஹ்மானுக்கு எதிராக அன்று எடுத்த சட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்புகிறேன். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கைது செய்வோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், முஜிபுர் ரஹ்மானுக்கு 'ஐ.எஸ்' (IS) பயங்கரவாத அமைப்புடன் தொடர்பிருப்பதாக இன்று கூறுகின்றனர். அத்தகைய பெயர்கள் விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் இடம்பெற்றிருந்தால், அன்று ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக வெளியிடப்பட்ட புத்தகம் குறித்த விமர்சனத்தால் ஏற்பட்ட கோபத்தின் விளைவாகவே, இச்சமயம் இத்தகைய நாணயமற்ற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
முஜிபுர் ரஹ்மான் நாட்டின் நலனுக்காகப் பல்வேறு துறைகளில் நிபுணத்துவமான கருத்துக்களை முன்வைக்கும் ஒரு மக்கள் தலைவர். அவரை இலக்கு வைத்து, மீண்டும் ஒருமுறை இனப்பிரிவினையை உருவாக்க முயற்சிப்பது கண்டிக்கத்தக்கது. இத்தகைய அடிப்படைவாதம் நாட்டிற்குப் பொருத்தமற்றது. பௌத்த தர்மத்திற்கு அமைய, இன மத பேதமின்றி சமூகங்களுக்கிடையே ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் கத்தோலிக்க மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் மட்டுமல்லாது, ஒட்டுமொத்த நாட்டு மக்களுமே பாதிக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்குவது என்பது உண்மையை அறிந்துகொள்வதன் மூலமே அமைய வேண்டுமே தவிர, அரசியல் அடையாளத்தைக் காக்கும் வகையில் இருக்கக்கூடாது. இனவாதத்தை அடிப்படையாகக் கொண்டு நாட்டை அழிக்கும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்," என சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
6 hours ago