2025 ஜூலை 09, புதன்கிழமை

மாணவர்களை மீட்க விசேட வேலைத்திட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 19 , பி.ப. 03:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை மாணவர்களை போதைப்பொருள் பாவனையிலிருந்து தடுப்பதற்காக,  பாடசாலை சமூகத்தை நேரடியாக ஊக்குவிக்கவும், தவறான புரிந்துணர்வின் காரணமாக போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகியுள்ள மாணவர்களை அதிலிருந்து விடுவித்து,  அனைத்து பாடசாலைகளையும் போதைவஸ்துகளில் இருந்து விடுப்பட்ட  பாதுகாப்பான சூழலாக மாற்றுவதை  நோக்காகக் கொண்டு, போதைப்பொருள் பாவனையை தடுக்க, விசேட கூட்டு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கல்வி அமைச்சும், பொலிஸ் திணைக்களமும், அபாயகர ஒளடத கட்டுப்பாட்டு தேசிய சபையும் ஒன்றிணைந்து, இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இதன்பிரகாரம்,  முதற்கட்டமாக, அதிகளவு போதைப்பொருள் விநியோக மற்றும் பாவனை நடவடிக்கைகள்,  மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலேயே இனங்காணப்பட்டுள்ளது. இதன்படி, மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்திலுள்ள  49 பாடசாலைகளை இலக்காகக் கொண்டு 'பாதுகாப்பான நாளைய தினம்' என்ற தொனிப்பொருளின் கீழ், விசேட வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்வு,  கல்வி அமைச்சில் நேற்று முன்தினம் (18)நடைபெற்றது.

இங்கு,  மேல் மாகாண பிரதிப்  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கருத்து தெரிவிக்கையில்,

இலங்கை சனத்தொகையில் 18 வயதுக்கு  குறைந்த ஆண் பிள்ளைகள் 293,826 பேர் ஏதாவதொரு போதைப்பொருள் அல்லது மதுபானங்களை பாவனைக்கு உட்படுத்துகின்றனர். மேலும்,  18 வயதுக்கு  குறைந்த பெண் பிள்ளைகள் 2,046 பேர் ஏதாவதொரு போதைப்பொருள் அல்லது மதுபானங்களை பாவனைக்கு உட்படுத்துவதாக,  தகவல்கள் கிடைத்துள்ளன என்றார்.

இதன்படி,  பாடசாலை மாணவர்களுக்கிடையில்  போதைப்பொருள் பாவனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய குற்றச்செயல்களில் ஈடுப்பட்டமை தொடர்பாக,  பொலிஸ் திணைக்களத்துக்கு கிடைக்கபெற்ற தகவல்களின் பிரகாரம், 2018 ஆம் ஆண்டில், 18 வயதுக்கு குறைந்த 3,455 மாணவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 25 பேர் 14 வயதுக்கு குறைந்தவர்கள் என்றார்.

அதேபோன்று,  2018 புள்ளிவிபர தரவுகளின்படி, இலங்கையின் முழு சனத்தொகையில்,  59,75,607 பேர் ஹெரோய்ன், கஞ்சா,  போதை மாத்திரைகள், சிகரெட் போன்ற ஏதாவதொரு போதைப்பொருள்களை பாவனைக்கு உட்படுத்துகின்றனர். அவர்களில்,  மேல் மாகாணத்தில் மாத்திரம் 18,52,572 பேர் மேற்குறிப்பிட்ட ஏதாவதொரு போதைப்பொருளை பாவனைக்கு உட்படுத்துவதாக,  தகவல்கள் கிடைத்துள்ளன.  இதன்பிரகாரம்,  நாட்டின் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில், மேல் மாகாணத்தில் போதைப்பொருள்களை பாவனைக்கு உட்படுத்துவோரின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகும் என்றார்.

போதைப்பொருள் பாவனையால் பாலியல் ரீதியான பலம் அதிகரிக்கும் என்பது முற்றிலும் தவறான கருத்தாகும். இது விஞ்ஞான ரீதியாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே,  போதைப்பொருள் பாவனை தொடர்பாக சரியான தகவல்கள் மாணவர்களுக்கு வழங்குவதுடன், மாணவர்களை கண்காணிப்பதற்கு,  பாடசாலை மட்டத்தில் அதிபர்களின் ஊடாக பெற்றோர், பழைய மாணவர்கள் மத்தியில்  ஆர்வம் கொண்ட பிரதிநிதிகளை நியமித்து,  பொலிஸ் திணைக்களத்தின் ஊடாக பயிற்சி வழங்கவும்,   ஒரு பாடசாலைக்கு ஒரு பொலிஸ் அதிகாரி வீதம் நியமித்து குறித்த வேலைத்திட்டத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அத்துடன்,  பாடசாலை வளாகத்தில் போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனை போன்ற நடவடிக்கைகள் இடம்பெற்றால், அது தொடர்பில் பொலிஸ் திணைக்களத்துக்கு  தகவல் வழங்க  துரித தொலைபேசி இலக்கமும்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய,  0777128128 என்ற தொலைபேசி இலக்கதுடன் தொடர்புகொண்டு,  இது தொடர்பான தகவல்களை வழங்க முடியும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .