Editorial / 2026 மே 10 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஆர்.லெம்பேட்
மன்னார் - முள்ளிக்குளம் வழித்தடத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து ஒன்று, முன்னறிவித்தல் இன்றி சேவையை இடைநிறுத்தியமை மற்றும் பயணிகளுடன் குறித்த பேருந்தின் நடத்துனர் முரண்பட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளுக்காக, அதன் உரிமையாளருக்கு தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் மேலும் தெரிவித்துள்ளதாவது:
"குறித்த தனியார் பேருந்து முன்னறிவிப்பு ஏதுமின்றித் தனது சேவையைப் புறக்கணித்தமையால், அந்த வழித்தடத்தைப் பயன்படுத்தும் பொதுமக்கள் வீதிகளில் நீண்டநேரம் காத்திருந்து பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியிருந்தனர். அத்துடன், சேவை புறக்கணிப்புத் தொடர்பில் கேள்வி எழுப்பிய பயணிகளுடன், குறித்த பேருந்தின் நடத்துனர் முறையற்ற விதத்தில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தி முரண்பட்டுள்ளார்.
இது குறித்துப் பாதிக்கப்பட்ட பயணிகளால் அதிகார சபைக்குக் கொண்டுவரப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில், போக்குவரத்து அதிகார சபையூடாகத் துரித விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன. விசாரணையின் முடிவில், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் விதிமுறைகளை மீறிப் பயணிகளுக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் சேவையைத் துஷ்பிரயோகம் செய்தமை ஆகிய குற்றங்களுக்காக, குறித்த தனியார் பேருந்துக்கு 4,000 ரூபாய் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.
மேலும், இனிவரும் காலங்களில் பயணச் சேவையின்போது இவ்வாறான பொறுப்பற்ற செயற்பாடுகளில் ஈடுபட்டால், குறித்த பேருந்தின் சேவை அனுமதிப்பத்திரம் (Route Permit) முற்றாக ரத்து செய்யப்படும் எனவும் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது."
அதேவேளை, பொதுப் போக்குவரத்தின்போது பயணிகள் சேவையில் ஈடுபடும் தரப்பினரால் முறைகேடுகள் இடம்பெற்றாலோ அல்லது அதிக கட்டணம் அறவிடப்பட்டாலோ, பொதுமக்கள் தகுந்த ஆதாரங்களுடன் (பயணச்சீட்டு, ஒளிப்படங்கள் அல்லது காணொளிகள்) அதிகார சபையின் 071 9090900 என்ற வாட்ஸ்அப் (WhatsApp) இலக்கத்திற்கு உடனடியாகத் தெரியப்படுத்த முடியும் என அதிகார சபை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
9 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 May 2026
16 May 2026
16 May 2026